ஊட்டி:ஊட்டியில் கோவில் சொத்துகளை அனுபவிப்பவர்கள் 14 லட்சம் ரூபாய் வரை குத்தகை மற்றும் வாடகை பாக்கி வைத்துள்ளனர்.
ஊட்டி மாரியம்மன் கோவில், அதன் கட்டுப்பாட்டில் லோயர் பஜார் சுப்ரமணியசாமி,
இரட்டை பிள்ளையார் கோவில்கள் உள்ளன. தவிர, ஆஞ்சநேயர், எல்க்ஹில்
பாலதண்டாயுதபாணி, வேணுகோபால் சுவாமி, மூவுலகரசியம்மன் கோவில்களும் இந்து
சமய அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ளன. மாரியம்மன் கோவிலுக்கு சொந்தமான
எட்டு நிரந்தர, 3 தற்காலி கடைகள் குத்தகை, வாடகை அடிப்படையில் தனியாருக்கு
விடப்பட்டுள்ளன.நிரந்தர கடைகள் மூலம் ஆண்டுக்கு 3 லட்சத்து 79 ஆயிரத்து 334
ரூபாய், தற்காலிக கடைகள் மூலம் 34 ஆயிரத்து 460 ரூபாய் வருமானம்
ஈட்டப்படுகிறது. பிற கோவில்களுக்கு சொந்தமான கடை, வீடு, நிலங்கள் மூலமும்
ஆண்டுக்கு சில லட்சம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது.
வாடகை பாக்கி:மாரியம்மன்
கோவிலுக்கு சொந்தமான நிரந்தர கடைகளை அனுபவித்து வருவோர் 3 லட்சத்து 15
ஆயிரத்து 390 ரூபாய், தற்காலிக கடைக்காரர்கள் 35 ஆயிரத்து 300 ரூபாய் வாடகை
பாக்கி வைத்துள்ளனர். ஆஞ்சநேயர் கோவிலுக்கு சொந்தமான கடைகளை நடத்துவோர் 6
லட்சத்து 66 ஆயிரத்து 407 ரூபாய், வேணுகோபால் சுவாமி கோவிலுக்கு சொந்தமான
கடைகளை நடத்துவோர் 2 லட்சத்து 5 ஆயிரத்து 82 ரூபாய், காந்தல் சுப்ரமணியர்
கோவிலுக்கு சொந்தமான வீடுகளில் வசிப்போர் 64 ஆயிரத்து 124 ரூபாய் வாடகை
பாக்கி வைத்துள்ளனர்.
காந்தல் மூவுலகரசியம்மன் கோவில் நில குத்தகைதாரர் 6
ஆயிரத்து780 ரூபாய், வீடுகளில் வசிப்போர் 1 லட்சத்து 17 ஆயிரத்து 173
ரூபாய் பாக்கி வைத்துள்ள நிலையில், கோவில் கஜானாவுக்கு செல்ல வேண்டிய 14
லட்சத்து 10 ஆயிரத்து 256 ரூபாய் நிலுவையில் உள்ளது.அரசாணையில் ஜவ்வு:
கோவில்களுக்கு சொந்தமான வீடு, கடை, நிலத்தின் வாடகை, குத்தகை தொகையை
மூன்றாண்டுக்கு ஒரு முறை 33.3 சதவீதம் உயர்வு செய்யப்பட்டு வந்தது; "வாடகை
உயர்வை குறைக்க வேண்டும்' என்ற மாநிலம் முழுவதிலும் உள்ள கோவில் நிலங்களை
அனுபவித்து வந்த குத்தகை, வாடகைதாரர்களின் கோரிக்கையை ஏற்று மாநில அரசு,
மூன்றாண்டுக்கு ஒரு முறை 15 சதவீதம் வாடகை உயர்வு செய்து அரசாணை
பிறப்பித்தது. "இந்த உத்தரவு ஊட்டியில் அமலுக்கு வரவில்லை' எனக்
கூறப்படுகிறது.கோவை, நீலகிரி மாவட்ட இந்து முன்னணி அமைப்பாளர் செல்வகுமார்,
மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள மனுவில், கூறியுள்ளதாவது:மாநில இந்து
சமய நலத்துறை குறிப்பிட்டுள்ள வாடகை, குத்தகை தொகை ஊட்டியில்
வசூலிக்கப்படுவதில்லை; இதுதொடர்பான, அரசாணை தங்களுக்கு வரவில்லை, என ஊட்டி
மாரியம்மன் கோவில் செயல் அலுவலர் கூறி வருகிறார். அரசாணை வெளியிடப்பட்டு
நான்கரை ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும், ஊட்டியில் மட்டும் இந்த அரசாணை
கிடைக்கவில்லை, எனக் கூறி அரசின் சட்டத்தை பின்பற்ற காலம் தாழ்த்தும்
அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தவிர, கோவில்களுக்கு சொந்தமான
நிலம், வீடு, கடைகளை அனுபவித்து வருபவர்கள் பாக்கி வைத்துள்ள வாடகை,
குத்தகை தொகையை உடனடியாக வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு செல்வகுமார் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE