ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தை செயல்படுத்த 1
கோடியே 32 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்ட தோட்டக்கலை இணை
இயக்குனர் மோகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:ஊட்டி, குன்னூர்,
கோத்தகிரி மற்றும் கூடலூர் வட்டாரங்களில் தேசிய தோட்டக்கலை இயக்கம் 1
கோடியே 32 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்பட
உள்ளது. பரப்பு அதிகரித்தல் திட்டத்தின் கீழ், கூடலூர் வட்டாரத்துக்கு
வாசனை திரவி பயிர்களுக்கு, அதாவது இஞ்சி சாகுபடி செய்ய எக்டருக்கு 12,500
ரூபாய் மானியம் வழங்கப்பட உள்ளது.இதில், 7,500 ரூபாய் மதிப்புள்ள நடவு
பொருளும், 2,500 ரூபாய் நிலம் தயார் செய்தலுக்கு பணமாகவும், 2,500 ரூபாய்
மதிப்புள்ள இஞ்சி சாகுபடிக்கு தேவையான இடுபொருட்கள் வழங்க நிதி ஒதுக்கீடு
செய்யப்பட்டுள்ளது.100 எக்டர் பரப்பில் இஞ்சி சாகுபடி செய்ய மானியமாக 12.50
லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கிராம்பு, ஜாதிக்காய் மற்றும்
மிளகு பயிர் பரப்பு அதிகரித்தலுக்கு, எக்டருக்கு 20ஆயிரம் ரூபாய் மானியம்
வழங்கப்பட உள்ளது.இவ்வாண்டு 35 எக்டர் பரப்பளவுக்கு 7 லட்சம் ரூபாய்
மானியம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.நீலகிரி மாவட்டத்தில் உயர்தர பசுமை
குடில்கள் அமைக்கும் திட்டத்தின் கீழ், 25 ஆயிரம் சதுர மீட்டர்
பரப்பளவுக்கு திட்டமிடப்பட்டுள்ளது. சதுர மீட்டருக்கு 325 ரூபாய் மானியம்
வழங்கப்பட உள்ளது. 1000 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமைக்குடில் அமைக்கும்
விவசாயிக்கு 3.25 லட்சம் ரூபாய் மானியம் கிடைக்கும்.மண்புழு உரம்
தோட்டக்கலை பயிர்களுக்கு இடும்பொழுது மண்ணில் பயிர்களுக்கு நன்மை செய்யும்
பாக்டீரியா மற்றும் பூஞ்சான்களின் எண்ணிக்கை அதிகரிப்பதுடன் நோய் எதிர்ப்பு
தியுடன் பயிர்கள் நன்கு வளர்ந்து நல்ல மகசூல் கிடைக்கும்.
மண்புழு உரம் இடும் பொழுது மண்ணின் தன்மை மற்றும் நீர்பிடிப்பு தன்மை
அதிகரிப்பதுடன் விதை முளைப்பு தன்மை செடி வளர்ச்சி மற்றும் வேர் வளர்ச்சியை
அதிகரிக்க செய்யும்.நிரந்தர மண்புழு உரக் கூடாரம் அமைக்கும்
விவசாயிகளுக்கு மானியமாக 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாண்டு 5
நிரந்தர மண்புழு உரக் கூடாரத்துக்கு மானியம் வழங்கப்படும். தோட்டக்கலை
பயிர்களில் மகரந்த சேர்க்கை துணை புரிய தேனீ வளர்க்க விருப்பமுள்ள
விவசாயிகளுக்கு தேனீ பெட்டி, தேனீக்கள் மற்றும் தேன் எடுக்கும் உபகரணங்கள்
வாங்க மானியம் வழங்கப்படுகிறது. ஒரு தேனீ பெட்டிக்கு 800 ரூபாய் மானியமும்,
ஒரு தேனீ காலனிக்கு 700 ரூபாய் மானியமும், தேன் எடுக்கும் உபகரணங்கள்
வாங்க 7,799 ரூபாய் மானியமும் வழங்கப்படுகிறது.தோட்டக்கலை பணிகளை இயந்திர
மயமாக்கல் திட்டத்தின் கீழ், இயந்திரங்கள் வாங்க விவசாயிகளுக்கு 17,500
ரூபாய் மானியம் வழங்கப்படும்.எனவே, இத்திட்டங்களை பற்றி அறிய உங்கள் பகுதி
வேளாண்மை உதவி அலுவலர் அல்லது தோட்டக்கலை அலுவலரை அணுகி விரிவான விபரங்கள்
பெறலாம். மேலும், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி மற்றும் கூடலூர் பகுதியில்
அமைந்துள்ள வேளாண்மை விரிவாக்க மையங்களையோ அல்லது தோட்டக்கலை உதவி
இயக்குனர்களையோ அணுகி விபரங்களை பெற்று பயனடையலாம். இவ்வாறு மோகன்
கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE