நாமக்கல்: சுங்கச் சாவடி மையங்களில், 10 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு, மாநில லாரி உரிமையாளர் சம்மேளனம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் நல்லதம்பி நிருபர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும் உள்ள சுங்கச் சாவடி மையங்களில், 60 சதவீத சுங்கச்சாவடி மையத்தில், 10 சதவீதம் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கட்டண உயர்வுக்கு, கடும் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. இந்தாண்டு, ஏப்ரல் மாதம் முதல், மூன்றாம் நபர் இன்சூரன்ஸ் கட்டணம், 26 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. நாளை டீஸல் விலை உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டீஸல் விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், லாரித் தொழில் நடத்த முடியாத நிலை ஏற்படும்.
டீஸல் விலை உயர்த்தினால், வங்கிக் கடன் மூலம் லாரி வாங்கியவர்கள், தவணைத் தொகையை கூட திருப்பிச் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவர். மத்திய, மாநில அரசுகளின், டீஸல் மீதான வரி விதிப்பு மட்டும், 80 சதவீதம் உள்ளது. டீஸல் விலையை உயர்த்தினால், வரும் 9ம் தேதி, திருச்செங்கோட்டில் நடக்கும் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் கூட்டத்தில், தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். பஸ்களுக்கு கட்டண நிர்ணயம் செய்வதை போல் லாரிகளுக்கும், ஒரு கி.மீ.,க்கு, ஒரு டன் வீதம் வாடகை நிர்ணயம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE