குளக்கரையில் சிலைகள் கண்டெடுப்பு ஆய்வாளர்கள் புது தகவல்| district news | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குளக்கரையில் சிலைகள் கண்டெடுப்பு ஆய்வாளர்கள் புது தகவல்

Added : செப் 25, 2012
Share
தஞ்சாவூர்: திருவையாறு தாலுகாவில், குளக்கரையில் கிடந்த சமணர் மற்றும் அய்யனார் சிலைகள் பற்றி, ஆய்வாளர் தில்லை கோவிந்தராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர், பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகாவுக்கு உட்பட்ட ஆதனூரில், பெரம்பனார் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் குளக்கரையில், தலை உடைந்த சமணர் சிலை கிடப்பதாக, அடஞ்சூர் புலவர்

தஞ்சாவூர்: திருவையாறு தாலுகாவில், குளக்கரையில் கிடந்த சமணர் மற்றும் அய்யனார் சிலைகள் பற்றி, ஆய்வாளர் தில்லை கோவிந்தராஜன் தலைமையிலான ஆய்வுக்குழுவினர், பல்வேறு புதிய தகவல்களை தெரிவித்துள்ளனர்.
தஞ்சை மாவட்டம், திருவையாறு தாலுகாவுக்கு உட்பட்ட ஆதனூரில், பெரம்பனார் அய்யனார் கோவில் உள்ளது. இந்த கோவில் குளக்கரையில், தலை உடைந்த சமணர் சிலை கிடப்பதாக, அடஞ்சூர் புலவர் அரங்கசாமி தகவல் கொடுத்தார். பொந்தியாக்குளம் பஞ்., யூனியன் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர், தில்லை கோவிந்தராஜன் தலைமையில் மன்னார்குடி ராஜகோபால ஸ்வாமி அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் கண்ணதாசன், அருணாசலம் மற்றும் உமாமகேஸ்வரர் ஆகியோர், ஆதனூருக்கு கடந்த, 22ம் தேதி சென்று ஆய்வு மேற்கொண்டனர்.அப்போது, கோவில் குளக்கரையில் பத்மாசன கோலத்தில், தலைப்பகுதி சிதைந்த நிலையில், சமணர் சிலை கிடந்ததை பார்த்தனர். சமணர் சிலை, 46 செ.மீ., உயரமும், 37 செ.மீ., அகலமும் உடையது.அப்பகுதியை சேர்ந்த கிராமத்தினர் குமார், ரவி, சக்தி, மருதநம்பி ஆகியோர் உதவியுடன், அருகிலேயே கிடந்த, அய்யனார் சிலையையும் கண்டுபிடித்தனர். சிலையின் ஒரு கை மற்றும் இடுப்புக்கு கீழே உடைந்து காணப்படுகிறது.
மேலும் ஆய்வாளர்கள் கண்ணதாசன், தில்லை கோவிந்தராஜன் ஆகியோர் கூறியதாவது:சங்ககாலத்துக்கு பின், தமிழ்ச்சமூகத்தில் மாசாத்துவான், மாநாய்க்கன் என, இரு பிரிவு வணிகர்களின் வழிபாட்டு முறை நிலவியது. ஆதனூரில் கண்டெடுத்த அய்யனார் சிலையை தரைவழி வணிகர்கள் பயணத்தின் போது, வழிபட்டு இருக்கலாம். சமண மதத்தில் அய்யனாரை பிரம்மசாஸ்தா என்ற பெயரில் வழிபடுவர். இதுவே, பிற்காலத்தில் பெரம்பனார் அய்யனார் என்றானது.சமண துறவிகள் வாழ்ந்த பகுதியான செந்தலையிலிருந்து, தென்மேற்கு திசையில், நான்கு கி.மீ., தூரத்தில், சமணர் சிலை கண்டெடுக்கப்பட்ட ஆதனூர் கிராமம் உள்ளது. அதனால், இப்பகுதியில் சோழர் காலத்தில் சமண மதம் தழைத்தோங்கி இருந்ததும், சமணத்துறவிகளை சோழமன்னர்கள் மரியாதையுடன் நடத்தியதும் உறுதிப்பட்டுள்ளது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X