சென்னை : அரசு கலை கல்லூரிகளில், உடற்கல்வி இயக்குனர் பணியிடங்கள், நிரப்பப்படாததால், கல்லூரிகளில், மாணவர்களை விளையாட்டுகளில் ஊக்குவித்து, சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 62 அரசு கல்லூரிகளும், ஏழு கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இதில், இளங்கலை, முதுகலை மற்றும் ஆய்வு படிப்பு உள்ளிட்டவற்றில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர். ஒவ்வொரு கல்லூரியிலும், உடற்கல்வி இயக்குனர், உடற்கல்வி பயிற்றுனர் உள்ளிட்டோர் மாணவர்களின் ஆர்வத்தை கண்டறிந்து, அதற்கேற்ப விளையாட்டுகளில் ஊக்குவிக்கின்றனர். காலியிடங்கள் கல்லூரிகளில் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஒன்று அல்லது இரண்டு உடற்கல்வி இயக்குனர்கள் நியமிக்கப்படுகின்றனர். தற்போது, 70 இயக்குனர் பணியில், 45 பணியிடங்கள் காலியாக உள்ளன. உடற்கல்வி பயிற்றுனர் பணியிடங்களில், 10க்கும் மேற்பட்டவை காலியாக உள்ளன. பணி நிறைவு, விருப்ப ஓய்வு உள்ளிட்ட காரணங்களால் பணியிடங்களும் காலியாக உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக உடற்கல்வி இயக்குனர், பயிற்றுனர் பணியிட நியமனம் நடைபெறவில்லை. இதனால், கல்லூரிகளில், மாணவர்களை விளையாட்டுகளில் ஊக்குவித்து, சிறந்த விளையாட்டு வீரராக உருவாக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இலவச உணவு இதுகுறித்து, உடற்கல்வி இயக்குனர் ஒருவர் கூறியதாவது: கல்லூரிகளில், 500 மாணவர்களுக்கு, ஒரு உடற்கல்வி இயக்குனர் கண்டிப்பாக இருக்க வேண்டும். 20 கல்லூரிகளில் தான், உடற்கல்வி பயிற்றுனர் பணியிடங்கள் உள்ளன. அனைத்து கல்லூரிகளிலும், பயிற்றுனர் பணியிடங்களை கொண்டு வர வேண்டும். பள்ளிகளில் இருப்பது போல, கல்லூரியிலும் உடற்கல்வி வகுப்புகளை கொண்டு வர வேண்டும். தற்போது கல்லூரிகளில் காலியாக உள்ள உடற்கல்வி இயக்குனர் பொறுப்பை, பேராசிரியர் ஒருவரின் பொறுப்பில் கல்லூரி நிர்வாகம் ஒப்படைக்கிறது. பேராசிரியர்கள் வாரத்திற்கு 16 மணி நேரம் வகுப்புகளை எடுக்கின்றனர். வகுப்புகள் போக மீதி நேரத்தில் மட்டுமே, உடற்கல்வியில் கவனம் செலுத்துகின்றனர். விளையாட்டில் ஆர்வமுடையவராக பேராசிரியர் இருந்தால் தான் விளையாட்டுத் துறை சிறக்கும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து, விளையாட்டில் சிறந்து விளக்கும் மாணவர் ஒருவரை, இலவச கல்வி, ஊக்கத்தொகை கொடுத்து, தனியார் கல்லூரிகள் எடுத்துக் கொள்கின்றன. இதுபோன்ற மாணவர்களை, அரசு, ஊக்குவிக்க முன்வர வேண்டும். அரசு கல்லூரிகளில் இலவச கல்வி அளிக்க வேண்டும். விளையாட்டில் சேர்ந்து, பயிற்சி பெற்று வரும் மாணவர்களுக்கு, ஊட்டச்சத்து மிக்க உணவுகள் வழங்க, அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். விரைவில் அறிவிப்பு இதுகுறித்து, கல்லூரி கல்வி இயக்குனர் செந்தமிழ் செல்வி கூறுகையில், ""இப்பணியிடங்களை நிரப்புவதற்கான பணிகள், தற்போது விரைவாக நடைபெற்று வருகின்றன. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE