திருச்சி: வங்கியில் நடந்த கொள்ளை முயற்சி அலாரம் அடித்ததால் தோல்வியில் முடிந்தது. அதேசமயம் வங்கிக்கு அருகில் இருந்த வீட்டில், 10 பவுன் நகைகளை பனியன் கொள்ளையர் கொள்ளையடித்து சென்றனர்.
திருச்சி வயலூர் சாலையில் உள்ள நாச்சிக்குறிச்சி ராஜீவ்காந்தி நகரில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் மாலை, ஊழியர்கள் வங்கியை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர்.நள்ளிரவு, 12.50 மணியளவில் வங்கியில் இருந்து அலாரம் அடிக்கும் சத்தம் கேட்டது. அதிர்ச்சியடைந்த மக்கள், வங்கிக்கு சென்று பார்வையிட்டனர். முன்பக்க கிரில் கேட், முன்பக்கக்கதவு உடைக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து சோமரசம்பேட்டை போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். ஜீயபுரம் டி.எஸ்.பி., அழகேசன், ரோந்துப் பணியில் இருந்த திருவெறும்பூர் டி.எஸ்.பி., பழனிச்சாமி மற்றும் போலீஸார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினர்.
வங்கிக்குள் நுழைந்து, கொள்ளையர்கள் லாக்கரை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடிக்க முயன்றபோது, அலாரம் அடித்ததால், கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடி இருக்கின்றனர் என்பது தெரியவந்தது.அதையடுத்து, உறையூரில் உள்ள வங்கி மேலாளர் ராஜேந்திரனை போலீஸார் வரவழைத்தனர். வங்கியின் முன்புறம் மற்றும் உள்ளே உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டனர்.முகத்தில் பனியனால் மூடியிருந்த நபர் ஒருவர் கதவை உடைத்து வங்கிக்குள் நுழைவதும், மற்றொரு நபர், வங்கியின் வாசலில் நின்று ஆட்களை பார்த்துக்கொண்டது கேமராவில் பதிவாகி இருந்தது.
கேமரா பதிவுகளை கொண்டு பனியன் கொள்ளையரை போலீஸார் தேடுகின்றனர். வங்கி அலாரத்தினால், வங்கியில் இருந்த பல லட்சம் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணம் அதிர்ஷ்டவசமாக தப்பியது.வங்கியை முன்கூட்டியே நோட்டமிட்டவரே, இந்த செயலில் ஈடுபட்டிருக்கவேண்டும் என்ற கோணத்தில், வங்கியின் வீடியோ பதிவுகளை, ஏ.டி.எஸ்.பி., பெரேஸ்கான் தலைமையிலான போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர். தவிர, இந்த வங்கியில் இரவு நேர வாட்ச்மேன் இல்லாதது தெரிந்தே, துணிகர கொள்ளை சம்பவம் நடந்துள்ளது.10 பவுன் கொள்ளை: நாச்சிக்குறிச்சி ராஜீவ்காந்தி நகர், மூன்றாவது குறுக்குத்தெருவைச் சேர்ந்தவர் ராவணதாசன். இவரது வீட்டு மாடியில், தனியார் மருந்து கம்பெனி மேலாளர் ராமநாதன் என்பவர் குடியிருக்கிறார். அவரது மனைவி காந்திமதி, தனியார் பள்ளி ஆசிரியையாக உள்ளார்.
வேலை விஷயமாக ராமநாதன் வெளியூர் சென்றுவிட, அவரது மனைவி காந்திமதி, காலாண்டுத்தேர்வு விடுமுறை காரணமாக, இரு பெண் குழந்தைகளும் அழைத்துக் கொண்டு, மதுரையில் உள்ள தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.நேற்று முன்தினம் இரவு, ராமநாதனின் வீட்டின் பூட்டை உடைத்த கொள்ளையர், பீரோவில் இருந்த பத்து பவுன் நகைகள், 50 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். நேற்று காலை வீட்டுக்கு வந்த ராவணதாசன், கொள்ளை குறித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தார்.தப்பியது வைரம்: சம்பவ இடத்துக்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தியபோது, வங்கியில் கைவரிசை காட்ட முயன்ற பனியன் கொள்ளையர், ராமநாதன் வீட்டில் கொள்ளையடித்திருப்பது தெரிந்தது.
பீரோவில் வைத்திருந்த நகைகள் கொள்ளை போன நிலையில், "தலையணைக்கு அடியில் வைத்திருந்ததால், மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம், தோடுகள் தப்பியது' என்று, தம்பதியினர் கூறியுள்ளனர்.போலீஸார் நடத்திய முதற்கட்ட விசாரணையில், வங்கி கொள்ளையில் தோல்வியடைந்த கொள்ளையர், ராமநாதன் வீட்டில் கைவரிசை காட்டியதுக்கு அடையாளமாக, ராமநாதன் வீட்டருகே, அவர்கள் முகமூடியாக பயன்படுத்திய பனியன் கிடந்தது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE