காஞ்சிபுரம் :கோவிலுக்கு அதிக பாக்கி வைத்திருப்போர் பெயர்களை, கோவில் அறிவிப்புப் பலகையில் எழுதி வைக்கத் துவங்கியிருப்பது, பக்தர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.
தமிழகத்தில், இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 36,451 கோவில்கள் உள்ளன. புனித மடங்கள், 56 உள்ளன. கோவிலுடன் இணைந்த மடங்கள், 57 உள்ளன. ஜெயின் கோவில்கள், 17 உள்ளன. கோவிலுக்குச் சொந்தமான, 1,83,669 ஏக்கர் விளை நிலம், 2,18,226 ஏக்கர் தரிசு நிலம், 20,746 ஏக்கர் மானாவாரி நிலம் உள்ளது. இந்நிலங்கள், குறைந்த தொகைக்கு குத்தகைக்கு விடப்பட்டுள்ளன. பெரும்பாலான நிலம், ஆக்கிரமிப்பாளர்களிடம் சிக்கியுள்ளன.
பாக்கி அதிகரிப்பு:
கோவில் நிலத்தை குத்தகைக்கு எடுத்தவர்கள், முறையாக, கோவிலுக்கு வாடகை செலுத்துவதில்லை. இதனால், கோவிலுக்கு வரும் வருமானம் பாதிக்கப்படுகிறது. கோவிலில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்வது சிரமமாக உள்ளது. வாடகையை வசூலிக்க கோவில் நிர்வாகம், நடவடிக்கை எடுத்தால், சிலர் நீதிமன்றத்திற்கு சென்றுவிடுகின்றனர். சிலர் ஆளுங்கட்சியினர் உதவியை நாடுகின்றனர். இதனால், வாடகை வசூலிப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.ஆண்டுகணக்கில் வாடகை செலுத்தாமல், பல லட்சம் ரூபாய் பாக்கி வைத்திருப்பவர்களில் பெரும்பாலானோர் முக்கியப் பிரமுகர்களாக உள்ளனர். அவர்களிடமிருந்து வாடகை வசூலிப்பதற்காக, அதிக பாக்கி வைத்திருப்போரின் பெயர், அவர் செலுத்த வேண்டிய தொகை போன்ற விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கும்படி, செயல் அலுவலர்களுக்கு அறநிலையத் துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். தகவல் பலகையில் பெயர் இடம்பெற்று, பக்தர்களிடம் அசிங்கப்படுவதை தவிர்க்க, பாக்கித் தொகையை செலுத்துவர் என, இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் நம்புகின்றனர்.
பெயர் வெளியீடு:
காஞ்சிபுரத்தில் கோவிலுக்குச் சொந்தமான நிலம் மற்றும் கட்டடத்தை அனுபவித்துக் கொண்டு, லட்சக்கணக்கில் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரங்களை, கோவில் தகவல் பலகையில் எழுதி வைக்கத் துவங்கி உள்ளனர். குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், இருவருடைய பெயர் இடம் பெற்றுள்ளது. காங்கிரஸ் பிரமுகரான அரங்கநாதன், 19.61 லட்சம் ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளார். நாராயணன், 3.12 லட்சம் ரூபாய் பாக்கி வைத்துள்ளார்.இதேபோல், தமிழகம் முழுவதும் உள்ள பெரிய கோவில்களில், அறிவிப்புப் பலகைகளில் பெயர்களை எழுதி வைக்க, அறநிலையத் துறை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு, பாக்கி வைத்திருப்போர் பெயர்களை வெளியிடுவது, பக்தர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. பெயர் பலகையில் வெறும் பெயரை மட்டும் எழுதாமல், அவர்கள் என்னப் பதவியில் உள்ளனர், எந்த பொறுப்பில் உள்ளனர் என்ற விவரத்தையும் எழுதி வைத்தால், பாக்கி விரைவாக வசூலாக வாய்ப்புண்டு.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE