வடசென்னை, எண்ணூர் அனல் மின் நிலையங்களில், 16 நாட்களாக, நிலக்கரி பற்றாக்குறை இருந்து வருகிறது. "மூன்று கப்பல்கள் மூலம், 1.20 லட்சம் டன் இறக்குமதி நிலக்கரியும், 70 ஆயிரம் டன், இந்திய நிலக்கரியும், இன்றோ அல்லது நாளையோ சென்னை வந்தடையும்' என, மின்வாரிய வட்டாரங்கள் கூறுகின்றன.
அனல் மின்நிலையங்களுக்குத் தேவைப்படும் நிலக்கரியை, குறைந்தது, 15 நாள்களுக்காவது, இருப்பு வைத்திருக்க வேண்டும். ஆனால், வடசென்னை, எண்ணூர் அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான, நிலக்கரி இருப்பு, கடந்த, 16 நாளாக வெகுவாகக் குறைந்துள்ளது. தற்போது, இந்த இரண்டு அனல் மின் நிலையங்களிலும், இரு நாளுக்கு தேவைப்படும் நிலக்கரி இருப்பு உள்ளது. இதனால், மின் உற்பத்தி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. வட சென்னை அனல் மின் நிலையத்தில், 630 மெகாவாட் கொண்ட, மூன்று யூனிட்டுகளும், எண்ணூர் அனல் மின் நிலையத்தில், 450 மெகாவாட் கொண்ட, ஐந்து யூனிட்களும் உள்ளன. மின் உற்பத்திக்கு, நாளொன்றுக்கு, எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு, 5.8 டன்னும், வடசென்னை அனல் மின் நிலையத்திற்கு, 17.3 டன்னும் நிலக்கரி தேவைப்படுகிறது. அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரியை, பத்து நாட்களுக்கு மேல் இருப்பு வைக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இருப்பினும், வட சென்னை, எண்ணூர் அனல் மின் நிலையங்களில், குறைந்தப்பட்ச இருப்பைக் காட்டிலும் குறைவாக உள்ளது.
இது குறித்து, மின் வாரிய உயர் அதிகாரி கூறியதாவது: அனல் மின் நிலையங்களுக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதில், தொடர்ந்து பிரச்னை நிலவுகிறது. நெருக்கடி நிலையிலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக, தமிழக அனல் மின் நிலையங்களில், ஒரு போதும் மின் உற்பத்தி நிறுத்தப்படவில்லை. மூன்று கப்பல்கள் மூலம், 1.20 லட்சம் டன் இறக்குமதி நிலக்கரியும், 70 ஆயிரம் டன் இந்திய நிலக்கரியும், இன்றோ அல்லது நாளையோ, சென்னை வந்தடையும். நெருக்கடி நிலையிலும், மின் உற்பத்தி பாதிக்காத வகையில், தேவையான நடவடிக்கையை, மின் வாரியம் எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
தமிழகத்தின் உள்ள, அனல் மின் நிலையங்களின் மொத்த நிறுவு திறன், 2,970 மெகாவாட் ஆகும். நேற்று காலை நிலவரப்படி, 2,370 மெகாவாட் மின்உற்பத்தி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- நமது நிருபர் -
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE