நெல் பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசன முறை பலன் தருமா? : விவசாயிகள் அதிக குழப்பம்| Farmers highly confused | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

நெல் பயிர்களுக்கு தெளிப்பு நீர் பாசன முறை பலன் தருமா? : விவசாயிகள் அதிக குழப்பம்

Added : டிச 19, 2012
Share
டெல்டா மாவட்ட கலெக்டர்கள், அறிவித்து வரும் தெளிப்பு நீர் பாசனமுறைகள், நெல் பயிருக்கு பலனளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், விவசாயிகள் திடீர் குழப்பமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிரைக்காக்க, கலெக்டர்கள் வெளியிட்டு வரும் அறிவிப்பில், "பயிர்களை காக்க தெளிப்பு நீர் பாசனமுறையை மேற்கொள்வதற்காக, வேளாண் பல்கலை மூலம் விவசாயிகளுக்கு, பல்வேறு நீர் தெளிப்பான்கள்

டெல்டா மாவட்ட கலெக்டர்கள், அறிவித்து வரும் தெளிப்பு நீர் பாசனமுறைகள், நெல் பயிருக்கு பலனளிக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளதால், விவசாயிகள் திடீர் குழப்பமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பயிரைக்காக்க, கலெக்டர்கள் வெளியிட்டு வரும் அறிவிப்பில், "பயிர்களை காக்க தெளிப்பு நீர் பாசனமுறையை மேற்கொள்வதற்காக, வேளாண் பல்கலை மூலம் விவசாயிகளுக்கு, பல்வேறு நீர் தெளிப்பான்கள் வழங்கப்படும். ஏழு முதல் 10 நாட்கள் வரை தண்ணீர் தேவையை சமாளிக்கக்கூடிய உரங்கள், வேளாண் அறிவியல் மையம் மூலம், பயிர்களில் தெளிக்கப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், "சிறிய நடமாடும் நீர் தெளிப்பான்களும், தேவையான அளவிற்கு வழங்கப்படும். சம்பா பயிர்களை பாதுகாக்க தேவையான புதிய உத்திகளை விவசாயிகளுக்கு விளக்க,கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர்களின் தெளிப்பு நீர் பாசன அறிவிப்பு, டெல்டா மாவட்ட நெல் விவசாயிகள் மத்தியில், பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தண்ணீர் அதிகம் விரும்பும் பயிராக கருதப்படும், நெல்லுக்கு தெளிப்பு நீர் பாசன முறைகள் பலனளிக்குமா என்ற சந்தேகம் விவசாயிகளிடம் எழுந்துள்ளது.

இதுகுறித்து, வேளாண் ஆராய்ச்சியாளர் ஒருவர் கூறியதாவது: அதிக மகசூல் தரும் பயிர்கள், அதிக நீரை எடுத்துக் கொள்ளும் என்பது வேளாண் விதி. சொட்டுநீர், நுண்ணீர், தெளிப்பு நீர், அடுக்கு அலைநீர், வெள்ள நீர் ஆகிய பாசன முறைகளை, வேளாண் பல்கலைக்கழகம் வகுத்துள்ளது. இதில், வெள்ள பாசன முறைதான் காலம் காலமாக விவசாயிகளால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. நெல் பயிருக்கு ஏற்ற பாசனமாகவே, இது கருதப்படுகிறது. ஆனால், இந்த பாசன முறையில் நீர் ஆவியாதல் அதிகம் இருக்கும். பயிர்களுக்கு மேல், கருவிகள் மூலம் நீர் தெளித்து பாசனம் செய்வது தெளிப்பு நீர் பாசனம் எனப்படுகிறது. மலை பயிர்களான காபி, தேயிலை ஆகியவற்றிற்கு இந்த பாசனமுறை அதிகம் பயன்படுகிறது. நிலக்கடலை, பருத்தி, சோயா, உளுந்து போன்ற பயறு வகைகளுக்கும், இந்த பாசன முறை பலன் அளிக்கும். சிறிய குழாய் அமைத்து செயல்படுத்தப்படும் சொட்டு நீர் பாசனம் தென்னை, கொய்யா, மா, சப் போட்டா, வாழை, மாதுளை, எலுமிச்சை, பப்பாளி, கத்தரி, வெண் டை, தக்காளி, மிளகாய், பூசணி வகைகளுக்கு பலன் அளிக்கும். அடுக்கு அலைநீர் பாசனம் இன்னும் ஆராய்ச்சி நிலையிலேயே உள்ளது. தெளிப்புநீர், சொட்டுநீர், நுண்ணீர் பாசனம் நெல் பயிர்களுக்கு பலனிக்குமா என்பது தொடர்பான சோதனைகள், ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்த நிலையில், தெளிப்பு நீர்பாசன முறையை பயன்படுத்தி, நெல் பயிரை காப்பாற்ற முடியுமா என்பது சந்தேகம்தான். தண்ணீர் தேவையை சமாளிக்க, ஏழு முதல் 10 நாட்கள் வரை, தாங்கக்கூடிய உரம் பயன்படுத்தப்படும் என்கின்றனர். உரம் பயன்படுத்தி, 10 நாள் தண்ணீர் தேவையை சமாளித்தால், அதன்பிறகு தண்ணீர் தேவைக்காக, மீண்டும் உரத்தைப் பயன்படுத்த நேரிடும். இவ்வாறு செய்வதால், பயிர்கள் நிச்சயம் பாதிக்கப்பட்டு மகசூல் குறையும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மற்ற பயிர்களுக்கு, தெளிப்பு நீர் பாசனமுறை பலன் அளித்தாலும், நெல் பயிருக்கு பலனிக்குமா என்பது குறித்து, வெளிப்படையாக அறிவிக்காமல், வேளாண் துறையினர் மவுனம் காத்து வருகின்றனர்.
இதுகுறித்து, வேளாண் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வேர்விடும் பருவம் மற்றும் பூக்கும் பருவத்தில், நெல் பயிர்களுக்கு தண்ணீர் அதிகம் தேவைப்படும். தற்போது பயிர்கள், அதற்கு முந்தைய நிலையில் இருப்பதால், அதை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில், சொட்டுநீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கலாம்' என, தெரிவித்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X