சென்னை:"காவிரி நடுவர் மன்றத்தின், இறுதித்தீர்ப்பு விவகாரத்தில், விதண்டாவாதத்திற்கு என்ன பதில் சொல்வது' என, முதல்வர் ஜெயலலிதாவிற்கு, தி.மு.க., தலைவர் கருணாநிதி பதில் தெரிவித்துள்ளார்.
அவரது அறிக்கை: "தி.மு.க., எம்.பி., க்கள், பிரதமரைச் சந்தித்து, காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பினை உடனடியாக வெளியிட வேண்டும் என, உண்மையிலேயே வலியுறுத்தினார்களா அல்லது கேட்பது போல, ஒரு கபட நாடகமாடி, முட்டுக்கட்டை போட்டனரா என்பது, புரியாத புதிராக இருக்கிறது' என, முதல்வர் ஜெயலலிதா சாடியிருக்கிறார்.இது தி.மு.க., எம்.பி.,க்கள் மாத்திரமல்ல, பிரதமர் அலுவலகத்திற்கே களங்கத்தை ஏற்படுத்துவது போல உள்ளது. காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பை, மத்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என, பிரதமரிடம் தி.மு.க., எம்.பி., க்கள் கேட்டு, உடனடியாக அது பற்றி கவனிப்பதாக, உறுதி அளித்திருக்கிறார்.
ஆனால், ஜெயலலிதா அவருக்கே உரிய பாணியில், இதைப் பற்றியும், தனது அறிக்கையில் தவறாக குற்றஞ்சாட்டியிருக்கிறார். வாதத்திற்கு பதில் சொல்லலாம்; விதண்டவாதத்திற்கு என்ன பதில் சொல்வது?இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.