ஆந்திராவில் ரெட்டி காங்., கட்சி?| Dinamalar

ஆந்திராவில் ரெட்டி காங்., கட்சி?

Updated : நவ 02, 2009 | Added : அக் 31, 2009
Advertisement

கர்நாடகாவில் பா.ஜ.,வில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பூசலால் எப்போது எடியூரப்பா ஆட்சி கவிழும் என்று காங்கிரசார் ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஆனால், காங்கிரஸ் ஆட்சியில் உள்ள ஆந்திராவில், நிலைமை மோசமாகிக் கொண்டிருப்பதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொண்டதாகத் தெரியவில்லை.
மறைந்த ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன் மோகன் ரெட்டி முதல்வராக ஆசைப்பட்டார். மேலிடம் இதை நிராகரித்துவிட்டது. "அமைதியாக இருங்கள்' என்று ஜெகனுக்கு அட்வைஸ் செய்து அனுப்பிவிட்டார் சோனியா. ஜெகனின் ஆதரவாளர்கள் விடுவதாக இல்லை. இவருடைய ஆதரவாளரான ஒரு பெண் அமைச்சர் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார். விவகாரம் இத்தோடு நிற்கவில்லை. மேலும், பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்று ஜெகனுக்கு நெருக்கமானவர்கள் கூறுகின்றனர்.
ஆந்திர அரசியலில் ரெட்டி வகுப்பைச் சேர்ந்தவர்கள் தான் ஆதிக்கம் செலுத்துவது வழக்கம். தற்போது, முதல்வராக இருக்கும் ரோசய்யா வைஸ்யா எனப்படும் வகுப்பைச் சேர்ந்தவர். இதனால், ரெட்டியினர் இவருக்கு எதிராக உள்ளனர். ஜெகனுக்கு முதல்வர் பதவி கிடைக்காததால், ஆத்திரத்தில் உள்ள அவருடைய ஆதரவாளர்கள் விரைவில் தனிக்கட்சி தொடங்க வாய்ப்புகள் உள்ளதாகத் தெரிகிறது. இதனால், ரோசய்யா ஆட்சிக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.


பிரச்னையைக் கிளப்பும் புத்தகங்கள்

தொலைத் தொடர்பு அலுவலகத்தில் சி.பி.ஐ., நடத்திய ரெய்டு தற்போது டில்லி மற்றும் தமிழக அரசியல் வட்டாரங்களை பரபரப்பாக்கியுள்ளது. இம்மாதம் 19ம் தேதி முதல் பார்லிமென்டின் குளிர்கால கூட்டத் தொடர் துவங்குகிறது. எனவே, ஸ்பெக் ட்ரம் விவகாரம் மத்திய அரசுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க் கப்படுகிறது.

இதை சமாளிக்க ராஜாவின் அமைச்சகம் தயாராகி வருகிறது. 1996லிருந்து ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் எப்படி வழங்கப் பட்டது. அதில் பா.ஜ.,வினர் சம்பந்தப்பட்டிருப்பது அப்போது நடைபெற்ற ஊழல் என அனைத்து விவரங்களையும் ஒரு புத்தகமாக வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் நடைபெற்று வருகின்றன.


இன்னொரு பக்கம், அ.தி.மு. க., தரப்பிலும் ஒரு புத்தகம் தயாராகி வருகிறது. அ.தி.மு.க., பொதுச்செயலர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கைகள் அனைத்தும் இந்த புத்தகத்தில் இடம் பெறுகிறது. ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்டு, அனைத்து எம்.பி.,க்களுக்கும் இந்த புத்தகம், கொடுக்கப்பட உள்ளது. அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டிருக்கும் சீனியர் காங்கிரஸ் தலைவர்கள், "இதை, சபாஷ் சரியான போட்டி' என்று கமென்ட் அடிக்கின்றனர்.
முதல் பெண் கேபினட் செயலர்?

ஜனாதிபதி, சபாநாயகர் என முக்கிய பதவிகள் பெண்கள் வசம் உள்ள நிலையில், மேலும் ஒரு முக்கிய பதவி பெண்ணுக்கு கிடைக்க உள்ளது. ஆனால், இது உடனடியாக நடக்கப் போவதில்லை.


தற்போதைய கேபினட் செயலர் சந்திரசேகர் பதவி நீட்டிப்பில் உள்ளார். அடுத்த ஆண்டு ஜூன் மாதம் இவருடைய பதவிக்காலம் முடிவடைகிறது. அப்போது, ஒரு பெண்மணி கேபினட் செயலராக நியமிக்கப்படுவார் என்று பிரதமர் அலுவலக வட்டாரங்களில் கூறப்படுகிறது. சோனியாவும் அடுத்த கேபினட் செயலர் மகளிருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்.

மத்திய அரசின் கேபினட் செயலர் பதவி மிகவும் அதிகாரம் மிக்கது. அரசின் அனைத்து இலாகா செயலர்களுக்கும் தலைவராக இருப்பது தான், இந்த கேபினட் செயலர் பதவி. அமைச்சரவைக் கூட்டங்களிலும் கேபினட் செயலர் கலந்து கொண்டு, முக்கிய பங்கு வகிப்பார்.

கேரளா கேடரைச் சேர்ந்த சுதா பிள்ளை என்ற பெண் அதிகாரி தான், அடுத்த கேபினட் செயலர் என்று டில்லி அதிகாரிகள் வட்டாரங்களில் பேச்சு அடிபடுகிறது. இவர் 1972, ஐ.ஏ.எஸ்., பேட்சை சேர்ந்தவர்.

ஏமாற்றப்பட்ட தமிழ் அதிகாரிமத்திய அரசில் பணியாற்றும் சீனியர் தமிழ் அதிகாரிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், ஒரு சீனியர் தமிழ் அதிகாரியை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது.

சட்டத் துறையின் செயலராக பணியாற்றி பதவி நீட்டிப்பில் இருந்தவர் டி.கே.விஸ்வநாதன். அக்டோபர் மாதம் 31ம் தேதி ஓய்வு பெற்றார். எந்தவித பிரச்னைகளிலும் சம்பந்தப்படாத விஸ்வநாதன், ஒரு சிறந்த அதிகாரி என்று, அதிகாரிகள் வட்டாரங்களிலும், அரசியல் வட்டாரங்களிலும் பெயர் வாங்கியவர். சட்டத் துறை சம்பந்தப்பட்ட பிரச்னைகளை சுமுகமாக தீர்த்து வைத்தவர். இவருக்கு லோக்சபா செகரட்டரி ஜெனரல் பதவி வழங்கப்படும் என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. ஆனால், ஏற்கனவே அந்த பதவியில் இருந்தவருக்கு ஒரு ஆண்டு பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது."லோக்சபா பதவி போனால் பரவாயில்லை, ராஜ்யசபா செகரட்டரி ஜெனரல் பதவி கொடுக்கிறோம்' என்று சொல்லப்பட்டது. ஆனால், அதுவும் வழங்கப்படவில்லை. அங்கேயும் ஏற்கனவே இருந்த அதிகாரிக்கு ஒரு வருடம் பதவி நீட்டிப்பு கொடுக்கப்பட்டு விட்டது.

ஓய்வு பெற்ற விஸ்வநாதனுக்கு, தற்போது சட்ட அமைச்சரின் ஆலோசகர் பதவி வழங்கப்பட்டுள்ளது. செயலர் பதவிக்கு சமமான இந்த பதவியில், விஸ்வநாதன் ஒரு ஆண்டு பணியாற்றலாம். அதன் பிறகு லோக்சபா அல்லது ராஜ்யசபா செகரட்டரி ஜெனரல் பதவி இவருக்குக் கிடைக்கும் என்று அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு தமிழக அதிகாரிக்கு இப்படி செய்திருக்கக்கூடாது என்று மூத்த அதிகாரிகள் நொந்து போய் கூறுகின்றனர்.வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X