பாரதி
இந்த நூற்றாண்டின் மாபெருங்கவிஞர்.
தனது தணல் வரிகளால் மொழிக்கும்,நாட்டிற்கும் பெருந்தொண்டாற்றிய தீரர்.
தன் வார்த்தைகளுக்கும்,வாழ்க்கைக்கும் இடைவெளியில்லாமல் வாழ்ந்த வீரர்.
தன்னலம் கருதாது, சமூக நலத்தையே தனது பாடுபொருளாகக் கொண்டு, சத்தியத்தையும், நேர்மையையும், உண்மையையும் மட்டுமே துணை கொண்டு, உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை என்று பாடிய ஒப்பற்ற கவிஞர்.
இவரது கவிதை வரிகள் இன்றைக்கும் இளைஞர்களை வசீகரிக்கும் வைர வரிகள்.
இதனால்தான் சிதம்பரம் ஜெயராம் முதல் இளையராஜா வரை இவரது வரிகளை பாடல்களாக்கி அழகுபார்த்து வருகின்றனர்.
அந்த வரிசையில் இப்போது தனது இசையால், பாடலால் பாரதிக்கு ஒர் இசை அர்ப்பணம் செய்துள்ளார் கடலூர் எஸ்.ஜே.ஜனனி.
யார் இந்த ஜனனி
பதினைந்து வயதிற்குள் ஒன்றை தேர்ந்துவிடு, அதுவே உன் வாழ்க்கை என்று தெளிந்துவிடு, பின் உன் திறமைகளை அதில் ஊறவிடு, அந்த நிலையோடு பயணப்படு, இமயம் உன் இடுப்பளவு என்று பழமொழி உண்டு, அந்த பழமொழிக்கு ஏற்ப, இன்னும் சொல்லப்போனால் பதினைந்து வயதில் அல்ல ஐந்து வயதிலேயே இசையே தனது துறை என தேர்ந்தெடுத்தவர்தான் இந்த ஜனனி.
கடலூர் மேடையில் ஐந்து வயதில் அபாரமாக பாடிய ஜனனியின் திறமையை உணர்ந்து அவருக்கு தாயாகவும், மாமானாகவும் இருக்கும் தாய்மாமன் சங்கர் கணேஷ் பெரும்பாடுபட்டு ஜனனியை பட்டைதீட்டி, ஜொலிக்கும் இசை வைரமாக மாற்றியுள்ளார்.
இசை மேதை பாலமுரளிகிருஷ்ணாவின் சிஷ்யையான ஜனனி பாரம்பரிய இசையுடன் தன்னை குறுக்கிக் கொள்ளாமல், லண்டன் டிரினிடி இசையில் எட்டு நிலைகளை முடித்து வேர்ல்டு டாப்பர் பட்டம் பெற்றவர், மேற்கத்திய வாய்ப்பாட்டில் ஆறு தகுதி நிலைகளை முடித்துள்ளார்.
புல்லாங்குழல் மேதை பண்டிட் ஹரிபிரசாத் செளராசியாவுடன் பாரீசில் இவர் வழங்கிய ஜுகல்பந்தியின் மூலம் இசை ஆர்வலர்களை திரும்பிப் பார்க்க வைத்தார்.
சென்னை கல்லூரி ஒன்றில் இசைத் துறையில் முதுகலை படித்துவரும் மாணவி ஜனனி, இதுவரை "பூங்காற்று', "கந்த சஷ்டி கவசம்', "சுப்ரமணிய புஜங்கம்' என்பது போன்ற தலைப்பில் இசை ஆல்பம் வெளியிட்டு, பலரையும் இவரது பாடல்களை விரும்பி கேட்க வைத்தார்.
இப்போது வெளியிட்டுள்ள "வந்தே மாதரம்' இசை ஆல்பத்தை தனது மாஸ்டர் பீஸாக கருதுகிறார், காரணம் இவரே இசை அமைத்துள்ள இந்த ஆல்பத்தில் ,எஸ்.பி.பி., ஹரிஹரன், உன்னி கிருஷ்ணன் போன்ற பிரபலங்கள் பாடியுள்ளனர் என்பதுதான்.
வந்தே மாதரம்
மண்ணும் இமயமலை
பாரத தேசமென்று பெயர் சொல்வார்
தாயின் மணிக்கொடி பாரீர்
பாரத சமுதாயம் வாழ்கவே
பாருக்குள்ளே நல்ல நாடு
எந்தையும் தாயும்
என ஏழு பாடல்களை ஏழு விதத்தில் இசை அமைத்துள்ளார்.
நம் பாராம்பரிய இசை வடிவங்களுடன் ஹிப்ஹிப், சிம்பொனி, இந்தோரப், ப்ளூஸ் போன்ற வெளிநாட்டு இசை வடிவங்களையும் கையாண்டு கவிஞரின் முண்டாசில் ஒரு பிளாட்டின இறகையே செருகியுள்ளார் எனலாம்.
பாரதியின் வரிகளின் வீரியத்தையும், விசாலத்தையும் பங்கம் செய்யாமல், ஜனனி இன்றைய இளைய தலைமுறையினருக்கு ஏற்ப தோசையை பீசசாவாக்கி கொடுத்துள்ளார். மிகவும் பிரமாதமாக வந்துள்ளது. இந்த ஆல்பத்தை ஜே.எஸ்.கே ஆடியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது, காஸ்மிக் குளோபல் மார்கெட்டிங் நிறுவனம் விநியோகம் செய்கின்றனர்.
எல்லாவிதமான சங்கீதத்திலும் தேர்ச்சி பெற்று பல்வேறு தேசிய, மாநில, மற்றும் பல சங்கீத விருதுகள் பெற்றுள்ள ஜனனிக்கு, மக்கள் மத்தியில் நல்லதொரு பின்னணி இசை பாடகியாக வலம்வர வேண்டும், அதன் மூலம் சகலருக்கும் தனது இசை போய்ச் சேரவேண்டும் என்பதும் ஒரு விருப்பம், அவரது விருப்பம் விரைவில் நிறைவேற தினமலர் இணையதளம் வாழ்த்துகிறது. ஜனனியின் தொடர்பு எண்: 9840028347,9380590498.
வாசகர்களே
உங்கள் பிரியமுள்ள தினமலர் இணையதளத்தின், அற்புதமான வடிவமைப்பின் காரணமாக ஜனனியின் வந்தே மாதரம் இசை ஆல்பத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய பாடல்கள் இங்கே ஆடியோவாக வெளியிடப்பட்டுள்ளது. கிளிக் செய்து பாடல்களை கேளுங்கள்
- எல்.முருகராஜ்