திண்டுக்கல் : கோடைகாலம் துவங்கியுள்ளதை பயன்படுத்தி, அனுமதியில்லாத "மினரல் வாட்டர் கம்பெனிகள்' புற்றீசல் போல முளைக்க துவங்கியுள்ளன.
பருவமழை பொய்த்து நீர்நிலைகள் வறண்டுள்ளன. கோடை வெயில் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. இதனால் பொதுமக்கள் "மினரல் வாட்டர் கம்பெனி'களில் இருந்து நல்ல தண்ணீரை வாங்க வேண்டிய கட்டாயத்திற்கு வந்து விட்டனர். மக்களின் குடிநீர் தேவையை புரிந்த கொண்ட சிலர் அரசிடமிருந்து உரிமம், ஒப்புதல் இல்லாமல், அவரவர் இஷ்டம் போல் தண்ணீரை சுத்திகரிப்பு செய்ததாக கூறி, கேன்களில் அடைத்து, பெயருக்கு ஒரு "லேபிளை' ஒட்டி விற்கின்றனர். 20 லிட்டர் கொண்ட ஒரு கேன் விலை ரூ.25 முதல் ரூ.35 வரை விற்பனை செய்கின்றனர். காசு கொடுத்து வாங்கியும், நல்ல தண்ணீரை குடிக்க முடியாத நிலை பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
அனுமதி: மினரல் வாட்டர் கம்பெனி நடத்துபவர்கள் சென்னையில் உள்ள தர நிர்ணய நிறுவனத்திடம் சான்றிதழ் வாங்க வேண்டும்.
* பூமிக்கடியில் இருந்து எடுக்கப்பட்டு சுத்திகரிப்பு செய்யப்படும் நீர் தரமானது என சுகாதார துறையிடம் ஒப்புதல் வாங்க வேண்டும்.
* உணவு பாதுகாப்புத்துறையிடம் உரிமம் பெற வேண்டும்.
*பூமிக்கடியில் இருந்து தொடர்ந்து நீர் எடுப்பதற்கு நீர் ஆதாரப்பிரிவிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
* தங்களுக்குரிய லேபிளில் ஒட்டப்பட்ட கேன்களில் மட்டுமே தண்ணீர் நிரப்பி விற்பனை செய்ய வேண்டும்.
* தண்ணீர் விற்கும் சிலர் எந்தவிதமான அனுமதியும் வாங்காமல், லேபிளில் உரிமம் பெற்றதற்கான எண்கள் இல்லாமல் விற்கின்றனர்.
மினரல் வாட்டரின் தரம் குறித்து, சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்பு பிரிவுதுறையினர் ஆய்வு நடத்த வேண்டும். இருதுறைகளும் இணைந்து, தரமான தண்ணீர் கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,"அரசு அனுமதி பெறாமல் மினரல் வாட்டர் கேன்கள் விற்க கூடாது. அனுமதியின்றி விற்கும் கேன்கள் பறிமுதல் செய்யப்படும்,''என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE