திருநெல்வேலி:கிறிஸ்தவர்களின் தவக்காலத்தின் 4 வது ஞாயிற்றுகிழமையான நேற்று பாளை., மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்ற சிலுவை பாதை ஊர்வலம் பாளை.யில் நடந்தது.
உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் ஆண்டு தோறும் சாம்பல் புதனில் துவங்கி புனித வெள்ளி வரையிலான 40 நாட்களை தவக்காலமாக கடைபிடிக்கின்றனர். விரத நாட்களில் கிறிஸ்தவர்கள் அசைவ உணவை தவிர்த்து விருப்பு, வெறுப்பு இன்றி ஏழைகளுக்கு தர்மம், உணவு வழங்குகின்றனர். மேலும் தவநாட்களில் இயேசுவின் தியாகத்தை, வாழ்க்கை பாடுகளை நினைவு கூறும் வகையில் தினமும் சர்ச்களில் சிறப்பு ஆராதனை, திருப்பலி போன்றவை நடப்பது வழக்கம்.
அதுபோல் இந்த ஆண்டு கடந்த பிப்.13 ம் தேதி சாம்பல் புதன் அன்று தவக்காலத்தை கிறிஸ்தவர்கள் துவக்கினர். அன்று சர்ச்களில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது. தவக்காலத்தின் 4ம் ஞாயிற்று கிழமையான நேற்று மாலை பாளை., சேவியர் பேராலயத்தில் இருந்து சிலுவை பாதை ஊர்வலம் பாளை., மறை மாவட்ட ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமையில் ஏராளமான கிறிஸ்தவர்கள் சிலுவைகளை ஏந்தி கிறிஸ்தவ பாடல்களை பாடிய படி ஊர்வலமாக சென்றனர். ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக சமாதானபுரம் ஆலயத்தை சென்றடைந்தது. அங்கு சிலுவைப்பாதை பிரார்த்தனை மற்றும் திருப்பலி நடந்தது.
கிறிஸ்தவர்கள் இயேசு சிலுவையில் அறையப்பட்ட நாளான புனித வெள்ளியை 29ம் தேதி அனுஷ்டிக்கவுள்ளனர். இயேசு உயிர்தெழுந்த நாளான 31ம் தேதி ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடவுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE