புதுடில்லி: சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம்சிங் . கொள்ளைக்காரர்கள், கொலைகாரர்கள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று மத்திய உருக்கு துறை அமைச்சர் பெனிபிரசாத் பேச்சால் அவருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இவ்வாறு முலாயம்சிங்கை பேசியது தொடர்பாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அவரை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் லோக்சபாவில் சமாஜ்வாடி கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை 2 முறை ஒத்தி வைக்கப்பட்டது.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் லக்னோ அருகே உள்ள அவரது குண்டா தொகுதியில் மத்திய அமைச்சர் வர்மா பேசுகையில்; முலாயம் சிங் கொள்ளையர்கள், மற்றும் பயங்கரவாதிகளுக்குதொடர்பு வைத்துள்ளார். இவர் எப்படி நமது மாநிலத்தை காத்திட முடியும் ? என பேசினார்.
இவரது பேச்சுக்கு சமாஜ்வாடி கட்சியினர் லோக்சபாவில் இன்று கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பெனிபிரசாத் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினர்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் பெனிபிரசாத் கூறுகையில்; என்னை பதவி விலக சொல்வதற்கு முலாயம் யார் ? நான் பதவி விலகத்தயார் ஆனால் மன்னிப்பு கேட்க மாட்டேன். முலாயம்சிங் அயோத்தி இடிப்பு சம்பவத்தின்போது சிலருக்கு துணையாக இருந்தார். குறிப்பாக மோடியின் வெற்றிக்கு உதவி புரிந்தார் என்றார். மேலும் இவரது பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது, இதனை தொடர்ந்து லோக்சபா ஒத்தி வைக்கப்பட்டது.
மத்திய அமைச்சர் கமல்நாத் வருத்தம் ; தலைவர்கள் பேசும் போது கவனமாக பேச வேண்டும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜனார்த்தன் திரிவேதி மறைமுகமாக அமைச்சர் பெனிபிரசாத்தை சாடியுள்ளார். மத்திய அமைச்சர் கமல்நாத் இந்த பேச்சு குறித்து வருத்தம் தெரிவித்துள்ளார்.