பரமக்குடி : பரமக்குடியில், பட்டப்பகலில், நகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர் முருகனை, பைக்கில் வந்த கும்பல், பைப் வெடிகுண்டுகளை வீசியும், பட்டா கத்தியால், சரமாரியாக வெட்டியும் கொலை செய்தது. இச்சம்பவத்தை கண்டித்து, நடந்த மறியலால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அம்மன் சன்னிதியைச் சேர்ந்தவர் முருகன், 45. நகராட்சி பா.ஜ., முன்னாள் கவுன்சிலர். வீடு அருகே, தேங்காய் கடை நடத்தி வந்தார். கட்சியில் முன்னாள், மாநில பொதுக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். இவர், நேற்று மதியம், 2:30 மணிக்கு, கடையை பூட்டிவிட்டு, சாப்பிட வீட்டிற்கு நடந்து சென்றார். அப்போது, மூன்று பேர் கொண்ட கும்பல், பைக்கில் பின் தொடர்ந்து வந்து, அவர் மீது, மூன்று "பைப்' வெடி குண்டுகளை வீசியது. முதல் குண்டு மட்டும் வெடித்தது. மற்றவை வெடிக்கவில்லை. இதையறிந்த கும்பல், அவரை ஓட, ஓட விரட்டி பட்டாக்கத்தி, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. முருகன் இறந்ததும், மர்ம கும்பல், பைக்கில் தப்பியது.
இதை கண்டித்து, வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம், ஆர்.எஸ்.எஸ்., மற்றும் இந்து முன்னணி அமைப்பினர், மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இவர்களிடம், "கொலையாளிகளை விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என, போலீசார் உறுதியளித்த பின், மறியல் கைவிடப்பட்டது. இதனால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
போலீஸ் விசாரணையில், "முருகனுக்கு தனிப்பட்ட முறையில், யாரிடமும் முன்பகை இல்லை' என, தெரிய வந்தது. எதற்காக, கொலை நடந்தது என, போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆர்.எஸ்.எஸ்., மாநில பொறுப்பாளர் தங்கராஜ் கூறுகையில், ""குற்றவாளிகள் கைது செய்யப்படும் வரை, பரமக்குடியில், வணிகர்கள் சங்கம், வியாபாரிகள் சங்கம் சார்பில், கடைகள் அடைக்கப்பட்டிருக்கும்,'' என்றார். மேலும், அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்க, பரமக்குடியில் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர்.