மாணவர்கள் போராட்டத்தால் மாற்றம் வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி பேச்சு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாணவர்கள் போராட்டத்தால் மாற்றம் வரும் இயற்கை வேளாண் விஞ்ஞானி பேச்சு

Added : மார் 22, 2013

திருத்துறைப்பூண்டி: ""இலங்கை தமிழர் பிரச்னையில் மாணவர்கள் போராட்டம் வெறும் துவக்கம் தான்; இனிமேல் தான் இடி, மின்னல், கனமழை அடிக்கப் போகிறது; இந்திய அரசியலையே மாணவர்கள் போராட்டம் புரட்டி போடும்,'' என, இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் கூறினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் தமிழக இயற்கை உழவர் இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் நடந்தது. இதில், தஞ்சை மாவட்டத்தலைவர் பள்ளத்தூர் முருகையன் முன்னிலை வகித்தார். ஒன்றிய அமைப்பாளர் கரிகாலன் வரவேற்றார்.
கூட்டத்தில், தலைமை வகித்து, இயற்கை வேளாண்மை விஞ்ஞானி நம்மாழ்வார் பேசியதாவது:
இந்திய வேளாண்மை மிகப்பெரிய சிக்கலுக்கு ஆளாகியுள்ளது. பசுமை புரட்சி என்னும் பெயரில் ரசாயன உரங்களும், பூச்சிக்கொல்லி மருந்துகளும் இறக்குமதி செய்யப்பட்டு, வேளாண்மை துறையையே சூதாட்டமாக காங்., கட்சியினர் மாற்றி விட்டனர்.
விளைநிலங்கள் அனைத்தும் மலடாகி போய் விட்டது. மக்கள் எல்லாம் நடமாடும் பிணமாக மாறி விட்டனர். சத்து பற்றாக்குறையால் குழந்தைகள் நோஞ்சான்களாகவும், இளம் தாய்மார்கள் ரத்த சோகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கிராமங்களில், நோய் பெயர் தெரியாமலேயே அப்பாவி மக்கள் இறக்கும் அவலம் உள்ளது.
உணவும், சுற்றுச்சூழலும் நஞ்சாகி விட்டதால் அதிகளவில் புற்றுநோய் பாதிப்பு மக்களுக்கு ஏற்பட்டு வருகிறது. பிரதமர் மன்மோகன்சிங், விவசாயிகளை விவசாயத்தை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார். இவ்வாறு, வெளியேறும் விவசாயிகளுக்கு மாற்று வழியையும் அவரே கூற வேண்டாமா?
விளைநிலங்களை பன்னாட்டு கம்பெனிகளிடம் கைமாற்ற பிரதமர் நினைக்கிறார். இந்திய வேளாண்மையை பன்னாட்டு கம்பெனியிடம் அடகு வைக்க மத்திய வேளாண்மைத்துறை அமைச்சர் சரத்பவார் முனைப்பு காட்டி வருகிறார். ஏற்கனவே, மரபணு மாற்று தொழில்நுட்பத்தால் பி.டி., பருத்தி சாகுபடி செய்த விவசாயிகள், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
டெல்டா மாவட்டத்தில், நடப்பாண்டில் வறட்சி பாதிப்பால் பயிர் கருகியதால் கடன் செலுத்த முடியாமல் விவசாயிகள் தவிக்கின்றனர். இந்நிலைக்கு விவசாயிகளை தள்ளிய மத்திய அரசுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ள சூழலில், இலங்கை தமிழர் பிரச்னையில் மத்திய அரசின் போக்கைக் கண்டித்து மாணவர்கள் நடத்தும் போராட்டம் வெறும் துவக்கம்தான். இனிமேல் தான் இடி, மின்னல், கனமழை அடிக்கப் போகிறது. இதனால், காங்கிரஸ் கட்சியே காணாமல் போய்விடும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கூட்டத்தில், தமிழக இயற்கை உழவர் இயக்க மாநில செயலாளர் ஜெயராமன், நாகை, திருச்சி , தஞ்சை மாவட்ட செயலாளர்கள் சதாசிவம், யோகநாதன், அன்புசெல்வன் உள்பட பலர் பங்கேற்றனர்.திருவாரூர் மாவட்ட அமைப்பு செயலாளர் வரதராஜன் நன்றி கூறினார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X