திருச்சி: தன்மீது புகார் கொடுத்த, தி.மு.க.,வின் முன்னாள் பஞ்சாயத்து தலைவரை, ஆள்வைத்து கொலை செய்ய முயன்ற வழக்கில், சசிகலாவின் சகோதரர் திவாகரன் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் சகோதரர், மன்னார்குடி திவாகரன். இவர் மன்னார்குடி அருகேயுள்ள சுந்தரகோட்டையில், செங்கமலத்தாயார் கல்வி அறக்கட்டளை என்ற பெயரில் மகளிர் கல்லூரி நடத்தி, அதன் தாளாளராக இருந்து வருகிறார். இவரது வீடும் கல்லூரி அருகிலேயே உள்ளது. அ.தி.மு.க.,வில் ஒரு அதிகார மையமாக இருந்த திவாகரன், ஒரு ஆண்டுக்கு முன் வீடு இடித்த வழக்கில் கைது செய்யப்பட்டார். கிட்டத்தட்ட, 90 நாள் சிறையிலிருந்த திவாகரன், பின் ஜாமீனில் வெளியே வந்தார். மேலும் திவாகரன் கைது செய்யப்படும் முன், அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்டார். அ.தி.மு.க.,வினர் யாரும் அவருடன் தொடர்பு வைத்துக் கொள்ளக்கூடாது என, கட்சித்தலைமையால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இப்படிப்பட்ட சூழலில், சிறைக்கு சென்ற வந்த பின் அமைதியாக கல்லூரியை கவனித்து வந்த திவாகரனுக்கு, ஒரு மாதத்துக்கு முன் புதுக்கோட்டை அரசு கல்லூரியில், வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அரசு, விருது வழங்க காரணமாக இருந்த, மூன்று பேராசிரியர்களை அதிரடியாக காத்திருப்போர் பட்டியலில் வைக்க உத்தரவிட்டது. இதன்மூலம், அ.தி.மு.க., தலைமையின் கோபப்பார்வையில் திவாகரன் இருப்பது தெரியவந்தது. நேற்று இரவு, 7.50 மணிக்கு, மன்னார்குடி, டி.எஸ்.பி., அன்பழகன் தலைமையில், சுந்தரக்கோட்டையில் உள்ள திவாகரன் வீட்டுக்கு சென்ற போலீஸார், நில அபகரிப்பு புகாரின் பேரில் கைது செய்வதாக கூறி, திவாகரனை கைது செய்து, நீடாமங்கலம் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத போலீஸ் அதிகாரி கூறியதாவது: ஏற்கனவே ரிஷியூர் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் தமிழார்வனிடம் வேலைபார்த்தவரின் மனைவி கஸ்தூரி என்பவர் கொடுத்த புகாரின் படி, திவாகரன் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நேற்று மாலை, தமிழார்வனை, அதே ஊரைச் சேர்ந்த, அ.தி.மு..க.,வைச் சேர்ந்த ராஜேந்திரன், கிருஷ்ணமேனன் ஆகிய இருவரும் வெட்டி கொலை செய்ய முயற்சித்துள்ளனர். இதுகுறித்து தமிழார்வன் நீடாமங்கலம் போலீஸில் புகார் செய்துள்ளார். அதன்படி, ராஜேந்திரனையும், கிருஷ்ணமேனனையும் விசாரித்தபோது, கொலை செய்ய கூறியது திவாகரன் என்று தெரியவந்துள்ளது. அதையடுத்து, திவாகரன் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது கொலை செய்ய தூண்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். விசாரணை முடிந்து, நள்ளிரவிலோ அல்லது இன்று காலையோ திவாகரன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, சிறையில் அடைக்கப்படலாம் என்று தெரிகிறது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE