அவலூர்பேட்டை: செஞ்சி அருகே, திருநாதீஸ்வரர் கோவிலில் கிடைத்த, 11 சாமி சிலைகளை, வருவாய் துறையினர் எடுத்து செல்லாமல் இருக்க, இரவு முழுவதும், சிலைகளை கிராம மக்கள் பாதுகாத்தனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி தாலுகா வளத்தியை அடுத்த, தேவனூர் கிராமத்தில், திருநாதீஸ்வரர் கோவிலில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகிறது. கோவிலில் பள்ளம் தோண்டியபோது, நேற்று முன்தினம், 11 சிலைகள் மற்றும் சில பொருட்கள் கிடைத்தன.
இவை அனைத்தையும், வழக்கம் போல், வருவாய் துறையினர் எடுக்க முன் வந்தனர். இதற்கு, கிராம மக்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்தனர். ஊரில் இருக்கும் பஜனை கோவிலில், சிலைகளை கிராம மக்கள் பாதுகாப்பாக வைத்தனர்.
இரவு, 10:00 மணிக்கு, திடீரென, தாசில்தார் ஜெயகுமார் தலைமையில் அதிகாரிகள், தேவனூர் கிராம மக்களிடம் பேச்சு நடத்தினர்.
"விரைவில், கோவில் கும்பாபிஷேகம் நடத்த இருப்பதால், கோவிலில் கிடைத்த சிலைகளை வழிபாடு நடத்துவோம். இதை அரசிடம் ஒப்படைக்க மாட்டோம்' என, மக்கள் கருத்து தெரிவித்தனர். இதை தொடர்ந்து, வருவாய் துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
இரவு முழுவதும், 300க்கும் மேற்பட்ட கிராம மக்கள், சிலைகளைப் பாதுகாத்து, காவல் இருந்தனர். நேற்று காலை, விழுப்புரத்திலிருந்து அறநிலைய துறை இணை ஆணையர் செந்தில்குமார், உதவி ஆணையர் பிரகாஷ் ஆகியோர், சிலைகளை பார்வையிட்டனர்.
கோவிலில் கிடைத்த சிலைகள், அறநிலைய துறைக்கு சொந்தமானவை; இதை, ஊராட்சி மன்ற தலைவர் அண்ணாமலை பாதுகாப்பில் இருக்கட்டும் என கூறிச் சென்றுள்ளனர்.
இதை தொடர்ந்து, நேற்று காலை, பஜனை கோவிலில் இருந்த சிலைகளுக்கு, கிராம மக்கள் மாலைகள் அணிவித்து, சிறப்பு வழிபாடு நடத்தினர். சிலைகளை அதிகாரிகள் எடுத்து சென்றால், திரும்ப கிடைக்குமா என, கிராம மக்கள் அஞ்சியதால், வருவாய் துறை அதிகாரிகள் எடுத்து செல்ல எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக, தெரிய வருகிறது.