தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையை, நிரந்தரமாக மூடக்கோரி, தூத்துக்குடியில், நேற்று, கடையடைப்பு போராட்டம் நடந்தது. தூத்துக்குடி, ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையிலிருந்து, மார்ச் 23ம்தேதி , கந்தக- டை-ஆக்சைடு வாயு கசிந்ததில், கண்எரிச்சல், இருமல், சுவாசக்கோளாறு உள்ளிட்ட உடல்நலக்குறைவால், பொதுமக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அதுகுறித்து, கலெக்டர்ஆஷிஷ்குமார், அதிகாரிகள் விசாரித்தனர். இந்நிலையில், காற்று, நீரை மாசுபடுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில், மார்ச் 30ம்தேதி, தமிழக மாசுக்கட்டுப்பாட்டுவாரிய உத்தரவுப்படி, அந்த ஆலை மூடப்பட்டது. அதற்கு எதிராக, சென்னை, பசுமைத்தீர்ப்பாயத்தில், ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் மேல்முறையீடு செய்தது. அந்த மனு, இன்று, விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பாய உத்தரவுப்படி, தூத்துக்குடி கலெக்டர், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ஆலை மூடப்பட்டது தொடர்பாக, தனித்தனியாக, விளக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்படுகின்றன.
இதற்கிடையே, மக்கள் போராட்டக்குழு சார்பில், தூத்துக்குடியில், நேற்று, முழுக்கடையடைப்பு போராட்டம் நடந்தது. மொத்தமுள்ள, 14,500 கடைகளில், ஓட்டல்கள், டீக்கடைகள், ஜவுளிக்கடைகள், மளிகைக்கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என, 11,000 கடைகள், காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மூடப்பட்டிருந்தன. அதுபோல, காமராஜ், வ.உ.சி., மார்க்கெட்டுகள் மூடப்பட்டன. 43 தனியார் மினிபஸ்கள், ஆட்டோக்கள், ஷேர் ஆட்டோக்கள், கார்கள் ஓடவில்லை. இதனால், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டது. அந்த ஆலையை, நிரந்தரமாக மூட வலியுறுத்தி, நோட்டீஸ்களும் ஒட்டப்பட்டிருந்தன.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE