காஞ்சிபுரம்:வெங்கச்சேரி கிராம விவசாயி, சவுக்கு பாத்தியில், ஊடுபயிராக கேழ்வரகு சாகுபடி செய்து வருகிறார்.காஞ்சிபுரம் - உத்திரமேரூர் சாலையில் அமைந்துள்ளது, வெங்கச்சேரி கிராமம். இங்குள்ள, விளை நிலங்கள், மணல் பூமியாக உள்ளதால், எந்த பயிரை சாகுபடி செய்தாலும், நல்ல விளைச்சலை கொடுக்கின்றன. இதனால், இங்குள்ள விவசாயிகள் நெல், கரும்பு, சவுக்கு, வேர்க்கடலை மற்றும் தோட்டக்கலை பயிர்களான கத்தரிக்காய், வெண்டை, கீரை, ஆகியவற்றை, சாகுபடி செய்து வருகின்றனர்.
ஊடு பயிர்:பயிர்களை தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களை கட்டுப்படுத்த, விவசாயிகள் ஆயிரக்கணக்கான ரூபாயை செலவழிக்க வேண்டியுள்ளதால், அதிக லாபம் பெற முடியாத நிலை உள்ளது. இதை தவிர்க்க, பெரும்பாலான விசாயிகள், சவுக்கு பயிரை சாகுபடி செய்ய துவங்கி விட்டனர். ஐந்தாண்டு பயிரான சவுக்கு, ஊட்டமாக வளர்ந்து நல்ல லாபத்தை கொடுக்கிறது. குறைந்த செலவு மற்றும் நீர் பாசனத்தில், சாகுபடி செய்யப்படும் சவுக்கு பயிரில், ஊடு பயிராக, கேழ்வரகு பயிரிடுகின்றனர்.
லாபம் தரும்:இதுகுறித்து, வெங்கச்சேரியை சேர்ந்த விவசாயி கோபால்சிங் கூறியதாவது:கடந்த, 10 ஆண்டுகளாக, கடும் வறட்சி நிலவுவதால், குறைந்த தண்ணீரில் விளையும் பயிர்களை கண்டறிந்து, அதனை சாகுபடி செய்து வருகிறோம். அந்த வகையில், சவுக்கு தேர்வு செய்து பயிரிட்டுள்ளேன்.இதில், ஊடு பயிராக கேழ்வரகு நடவு செய்தேன். கேழ்வரகு நல்ல விளைச்சலை கொடுத்து, அறுவடைக்கு தயாராகி உள்ளது. மூன்று மாதத்தில், 1 ஏக்கருக்கு, 25,000 முதல் 35,000 ரூபாய் வரை லாபம் கிடைக்கும் என, எதிர்பார்க்கிறேன். ஊடு பயிரால், சவுக்கு எந்த வகையிலும் பாதிக்கப்படாது.இவ்வாறு, அவர் தெரிவித்தார்.