கடையநல்லூர்:கடையநல்லூரில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கல்வீச்சு சம்பவத்தால் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.கடையநல்லூர் பேட்டை புளியமுக்கு தெருப்பகுதியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலை பேட்டை பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இப்பகுதியை சேர்ந்த ஜமாத்துக்கும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இடையே தொடர்ந்து பிரச்னை இருந்து வருகிறது. குறிப்பிட்ட பகுதியில் சிறுவர், சிறுமியர் அரபி ஆரம்ப பாடசலை விலை கொடுத்து வாங்கித்தான் அப்பகுதியில் நடத்தி வருவதாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தரப்பில் கூறப்பட்டு வருகிறது. இதனிடையில் இப்பிரச்னை தொடர்பாக திடீரென இருதரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் ஏற்பட்டு தொடர்ந்து கல்வீச்சு சம்பவமும் நடந்தது. தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்றனர். இருதரப்பினரும் கல்வீச்சில் ஈடுபட்ட போது அங்கு வந்த கடையநல்லூர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் இசக்கி நெற்றி பகுதியில் கல் தாக்கியது.இவர் பலத்த காயமடைந்தார். மேலும் ஜமாத் அமைப்பை சேர்ந்த முகம்மது மைதீன் (15), கோதரி (65), அஸ்லாம் (45), அப்துல்காதர் (42) ஆகியோரும் படுகாயமடைந்து கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக நெல்லை பாளை., ஐகிரவுண்ட் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். இச்சம்பவத்தில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்த ஜாபர், சேக்அலி, இப்ராகிம், அப்துல்காதர் ஆகியோருக்கும் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து புளிங்குடி டிஎஸ்பி வானுமாமலை மற்றும் இன்ஸ் பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் பேட்டை பகுதியில் குவிக்கப்பபட்டனர்.தொடர்ந்து இருதரப்பினரும் போலீசாருடன் சிலமணிநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். டிஎஸ்பி வானுமாமலை இருதரப்பினருக்கும் இடையே சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்டார். சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட எஸ்பி விஜயேந்திர பிதரி, தென்காசி ஆர்டிஓ ராஜகிருபாகரன், தாசில்தார் தேவபிரான், மண்டல துணை தாசில்தார் ஆதிநாராயணன், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணியன், விசாரணை மேற்கொண்டனர்.போலீசார் கேட்டுக் கொண்டதையடுத்து சிறுவர், சிறுமியர் அரபி பாடசாலையில் இருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை சேர்ந்தவர்களும் பேட்டை ஜமாத்தை சேர்ந்த பொதுமக்களும் அப்பகுதியிலிருந்து கலைந்து சென்றனர். அப்பகுதியில் பதட்டம் நிலவி வரும் நிலையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடையநல்லூர் இன்ஸ்பெக்டர் சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் சிவன் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.