சென்னை: பெண்ணை ஏமாற்றி, திருமணம் செய்து, மீண்டும் கொடுமைப்படுத்திய வழக்கில், முன்னாள் பாதிரியார் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.
வியாசர்பாடி சாஸ்திரி நகரை சேர்ந்தவர் அகஸ்டின், இவரது மகன் அந்தோணி ஜோசப், 31. இவர், கடந்த ஐந்தாண்டுக்கு முன் பாதிரியாராக மாறினார். இவருடைய பெரியம்மாவுக்கு உடல் நிலை சரியில்லாததால், போரூரை சேர்ந்த ஆர்.எஸ்.ஆர்.எம்., மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் மேரி, 24 (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர், வீட்டுக்கு சென்று கவனித்து வந்தார். இதில் மேரிக்கும், ஜோசப்புக்கும் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது. இதில், மேரிக்கு இரண்டு முறை கருகலைப்பும் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ளலாம் என, மேரி கேட்ட போது, "தான் பாதிரியாராக உள்ளதால், திருமணம் செய்வது இயலாத காரியம்' என, ஜோசப் கூறியுள்ளார். கடந்த ஜனவரியில், எம்.கே.பி.நகர் காவல் நிலையத்தில், ஜோசப் மீது, மேரி புகார் அளித்தார். போலீஸ் விசாரணையிலும், இரு தரப்புக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில், மேரியை திருமணம் செய்து கொள்வதாக ஜோசப் கூறினார். அவர் மேல் எடுக்கவிருந்த கைது நடவடிக்கை தவிர்க்கப்பட்டது. ஆனாலும் ஜோசப், பாதிரியார் பணியில் இருந்து விலக்கப்பட்டார். திருமணத்திற்கு பின், சில வாரங்களிலேயே, மேரியை ஜோசப் கொடுமைபடுத்த துவங்கி உள்ளார். இதனால் மனமுடைந்த மேரி, மீண்டும் போலீஸ் கமிஷனரகம் சென்று, ஜோசப் மீது புகார் கொடுத்தார். புகார், உதவி கமிஷனர் மனோகரனின் பார்வைக்கு அனுப்பப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதை அடுத்து, ஜோசப், வழக்கறிஞர் சகிதம் உதவி கமிஷனர் முன் ஆஜரானார். அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி, ஜோசப் அவரது தந்தை அகஸ்டின் மற்றும் தம்பி ஹென்றி மார்க்கஸ் ஆகிய மூவரை கைது செய்தனர்.