இது அரவாணிகளின் கதை...- எல்.முருகராஜ்

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 20, 2013 | கருத்துகள் (42) | |
Advertisement
வருகின்ற 23 மற்றும் 24-4-13 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா,அரவாணிகள் அனைவரும் சங்கமிக்கும் விழா...இந்த விழாவில் அரவாணிகள் படும்பாடே இங்கே அரவாணிகளின் கதையாகியிருக்கிறது.இவர்கள் தேவதைகளும் இல்லை,பிசாசுகளும் இல்லை,உங்கள் எல்லோரையும் போல இதயமும்,இரைப்பையும் உள்ள மனிதர்கள்தான். பசி, தூக்கம், கருணை, காதல், காமம், தேடல்,
இது அரவாணிகளின் கதை...- எல்.முருகராஜ்

வருகின்ற 23 மற்றும் 24-4-13 ஆகிய தேதிகளில் விழுப்புரம் மாவட்டம் கூவாகத்தில் நடைபெறும் கூத்தாண்டவர் திருவிழா,அரவாணிகள் அனைவரும் சங்கமிக்கும் விழா...இந்த விழாவில் அரவாணிகள் படும்பாடே இங்கே அரவாணிகளின் கதையாகியிருக்கிறது.

இவர்கள் தேவதைகளும் இல்லை,பிசாசுகளும் இல்லை,உங்கள் எல்லோரையும் போல இதயமும்,இரைப்பையும் உள்ள மனிதர்கள்தான். பசி, தூக்கம், கருணை, காதல், காமம், தேடல், உழைப்பு, காயம்,துக்கம்,பெருமிதம் எல்லாம் இவர்களுக்கும் உண்டு,இவர்களும் உங்களைப் போலவே ஒரு தாயின் வயிற்றில் இருந்து உதித்தவர்கள்தான் சினிமாவால் பாழாய்ப்போனவர்களின் பட்டியலில் முதலில் இருப்பவர்கள்.சினிமா இவர்களை கண்டபடி சித்தரித்து சீரழித்துவிட்டது.பார்ப்பவர்களின் மனதில் விஷத்தை விதைத்ததும் அதுதான்.,விபரீதங்களை உருவாக்கியதும் அதுவேதான்.பஸ்சில் பயணம் செய்யும் போது ஒரு அரவாணியின் பக்கத்து இருக்கை காலியாக இருந்தும் கூட , உட்காரமல் கால் வலியோடு நின்று கொண்டே பயணிக்கும் அளவிற்கு சகமனிதர்களின் மனதை கெடுத்து வைத்திருப்பதும் சாட்சாத் சினிமாதான்.


ஒன்பது என்ற புது வார்த்தையை சூட்டியதன் மூலம் இவர்களை இகழ்ந்து ,அதன்மூலம் மகிழ்ந்து கொண்டதும் இந்த திரைத்துறையே. இப்படி அரவாணிகள் பற்றி தாங்கமுடியாத அளவிற்கு சினிமா மூலமாக விஷத்தை பரப்பியதன் மூலம் சமூகத்தில் கேலி,கிண்டல்,துரத்தல் என்பது நம்மூர் சிறுவர்களுக்கே கைவந்த கலையாகிவிட்டது.,வேலியில் திரியும் ஒணானை கல்லால் அடிப்பதும் ,இவர்களை சொல்லால் அடிப்பதும் அனிச்சை செயலாகவே மாறிவிட்டது.


அலி,பேடி,ஒன்பது போன்ற வார்த்தைகளால் அன்றாடம் கேலி,கிண்டலால் குதறப்படும் சகோதரிகள், போராடி வாக்காளர் அடையாள அட்டை பெற்ற பிறகு அரவாணி என்றும் திருநங்கை என்றும் அழைக்கப்படுகிறார்கள்,ஒட்டு இருக்கிறதே.


திருநங்கை என்றால் மரியாதைக்குரிய பெண் என்று அர்த்தம்.ஆனால் திருநங்கைகள் தமிழ்நாட்டில் மரியாதைக்குரிய பெண்ணாகவா நடத்தப்படுகிறார்கள்,நிச்சயமாக இல்லை.கடந்த பத்து ஆண்டுகளாக விழுப்புரம் பக்கத்தில் கூவாக திருவிழா என்ற பெயரில் நடைபெறும் விழா கூட, அவர்களை அரைகுறை ஆடையுடன் அழகியாகத்தான் பார்க்க பயன்படுகிறதே தவிர ,அவர்களில் தொழிலில் வென்றவர்களை,படிப்பில் உயர்ந்து நின்றவர்களை ,சமூகத்தில் சாதித்தவர்களை பாராட்டும் விழாவாக நடத்த தவறிவிட்டது.,இவர்களின் பெயரால் நிறைய பணம் சம்பாதிக்கும் தொண்டு நிறுவனங்கள் கூட இவர்களை உச்சி முகர்ந்து பாரட்டுவதில்லை, உயர்ந்த,செம்மையான பார்வை பார்ப்பது இல்லை.

கூத்தாண்டவர் கோயிலில் அன்றைய இரவு, அரவாணிகளுக்கு எதிராக நடக்கும் அக்கிரமங்களை,அநியாயங்களை தடுக்கவோ,தண்டிக்கவோ யாருக்குமே தைரியமுமில்லை,திராணியுமில்லை.இதை எண்ணும் போது உண்மையில் யார் ‘பேடிகள்’ என்றே எண்ணத்தோன்றுகிறது.


மிருகங்களைவிட கேவலமான,மோசமான ஆண்களை அங்குதான் பார்க்க முடியும். பண்பாடு, கலாச்சாரம் என்று எல்லாவற்றையும் குழிதோண்டி புதைத்துவிட்டு, காட்டுமிராண்டி காலத்தையும் தோற்கடிக்கும் வேகத்தோடும், வெறியோடும், வன்மத்தோடும், காமத்தோடும், போதையோடும், வேட்டையாட வரும் ஆண்களிடம் இருந்து தப்பிக்க அரவாணிகள் ,அந்த இரவில் நடத்தும் போராட்டம் கண்களில் ரத்தத்தை வரவழைக்கும் .

உண்மையைச் சொல்லப்போனால் அன்று ஒரு நாள்தான் வருடமெல்லாம் சுமந்த சோகங்களை இறக்கிவைக்கவும்,அடக்கிவைத்திருந்த ஆற்றாமையை வெளிப்படுத்தவும்,மனம்விட்டு சக அரவாணிகளிடம் பேசி வேதனையை பகிர்ந்து கொள்ளவும், கட்டிப்பிடித்து அழுகையாக வெளிப்படுத்தவும், அரவான் களப்பலியை காரணம்வைத்து கூடுகிறார்கள்,அங்கே இந்த வக்கிரம் பிடித்த, மனித உருவிலான மிருகங்கள் தரும் வேதனையால், முன்கூட்டியே வெளியேறும் கண்ணீரின் அடர்த்தியும்,ஆழமும் அதிகமானதால் , களப்பலியின் போது அழக்கூட சக்தியும்,கண்ணீருமின்றி வற்றி,வறண்டு போன கண்களுடன்தான் இருப்பார்கள்.உலகத்திலேயே மிகவும் வேதனை நிறைந்த சமூகம் என்பது நிச்சயமாக அரவாணிகளின் சமூகம்தான்.,ஆனால் அதை உணர்ந்து கொள்ளத்தான் ஆளில்லை. அரவாணிகள் யாரும் தாங்கள் அரவாணியாக பிறக்கவேண்டும் என்று விரும்பி பிறக்கவில்லை,எவரும் விரும்பி பெற்றெடுக்கவும் இல்லை., இது இயற்கையின் குற்றம் .எக்ஸ்,ஒய் குரோமோசோம்களின் குளறுபடி,உலகம் முழுவதும் ஒப்புக்கொள்ளப்பட்ட மூன்றாவது பாலினம்,நம்மால் மட்டும் ஒதுக்கிவைக்கப்பட்ட பரிதாப இனம்.

குடிகாரனைக்கூட வீட்டில் வைத்து சோறு போட்டு பாசம் காட்டும் பெற்றோர்கள் தங்கள், குழந்தை அரவாணி என்று அறிந்த மாத்திரத்தில் துரத்திவிடுவது ஏன்.,பெற்ற பிள்ளையைவிட அவர்களுக்கு சமூக,கலாச்சார அந்தஸ்து பெரிதாகப்போய்விட்டது.கூடப்பிறந்த சகோதரிக்கு,சகோதரனுக்கு திருமணம் நடக்காது என்று பொய்க்காரணங்களை சொல்லி ஒரு சின்ன மனதில் நெருப்பை முதலில் அள்ளிப்போடுபவர்கள் பெற்றோர்கள்தான்.

அன்பு,அரவனைப்புடன் வளரும் அரவானி ஒருநாளும் சமூகத்திற்கு சுமையாக இருக்கமாட்டார் ,இது சத்தியம் என்கிறார் திருநங்கைகளுக்கான திருமண வெப்சைட் நடத்தும் திருநங்கை கல்கி.ஊனமுற்ற,மனநோயாளியான குழந்தையை போலத்தான் அரவாணியும்.எட்டு வயதில் இருந்து பதிமூன்று வயதிற்குள் தனக்குள் நடக்கும் கொந்தளிப்பான சூழலால் சுருண்டும்,மருண்டும் போய்கிடக்கும் பிஞ்சு மனது அது.கூடுதலான அன்பிர்க்கும்,பாசத்திர்க்கும்,அரவனைப்பிற்கும் ஏங்கி தவிக்கும் நேரமது.அப்போது போய் ‘எங்களுக்கு ஏன்தான் இப்பிடி வந்து பிறந்தியோ’என்று வார்த்தைகளாலும்,நெருப்பாலும் மனதிலும்,உடலிலும் சூடுபோடும் போது அந்த குழந்தை எங்குதான் போகும்.ஆணோட உடம்புக்குள்ளாற சிறைப்பட்டு இருக்கிற பெண்ணோட மனசு அது.அதை மாத்த முடியாது.அது புரியாமல் “ஏண்டா இப்படி நடந்துக்கிற”, என்று பெற்றோர்களும்,பள்ளி ஆசிரியர்களும் கொடுக்கும் டார்ச்சர் தவறானதாகும்.ஏற்கனவே நாம் ஆண்தானே ,நமக்கு ஏன் பொட்டு வச்சுக்கணும்,மை பூசணும்ணு தோணுது என்று ஏற்கனவே மனதிற்குள் போராடிக்கொண்டு இருக்கும் பத்து,பனிரெண்டு வயது குழந்தைக்கு, வீட்டிலும்,பள்ளியிலும் நடக்கும் கொடுமைதான் வீட்டைவிட்டே ஒடவைக்கிறது. நாய்க்கு குளிப்பாட்டி கொஞ்சியபடி சோறு போடும் சமூகம், ரத்தமும்,சதையும்,உணர்வும் கொண்ட பிள்ளையை வீட்டைவிட்டே , ஊரைவிட்டே துரத்துவதை எப்படி ஏற்றுக்கொள்வது.எல்லாவற்றையும் சமூகம்,அந்தஸ்து என்ற தராசில் வைத்து நிறுப்பதால் ஏற்படும் பிரச்னை இது.

இது ஊனம் கிடையாது,பரம்பரையாகவோ அல்லது பரவும் நோயோ கிடையது.,அப்படி இருந்தும் ஏன் இந்த உலகம் இவர்களை விளிம்பு நிலை வரை துரத்துகிறது என்பதுதான் தெரியவில்லை.


பள்ளி இறுதியாண்டு படிக்கவேண்டிய வயதில் பெற்றோர்களால் துரத்தப்பட்டு,இளைஞர்களால் விரட்டப்பட்டு,வறுமைக்கும்,பசிக்கும் வாழ்க்கைப்பட்டு ,சமூகத்தின் கேலி,கிண்டலுடன் விரட்டப்பட்டு அரவாணியானவள் என்னதான் செய்வாள் பிச்சை எடுப்பாள்,பாலியியல் தொழிலில் ஈடுபடுவாள்,கெட்ட வார்த்தை பேசுவாள்,ரயிலில் பணம் கேட்டு வன்முறையில் இறங்குவாள்

இதற்கெல்லாம் காரணம் இவர்களல்ல நாமும் நாம் சார்ந்த சமூகமும்தான்.


அரவாணிகளுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கமாட்டோம்,வேலை கொடுக்கமாட்டோம்,படிக்கவிடமாட்டோம்,சமமாய் உட்காரவைத்து பழகமாட்டோம்,சுயதொழில் செய்து பிழைக்க வழி செய்துதரமாட்டோம் அவ்வளவு ஏன் அவசரத்திற்கு ஒதுங்க அவர்களுக்கு பெண்களுக்கான பாத்ரூமைக்கூட ஒதுக்கிதரமாட்டோம்.,நாமெல்லாம் அருட்பெருஞ்ஜோதியின் தனிப்பெரும் கருணையை படித்து வளர்ந்தவர்கள் என்பதை சொல்லிக்கொள்ளவே வெட்கமாக இருக்கிறது.

இந்நாட்டில் குடிப்பது அவமானமில்லை,பல பெண்களுடன் கூத்தடிப்பது அவமானமில்லை,திருடுவது அவமானமில்லை,ஆனால் அரவாணியாக யாராவது மாறினால் அது மட்டும் அவமானமாம்,வெட்கக்கேடு. இதில் இருந்து மீண்டு வர ஒரு பெரும் பேராட்டம் நடத்தவேண்டி உள்ளது திருநங்கைளான ஆஷாபாரதியிடம் பேசி பார்த்தால் பாசம்,பண்பு என்றால் என்ன என்பதை உணரலாம். ப்ரியா பாபுவிடம் பழகிப்பார்த்தால் உழைப்பு என்றால் என்ன என்பதையும் உணரலாம். ‘சகோதரி’கல்கியின் கட்டுரைகளை வாசித்து பார்த்தால் நம்பிக்கையின் இலக்கணத்தை உணரலாம் இப்படி எத்தனை,எத்தனையோ அரவாணி சகோதரிகள் தங்கள் அரவாணி சமூகத்தை புரட்டிப்போட போர்ப்பரணிபாடி கிளம்பியுள்ளார்கள் வாக்காளர் அடையாள அட்டை,மூன்றாம் பாலினமாக பதிவு செய்யும் உரிமை,கல்வி வேலை வாய்ப்பு,வீடு ,மனை ஒதுக்கீடு இதற்கெல்லாம் இவர்கள் தகுதியானவர்கள்தான் என்று அதிகாரத்தில் உள்ளவர்களை யோசிக்க வைத்துள்ளனர்.


இன்னும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் தங்கள் எண்ணிக்கை தனியாக காட்ட வேண்டும்,அந்த எண்ணிக்கையின் அடிப்படையில் இடஒதுக்கீடு,தேர்தலில் போட்டியிடும் உரிமை,திருமணம் செய்யும் உரிமை,குழந்தையை தத்தெடுக்கும் உரிமை என்று தங்களின் உரிமைகளை பட்டியலிடுகிறார்கள்,இவை எல்லாம் சொகுசு வாழ்க்கை வாழ்வதற்கு அல்ல, இந்த சமூகத்தில் சம அந்தஸ்துடன் வாழும் உரிமைக்குதான்.அந்தஸ்து,கவுரம் எதிலும் குறைவின்றி அரவாணிகள் இந்த சமூகத்தில் மக்களோடு மக்களாக வாழவேண்டும் என்பது அரவாணிகளின் கருத்து மட்டுமல்ல நம் கருத்தும் கூட. தொட்டுவிடும் துõரத்தில் உள்ள தங்கள் லட்சியங்களை இவர்கள் நிச்சயம் ஒரு நாள் எட்டிவிடுவார்கள் அவர்களது ஒட்டத்திற்கு உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமாலிருந்தாலே உத்தமம்.

ஆணும் பெண்ணுமாய் தோன்றும் அர்த்தநாரீஸ்வரரை கையெடுத்து கும்பிடும் கைகள் அதே குணாதிசயத்துடன் கூடிய அரவாணிகளை கும்பிடவேண்டியதில்லை,ஆனால் வெறுத்து ஒதுக்கவேண்டாம் ஒரு மழைக்கால ஈசலைப் போல வாரிசுகளின்றி வாழ்க்கையை முடித்துக்கொள்ளும் அரவாணிகளை உங்கள் மகளாக,தங்கையாக,அக்காவாக கருதுங்கள்,கையொலி எழுப்பியபடி உங்களை கடந்து செல்பவர்களுக்கு நம்மால் எப்படி உதவ முடியும் என இனி கருணையோடு பாருங்கள் .

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JWR - madurai,இந்தியா
20-மே-201311:21:22 IST Report Abuse
JWR உண்மையான கருத்துக்கள் அனைவரும் உணரவேண்டிய கருத்துக்கள் அணைத்து உரிமை களையும் அவர்களுக்கும் நாம் கொடுத்தே ஆகவேண்டும் என்பதில் எவ்வித மாற்று கருத்தும் இருக்க முடியாது
Rate this:
Cancel
paul - chennai,இந்தியா
09-மே-201314:45:13 IST Report Abuse
paul ஒரு நல்ல சமுதாயத்தை ஒருவாக்க எல்லாரும் பாடுபட வேண்டும் .இந்த கட்டுரை படித்ததில் என் மனம் அறாத வேதனை அடைந்தேன்.எல்லா குறை மற்றும் நிறை எல்லாரிடமும் உண்டு
Rate this:
Cancel
Hariganesan Sm - uthamapalayam,இந்தியா
07-மே-201313:44:42 IST Report Abuse
Hariganesan Sm ஒன்று இரண்டு பேர் அரவாணிகள் தவறு செய்வது அவர்களில் எல்லோரையும் ஒரு சேர பார்க்கத் தோன்றுகிறது..மற்றபடி கட்டுரையாளர் விவரித்திருப்பது உண்மையே. பாவம் அவர்கள். மக்கள் மத்தியில் நல்ல சமூகப் பார்வை பதிய வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X