குஜராத்தில் விவசாயப் புரட்சி

Updated : ஏப் 22, 2013 | Added : ஏப் 22, 2013 | கருத்துகள் (19)
Share
Advertisement
பாலைவனத்துக்கும் கட்டாந்தரைக்கும் பெயர்போன மாநிலம் குஜராத். 75 சதவீதம் வறண்ட நிலப்பரப்பு. மிகக்குறைவான மழை. ஆனால் இங்கே விவசாயத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து 9.6 சதவீதத்தில் முன்னேறி வருகிறது (இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதம்). ஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலங்களின் அளவு அதிகரித்துகொண்டேபோகிறது. பாலைவனம், சோலைவனமாக மாறி
குஜராத்தில் விவசாயப் புரட்சி

பாலைவனத்துக்கும் கட்டாந்தரைக்கும் பெயர்போன மாநிலம் குஜராத். 75 சதவீதம் வறண்ட நிலப்பரப்பு. மிகக்குறைவான மழை. ஆனால் இங்கே விவசாயத்தின் வளர்ச்சி அதிகமாக உள்ளது. அதுவும் கடந்த 10 ஆண்டுகளாகத் தொடர்ந்து 9.6 சதவீதத்தில் முன்னேறி வருகிறது (இந்திய அளவில் விவசாயத்தின் வளர்ச்சி 3.5 சதவீதம்).

ஆண்டுக்கு ஆண்டு விவசாய நிலங்களின் அளவு அதிகரித்துகொண்டேபோகிறது. பாலைவனம், சோலைவனமாக மாறி வருகிறது. தரிசு நிலங்களெல்லாம் இப்போது விவசாய நிலங்களாக மாறி வருகின்றன. அதிக விலை கொடுத்து விதைகளை வாங்கிய காலம் போய், விவசாயிகளே தரமான விதைப் பண்ணைகளை நடத்தி வருகின்றனர். பஞ்சாப் போன்ற மற்ற மாநில விவசாயிகள் எல்லாம் குஜராத்தைத் தேடிவரும் நிலைக்கு அந்த மாநிலம் வளர்ச்சி கண்டுள்ளது. குஜராத்தில் விவசாயம் இந்த அளவுக்கு வளர்ச்சி காண, மோடி அப்படி என்னதான் மந்திரம் போட்டார்?

குஜராத்தில் கடந்த 10 ஆண்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தடுப்பணைகளை நரேந்திர மோடி அரசு கட்டியுள்ளது. பல்லாயிரக்கணக்கான ஏரி, குளம், குட்டைகள் தூர் வாரப்பட்டு அந்தந்தப் பகுதி மக்களால் பராமரிக்கப்பட்டு வருகின்றன.

2000-ம் ஆண்டுக்கு முன்பு சௌராஷ்டிரா போன்ற வறண்ட பகுதிகளில் எப்போதாவது பெய்யும் குறைந்த அளவு மழைநீர்கூட உடனே கடலில் சென்று வீணாகிவிடும். இப்போது நிலைமை அப்படி இல்லை. தடுப்பணைகள் அதிக அளவில் கட்டப்பட்டு தண்ணீரைத் தேக்கி வைக்கின்றனர். இதுபோகக் குளம், குட்டைகள் வேறு. இப்போது அப்பகுதி விவசாய பூமியாக மாறிவிட்டது.

கட்ச் பகுதியும் அப்படித்தான். இங்கு 18 முதல் 19 செண்டிமீட்டர்வரை நீர் ஆவி ஆகிவிடும். ஆனால் பெய்யும் மழையின் அளவோ 7.61 செண்டிமீட்டருக்கும் குறைவாகவே இருக்கும். ஆயிரம் அடி தோண்டினால்கூடத் தண்ணீர் கிடைப்பது அரிது. இந்தப் பகுதிகளையும் விவசாயம் செய்யும் நிலமாக மாற்றியது மோடியின் மாபெரும் சாதனை.

ஒரு சொட்டு நீரைக்கூட வீணாக்கக்கூடாது என்ற உந்துதலோடு மக்கள் இயக்கம் ஒன்றை ஆரம்பித்தார் மோடி. சௌராஷ்டிரா, வடக்கு குஜராத் போன்ற வறண்ட பகுதிகளிலும் விவசாயம் செய்ய முடியும் என்ற நம்பிக்கையை மக்களுக்கு ஏற்படுத்தினார். மழை நீரைச் சேமிக்க என்னென்ன வழிகள் எல்லாம் உண்டோ, அனைத்து முறைகளையும் கையாண்டார். தடுப்பணைகள் கட்டியதோடு நின்றுவிடாமல், புதிதாகக் குளம், குட்டைகளையும் வெட்டினார். ஏற்கெனவே இருந்த ஏரி, குளம், குட்டை போன்றவற்றையும் தூர் வாரி, ஆழப்படுத்தி, அகலப்படுத்தினார்.

வறண்ட பகுதிகளிலிருந்து பிழைப்புக்காக சூரத் போன்ற நகரங்களுக்கு இடம் பெயர்ந்தவர்கள், தங்கள் கிராமங்களுக்கே மீண்டும் திரும்பி விவசாயப் பணிகளைத் தொடங்கினர்.

கடந்த 2000-ம் ஆண்டுவரை வெறும் 10,700 தடுப்பணைகள் மட்டுமே குஜராத் மாநிலம் முழுதும் இருந்தன. ஆனால் 2008-ம் ஆண்டு முடிவில் 1,13,738 தடுப்பணைகளாக அது உயர்ந்தது. இதுதவிர 2,40,199 குளங்களும் விவசாயத்துக்காக வெட்டப்பட்டுள்ளன.

நதி இணைப்பு

நமது நாட்டில் நதி இணைப்புத் திட்டங்கள் பற்றி, நதிகளைவிட நீளமாகப் பேசிக்கொண்டே இருக்கின்றனர். ஆனால் குஜராத்தில் நரேந்திர மோடி பேசவில்லை, செயல்படுத்திக் காட்டியுள்ளார். நர்மதை நதியை 17 வறண்ட ஆறுகளுடன் இணைத்து அவை அனைத்தையும் ஜீவ நதி ஆக்கியுள்ளார். இதுபோல், காடானா நீர் தேக்கங்களிலிருந்து உபரியாகும் தண்ணீர் வறண்ட மாவட்டங்களை நோக்கித் திருப்பிவிடப்பட்டுள்ளது. இவற்றின்மூலம் பொட்டல் காடான 7 மாவட்டங்கள் செழிப்படைந்துள்ளன. 332 கிலோ மீட்டர் தூரத்துக்கு விவசாயம் விசாலமாகியுள்ளது.

விவசாயத்துக்குத் தேவையான தண்ணீரைப் பயன்படுத்துவதிலும் மோடி அரசு முத்திரை பதித்துள்ளது. 1990-களில் தமிழகம், கர்நாடகம், ஆந்திரம், மகாராஷ்டிரம் போன்ற மாநிலங்கள்,சொட்டு நீர்ப் பாசனத்தில் முன்னணியில் இருந்தன. ஆனால் 2011-ம் ஆண்டு நிலவரப்படி குஜராத்தில் 3 லட்சத்து 30 ஆயிரம் ஏக்கர் நிலத்தில் சொட்டு நீர்ப் பாசன விவசாயம் நடக்கிறது. இதனால் குஜராத் இப்போது சொட்டு நீர்ப் பாசனத்தில் இந்தியாவில் முதல் மாநிலம் ஆகிவிட்டது.

விவசாயப் பல்கலைக்கழகங்கள்

குஜராத் மாநிலத்தில் இருந்த ஒரே ஒரு விவசாயப் பல்கலைக்கழகம், நான்கு பல்கலைக்கழகங்களாக அதிகரிக்கப்பட்டது. அதோடு ஒவ்வொரு விவசாயப் பல்கலைகழகமும் ஒரு குறிப்பிட்ட துறையில் ஆழமாக ஆராய்ச்சி செய்ய அறிவுறுத்தப்பட்டது.இந்தப் பல்கலைக்கழகங்கள் அரசின் பல்வேறு விவசாயத் திட்டங்களுக்கு உதவி புரிவதோடு, தரமான விவசாய அறிஞர்களை உருவாக்கி வருகின்றன.

உழவர் திருநாள்

உழவர்களுக்கான உண்மையான திருவிழா. 2005-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது தொடர்ந்து ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது. குஜராத்தில் உள்ள பதினெட்டாயிரத்துக்கும் அதிகமான விவசாயக் கிராமங்களில் உள்ள விவசாயிகளை அவர்களின் கிராமத்துக்கே சென்று அரசு அதிகாரிகள் சந்திக்கின்றனர். விவசாயம் சார்ந்த ஒரு லட்சத்துக்கும் அதிகமான அரசு அதிகாரிகள், கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளை நேரில் சந்திக்கின்றனர். விவசாயப் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த அறுநூறுக்கும் மேற்பட்ட அறிஞர்களும் அவர்களுடன் செல்கின்றனர். அதாவது விவசாயம் சார்ந்த அதிகாரிகள், அறிஞர்கள், ஊழியர்கள் இவர்களுக்கெல்லாம் ஒரு மாத வேலை அலுவலகங்களில் அல்ல, கிராமங்களில்தான். இதுதான் இந்த விவசாயத் திருவிழாவின் சிறப்பம்சம்.

இந்தத் திருவிழாவின்போது, விவசாயத் துறையில் ஏற்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள், விவசாயத்தின் புதிய வரவுகள் போன்றவை விவசாயிகளுக்கு விளக்கப்படுகின்றன. விவசாயிகளின் பிரச்னைகள், மழை நிலவரம், மகசூல் நிலவரம் போன்ற அனைத்து விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. முக்கியமாக ஒவ்வொரு விவசாயிக்கும் மண் பரிசோதனை அட்டை வழங்கப்படுகிறது. விவசாயிகளின் நிலத்தை ஆய்வு செய்து, அந்த நிலத்தில் எத்தகைய பயிர்களைப் பயிரிடலாம், எத்தகைய உரங்களை எந்தெந்த நேரங்களில் இடலாம் போன்ற விவரங்கள் அந்த அட்டையில் பதிவு செய்யப்படுகின்றன. அதோடு காலப்போக்கில் மண்ணில் ஏற்படும் மாற்றங்களும் கண்காணிக்கப்படுகின்றன.

இந்தத் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, கால்நடைகளுக்குத் தடுப்பூசிகள் போடப்படுவதோடு, செயற்கைக் கருத்தரிப்பு போன்றவற்றால் ஏற்படும் பயன்களும் எடுத்துச் சொல்லப்படுகின்றன.

இதுதவிர, ஒவ்வொரு கிராமத்திலும் ஐந்து பரம ஏழைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு விவசாயத்துக்த்கு தேவையான அடிப்படைக் கருவிகள் இலவசமாக வழங்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு, அவர்களின் விளைபொருட்களை எங்கு கொண்டு சென்றால் நல்ல விலைக்கு விற்கலாம், அவ்வப்போது உள்ள விளைபொருட்களின் விலை நிலவரம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படுகின்றன.

2009-ல் 30 நாட்கள் நடந்த இந்த விவசாயத் திருவிழாவில் சுமார் 7 லட்சம் பேருக்குமேல் கலந்துகொண்டார்கள். முதல்வர் தனது அனைத்து அமைச்சரவை சகாக்களோடும் கலந்துகொண்டார். 28 ஐ.ஏ.எஸ் ஆலுவலர்கள் உட்பட மாவட்ட, தாலுகா அதிகாரிகளும், 1,700 விவசாய அறிஞர்களும் மற்றும் பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டனர்.

கால்நடை விடுதி

கால்நடைகளுக்கு என்று விடுதி அமைக்கும் முறை, உலகிலேயே குஜராத்தில் மட்டும்தான் உள்ளது. ஒரு கிராமத்தில் உள்ள விவசாயிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இந்தக் கால்நடை விடுதியை ஏற்படுத்துகின்றனர். அவர்களின் கால்நடைகள் அனைத்தையும் அங்கு வைத்துப் பராமரிக்கின்றனர். இதனால் கால்நடைகளைப் பராமரிக்க வீட்டுக்கு ஒருவர் தேவை இல்லை. மொத்த கிராமத்துக்கும் ஒரு சிலர் இருந்தாலே போதும்.

இந்தக் கால்நடை விடுதியை அந்தக் கிராம விவசாயிகளே நிர்வகிக்கின்றனர். மொத்தமாகக் கால்நடைகளைப் பராமரிப்பதால், அவர்களால் பேரம்பேசி, கால்நடைத் தீவனங்களைக் குறைந்த விலைக்கு வாங்க முடிகிறது. இத்தகைய கால்நடை விடுதிகள்மூலம் கால்நடை பராமரிக்கும் செலவும் கணிசமாகக் குறைந்துள்ளது.

அரசு சார்பில் ஆண்டுதோறும் கால்நடை மருத்துவர்கள் கிராமங்களுக்கே சென்று கால்நடைகளுக்கு மருத்துவப் பரிசோதனை செய்கின்றனர். தேவையான மருந்துகளையும் அப்போது வழங்குகின்றனர்.

விவசாய வருமானம்

விவசாயத்துக்கு மோடி அரசு கொடுத்துவரும் முக்கியத்துவம் காரணமாக விவசாயத்திலிருந்து கிடைக்கும் நிகர வருமானம் 9,000 கோடி ரூபாயிலிருந்து, 50,000 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. பால் ஏற்றுமதியில் இந்தியா உலகில் முதலிடத்தில் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம் குஜராத்.

இப்படியாக, நாட்டில் எங்கு பார்த்தாலும் விவசாயிகள் நிலை கவலைக்கிடமாக இருந்துகொண்டிருக்கும்போது, இயற்கையிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்காத குஜராத்தில் முயற்சியை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு விவசாயம் இன்று பீடு நடை போடுகிறது.

( இதன் அடுத்த பகுதி 29/ 04/ 2013 அன்று வெளியாகும்)

இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html

பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள http://www.kizhakku.in


(நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை)

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.BOOPATHI - tirupur,இந்தியா
27-மே-201314:44:48 IST Report Abuse
R.BOOPATHI ஒரு முறையாவது மோடி அவர்களை பாரத பிரதமர் ஆக்க வேண்டும்
Rate this:
Cancel
naveen - bangalore,இந்தியா
29-ஏப்-201322:05:37 IST Report Abuse
naveen ரஜினி செகண்ட் ஹல்ப் படம் மாறி இருக்குது .. நம்பவே முடியல இப்படி எல்லாம் பண்ண முடியுமா
Rate this:
Cancel
Narayan - Zurich,சுவிட்சர்லாந்து
29-ஏப்-201313:21:27 IST Report Abuse
Narayan பரம்பரை பரம்பரையாக ஹிமாலய கொள்ளைகள் அடித்து தன துதி பாடும் எல்லோரையும் கொள்ளை அடிக்க விட்டு மக்களை எல்லா விடயங்களிலும் பிரித்து ஆண்டு இந்துக்களை கண்மூடித்தனமாக எதிர்த்தால் அதுவே மதச்சார்பின்மை என்ற போலி மதச்சார்பின்மை கொண்டு எங்களை நீங்கள் 65 வருடங்கள் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல் ஆண்டது போதும். பாஜகவின் மோடியை ஆதரிப்போம், 2/3 ஆதரவோடு குறைந்தது 15 வருடங்களுக்கு வாய்ப்பு தருவோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X