பார்லிமென்ட் கூட்டுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

Updated : ஏப் 25, 2013 | Added : ஏப் 24, 2013 | கருத்துகள் (2)
Share
Advertisement
பார்லிமென்ட் கூட்டுக்குழுக் கூட்டம் ஒத்திவைப்பு

மிகுந்த பரபரப்பான சூழ்நிலையில், "ஸ்பெக்ட்ரம்' ஊழலை விசாரிக்கும், பார்லிமென்ட் கூட்டுக் குழுவின் கூட்டம், இன்று நடைபெற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகள் அமளியால் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

2-ஜி விவகாரம் தொடர்பாக பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் தலைவர், பி.சி.சாக்கோவின் வரைவு அறிக்கை நிறைவேறும் வகையில், ஓட்டெடுப்பு நடக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

"2ஜி ஸ்பெக்ட்ரம்' முறைகேடு குறித்த, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கை, கடந்த வாரம் வெளியானது. இதை சற்றும் எதிர்பார்க்காத எதிர்க்கட்சிகள், கூட்டுக்குழுவின் தலைவரான, காங்கிரஸ் எம்.பி., சாக்கோ மீது, உரிமை மீறல் நோட்டீஸ் அளித்துள்ளனர். இந்நிலையில், மகாவீரர் ஜெயந்திக்காக, ஒரு நாள் விடுமுறைக்கு பிறகு, பார்லிமென்ட் இன்று கூடவுள்ளது. அது போல், பார்லி கூட்டுக்குழுவின் ஆலோசனை கூட்டமும், இன்று கூடியது. இதில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர்.
கூட்டுக்குழு அறிக்கை, பத்திரிகைகளில் கசிந்த விவகாரம், அரசியல் அரங்கில் சூறாவளியை கிளப்பியுள்ள நிலையில், இன்றைய கூட்டம் மிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.பார்லிமென்ட் வளாகத்தில், பகல், 3:00 மணிக்கு இந்த கூட்டம் கூடவுள்ளது. அதற்கு முன்னதாக, காலையிலேயே, எதிர்க்கட்சி தலைவர்கள் கூடி, முக்கிய முடிவு எடுக்கவுள்ளனர்.


இருதரப்பும் கனஜோர்:

சாக்கோ தயாரித்துள்ள அறிக்கையை, எப்படியும் தோற்கடித்தே தீருவது என்ற முடிவில், எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில், கூட்டுக்குழுவில் அரசு தரப்பும், எதிர்க்கட்சிகள் தரப்பும் சம பலம் வாய்ந்த நிலையில் உள்ளன.சமாஜ்வாதி தலைவர், முலாயம் சிங் என்ன முடிவெடுக்கப் போகிறார் என்பதை பொறுத்து தான், இறுதி முடிவு இருக்கும் என கூறப்படுகிறது. அவர் எதிர்க்கட்சிகள் பக்கம் சாயலாம் என, கூறப்படுகிறது.மேலும், ஓட்டெடுப்பில் சம நிலை காணப்பட்டால், தலைவராக உள்ளவரும் ஓட்டுப் போட வேண்டி வரும். அத்தகைய சூழ்நிலையில், சாக்கோ தனது ஓட்டை பதிவு செய்து, அறிக்கையை வெற்றி பெறச் செய்துவிடுவார் எனவும் நம்பப்படுகிறது.சாக்கோவின் இந்த செயலை தடுப்பதிலும் எதிர்க்கட்சிகள் முனைப்பாக உள்ளன. இதற்காக, அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளன.


பலம் என்ன?

தலைவர் பதவியை விட்டு, சாக்கோ நீக்கப்பட்டால், அவர் ஓட்டுப்போட வழியில்லாமல் போய்விடும். அதை வைத்து, அறிக்கையை தோற்கடித்து விடலாம் என, எதிர்க்கட்சிகள் கணக்கு போடுகின்றன.பா.ஜ., 5, ஐக்கிய ஜனதா தளம் 2, தி.மு.க., 2, இடதுசாரிகள் 2, பிஜு ஜனதாதளம், அ.தி.மு.க., திரிணமுல் ஆகிய கட்சிகளுக்கு, தலா ஒன்று என, மொத்தம், 14 உறுப்பினர்கள், சாக்கோ வரைவு அறிக்கைக்கு எதிராக உள்ளனர். அ.தி.மு.க.வும், - தி.மு.க., வும் ஓரணியா என்ற வாதம் இதில் இல்லை. தாங்கள் மட்டும் ஊழலில் சிக்கி விட்டோம் என்ற கருத்தில், தி.மு.க.,வும், தொடர்ந்து மத்திய அரசை எதிர்க்கும், அ.தி.மு.க.,வும் இவ்விஷயத்தில் எதிர்அணியில் உள்ளன. சமாஜ்வாதியும் இவர்களுடன் சேர்ந்தால், எண்ணிக்கை 15 ஆகிறது.அறிக்கைக்கு ஆதரவாக, காங்கிரஸ் 11, தேசியவாத காங்கிரஸ் 1, பகுஜன் சமாஜ், 2 என, 14 உறுப்பினர்கள் உள்ளனர். இதனால், அரசு தரப்புக்கு, "கரணம் தப்பினால் மரணம்' என்ற நிலை காணப்படுகிறது.


முடியவே முடியாது:

இந்நிலையில், நேற்று டில்லியில், சாக்கோ அளித்த பேட்டியில், கூறியிருப்பதாவது: பார்லிமென்ட் வரலாற்றில், ஏற்கனவே, ஐந்து முறை கூட்டுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த கூட்டுக் குழுக்கள் விசாரணை நடத்திய பிரச்னைகளில் எல்லாம், ஓட்டெடுப்பு நடத்தப்படவே இல்லை. ஓட்டெடுப்புக்கான அவசியம் இல்லை என்றே கருதுகிறேன். எதிர்தரப்பில், 15 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர். எனவே, இதில் ஓட்டெடுப்பு நடத்தி தான், முடிவு காணவேண்டுமென்பது தேவையில்லாதது.கூட்டுக்குழு அறிக்கை, பத்திரிகைகளில் கசிந்த விவகாரம் குறித்து, கூட்டத்தில் பேச அனுமதிக்க மாட்டேன். இந்த விவகாரம் குறித்து, எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சார்பில், உரிமை மீறல் நோட்டீஸ், சபாநாயகரிடம் அளிக்கப்பட்டுள்ளது. விவகாரம், சபாநாயகரின் பார்வைக்கு போய்விட்டது. அங்குதான், இப்பிரச்னைக்கு அவர்தான் தீர்வு சொல்ல முடியும்.இவ்வாறு சாக்கோ கூறினார்.

ஓட்டெடுப்பின் போது, எப்படியாவது அறிக்கையை தோற்கடிக்க வேண்டுமென, எதிர்க்கட்சிகள் முனைப்பாக இருக்கும் சூழ்நிலையில், ஓட்டெடுப்பு தேவையில்லை என, சாக்கோ கூறியுள்ளதால், இன்றைய கூட்டுக்குழுக்கூட்டம் தேதி குறிப்பிடாமல் ‌ஒத்தி வைக்கப்பட்டது.


அப்போ... உண்மைதானா!

கூட்டுக்குழு விவகாரம் குறித்து, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, பா.ஜ., மூத்த தலைவர், யஷ்வந்த் சின்கா, நேற்று கடிதம் எழுதியுள்ளார்.அதில், "கூட்டுக்குழு முன் ஆஜராகி, விளக்கம் தர இது சரியான தருணம். இந்த முக்கிய நேரத்திலும், மவுனம் காக்கிறீர்கள். இதைப் பார்க்கும்போது, "மாஜி' அமைச்சர் ராஜா சார்பில் இதுவரை கூறப்பட்டு வரும்,"ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், பிரதமரின் ஒப்புதல் பேரில் தான் செயல்பட்டேன்' என்ற, வாக்குமூலம் உண்மையாகிறது'என, தெரிவித்துள்ளார்.ஏற்கனவே, இரண்டு கடிதங்கள், பிரதமருக்கு எழுதப்பட்டுள்ள நிலையில், யஷ்வந்த் சின்கா அனுப்பியுள்ள மூன்றாவது கடிதம் இது, என்பது குறிப்பிடத்தக்கது.
ஜே.பி.சி. தலைவர் சாக்கோ கூறுகையில், உறுப்பினர்களுடன் கலந்து ஆலோசனை நடத்திய பின்னரே கூட்டம் எப்போது கூடும் தேதி அறிவிக்கப்படும் என்றார்.

- நமது டில்லி நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
K.Balasubramanian - Reading RG5 1DG ,யுனைடெட் கிங்டம்
25-ஏப்-201311:13:31 IST Report Abuse
K.Balasubramanian நல்ல கண் துடைப்பு நிகழும்.
Rate this:
Cancel
marie antoine - paris,பிரான்ஸ்
25-ஏப்-201301:09:04 IST Report Abuse
marie antoine வியாபாரி கட்சியுடன் மீண்டும் கூட்டணி அமைப்பது அ தி மு க வுக்கு நல்லது அல்ல MAM FRANCE
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X