insident | பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மறுப்பு * ஆனைமலை அருகே சாலைமறியல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பிரேத பரிசோதனை செய்ய டாக்டர் மறுப்பு * ஆனைமலை அருகே சாலைமறியல்

Added : ஏப் 26, 2013

ஆனைமலை, ஏப். 27 -
ஆனைமலை அருகே, மரத்திலிருந்து தவறி விழுந்து இறந்தவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மறுத்த டாக்டரை கண்டித்து, பழங்குடியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.


கோவை மாவட்டம், பொள்ளாச்சி வனச்சரகம் சின்னார்பதி செட்டில்மெண்ட்டில் வசித்து வந்தவர் பழங்குடி இனத்தை சேர்ந்த கொம்பன்,36. கடந்த 22ம் தேதி இரவு ஆழியாறு அருகே உள்ள நெல்லி மரத்தில் ஏறினார்.


அப்போது, மரக்கிளை உடைந்ததில் அவர் கீழே விழுந்து இறந்தார். அந்த இடம் முட்புதராக இருந்ததால் யாருக்கும் தெரியவில்லை. நேற்று முன்தினம் காலை 11.30 மணியளவில் தெரியவந்தது. சம்பவ இடத்துக்கு சென்ற ஆழியாறு போலீசார், கோட்டூர் அரசு மருத்துவமனை டாக்டர் தங்கவேலுவிடம், பிரேத பரிசோதனை செய்ய அறிவுறுத்தினர்.


ஆனால், அவர் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார். அதன்படி அங்கும் தகவல் தெரிவித்தனர். அங்கிருந்து எந்த மருத்துவரும் பிரேத பரிசோதனை மேற்கொள்ள சம்பவ இடத்துக்கு வரவில்லை. இதையடுத்து, சுகாதாரத்துறை இணை இயக்குனர் இளங்கோவனுக்கு தகவல் தெரிவித்தனர்.


பொள்ளாச்சி அரசு மருத்துவமனை டாக்டர் சுரேஷ்ஜோசப்; போலீசாரிடம்; கோட்டூரில் அரசு மருத்துவமனை உள்ளது. அங்கு தொடர்பு கொள்ளாமல்; என்னை ஏன் தொந்தரவு செய்கிறீர்கள். நான் சம்பவ இடத்துக்கு வந்தாலும், பிரேத பரிசோதனை செய்யமாட்டேன் என்று கூறினார்.


பின்னர் பொள்ளாச்சியிலிருந்து மாலை 5.00 மணிக்கு ஆழியாறு வந்த டாக்டர் உடலை பார்த்துவிட்டு, சூரியஒளி போதாது என்று திரும்பி சென்றார்.


இதனால் ஆத்திரமடைந்த மலைவாழ் மக்கள்; உடல் அழுகிய நிலையில் உள்ளதால், வேண்டுமென்றே பிரேத பரிசோதனை செய்யாமல் டாக்டர் செல்கிறார் என்று கூறி நேற்றுமுன்தினம் மாலை 6.00 மணிக்கு மறியல் செய்தனர்.


போலீசார் பேச்சு நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. நேற்று காலை 10.00 மணிவரை பொறுமை காத்த பழங்குடியின மக்கள்; டாக்டர்கள் யாரும் வராததால் ஆத்திரமடைந்து மீண்டும் வால்பாறை ரோட்டில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஆழியாறு சின்னார்பதி இடைப்பட்ட பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.


மறியல் நடப்பதை அறிந்தவுடன், பொள்ளாச்சியிலிருந்து டாக்டர் குழுவினர் காலை 11.00 மணிக்கு, சம்பவ இடத்துக்கு வந்தனர். அப்போது பழங்குடியினர் அவர்களையும் முற்றுகையிட்டனர். சமரசத்துக்கு பின் பிரேத பரிசோதனை நடந்தது.




Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X