சென்னை : தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மனைவி சிவகாம சுந்தரி, "எங்கள் மகன் அறிவுநிதியால், எங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளது' என, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்துள்ளார். தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மூத்த மகன், மு.க.முத்துவின் மனைவியும், மறைந்த திரைப்பட பின்னணி பாடகர் சிதம்பரம் ஜெயராமனின் மூத்த மகளுமான, சிவகாம சுந்தரி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில்,நேற்று கொடுத்த புகார் மனு விவரம்:
எனக்கு, இரண்டு முறை, தலையில், அறுவை சிகிச்சை நடைபெற்றுள்ளது. தற்போது நான், மேலும், உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளேன். இந்நிலையில், எனது மகன் அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர், என்னிடம் உள்ள பணம் மற்றும் சொத்துக்களுக்காக, தினமும் தொல்லை கொடுக்கின்றனர்.
துரத்தி விட்டார்
; "ஆள் வைத்து அடித்து, எல்லாவற்றையும் பிடுங்கி விடுவேன்' என, மிரட்டுவதுடன், தகாத வார்த்தைகளால், பேசி வருகின்றனர். எங்களுக்கு, சென்னை கோபாலபுரத்தில், சொந்த வீடு உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், என் மகன் அறிவுநிதி தந்திரமாக பேசி, என்னையும், என் கணவரையும் வீட்டை விட்டு துரத்தி, அந்த வீட்டை, வாடகைக்கு விட்டு அனுபவிக்கிறார்.
தற்போது, 10,000 ரூபாய் வாடகை கொடுத்து, கிழக்கு கடற்கரை சாலை, கானாத்தூரில் உள்ள ஒரு வீட்டில், வசித்து வருகிறோம். அறிவுநிதி, எங்களுக்கு துரோகம் செய்தது மட்டுமல்லாமல், தொடர்ந்து மிரட்டி வருவதால், எங்களுக்கு பாதுகாப்பு இல்லை. எங்களது மனமும், உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. வயதான காலத்தில், எங்களால், இந்த கொடுமைகளை தாங்கி கொள்ள முடியவில்லை. எங்கள் உயிருக்கு பாதுகாப்பும் இல்லை. எனவே, எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். அறிவுநிதி, அவரது மனைவி பூங்கொடி, மாமியார் யோகமங்களம் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரபரப்பு பேட்டி ; புகார் மனு கொடுத்த பின், சிவகாமசுந்தரி, நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு அறிவுநிதி என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். மகளுக்கு, திருமணமாகி விட்டது. அவரும், அவர் கணவரும், எங்களுக்கு பல்வேறு வகையில் உதவி செய்கின்றனர்.
சென்னை, கோயம்பேட்டில், என் பெயரில் உள்ள கடை மூலம், மாதந்தோறும், 40,000 ரூபாயும்; என் கணவருக்கு, மாதந்தோறும், 75,000 ரூபாயும் வருமானம் வருகிறது. இதை கொண்டு மருத்துவம் மற்றும் அன்றாட செலவுகளை செய்து வருகிறோம்.
கார் கூட இல்லை ; என் மாமனார் கருணாநிதி, எங்களுக்கு பல்வேறு வகையில், தொடர்ந்து உதவி புரிந்து வருகிறார். அவர் தான், எங்களுக்கு கார் வாங்கி கொடுத்தார். தற்போது, அந்த காரும் பழுதடைந்து விட்டது. மருத்துவமனைக்கு கூட, ஆட்டோவில் சென்று வருகிறோம். இன்று புகார் கொடுக்க கூட, ஆட்டோவில் தான் வந்துள்ளேன். வயதான நிலையில், உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு, உதவி செய்யாமல், அறிவுநிதி உபத்திரவம் செய்து கொண்டு இருக்கிறார். அறிவு நிதிக்கு, சென்னையில், மூன்று வீடுகளும், கோவையில் ஒரு வீடும் உள்ளன. இது தவிர, பல்வேறு தொழில் செய்து வருகிறார். அவரால் எங்களுக்கு, ஒரு பைசா கூட பிரயோஜனம் இல்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவும் இல்லை. நல்லபடியாக இருந்தால், அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். நாங்கள், கோபாலபுரத்தில் வசித்த வீட்டையும், எங்கள் காலத்துக்கு பின், அறிவுநிதி தான், அனுபவிக்க போகிறார்.
"கோபாலபுரத்தில் உள்ள வீட்டை, என் மகளுக்கு எழுதி வைத்து விடுவோம்' என, யாரோ தூண்டி விட்டதன் பேரில், என் மகன் அறிவுநிதி, அவர் மனைவி, மாமியார் ஆகியோர் எங்களை மிரட்டி வருகின்றனர். என் மாமனார் கருணாநிதி, ஏற்கனவே உடல் நலம் குன்றி காணப்படுகிறார். குடும்ப சண்டையை சொல்லி, அவரை துன்பப்படுத்த விரும்பவில்லை. காவல் துறையிடம் புகார் அளித்துள்ளேன். சட்டப்படி நடவடிக்கை எடுப்பர் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரிசையில் நின்றார் ; சிவகாமசுந்தரி, நேற்று நண்பகல், 12:00 மணிக்கு, ஷேர் ஆட்டோவில், வீட்டில் வேலை பார்க்கும் மூதாட்டி ஒருவருடன், புகார் கொடுக்க, கமிஷனர் அலுவலகத்துக்கு வந்தார். மற்ற புகார் தாரர்களை போல், வரிசையில் அமர்ந்து, மனு கொடுத்து விட்டு, மதியம், 1:50 மணிக்கு சென்றார். மறைந்த திரைப்பட பின்னணி பாடகர், சிதம்பரம் ஜெயராமனின் சகோதரி பத்மாவதி தான், கருணாநிதியின் முதல் மனைவி. மு.க.முத்து பிறந்த சில நாட்களிலேயே, பத்மாவதி இறந்து விட்டார் .அதன் பின், சகோதரி மகன் மு.க.முத்துவுக்கே, தன் மகள், சிவகாம சுந்தரியை, சிதம்பரம் ஜெயராமன் திருமணம் செய்து வைத்தார்.