நேற்று வெளியான பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், கிராமப்புறங்களைச் சார்ந்த பள்ளி மாணவர்கள் தான் அதிக மதிப்பெண்கள் எடுத்து, மாநில அளவில் சாதனை படைத் துள்ளனர். மிகப்பெரிய, "பேனர்' இல்லாத பள்ளிகள், அடிக்கடி மின்வெட்டால் அவதி போன்ற நிலைகள் இருந்தாலும், கிராமப்புற மாணவர்கள் மதிப்பெண்களை வாரிக் குவித்துள்ளனர். ஆனால், சென்னை போன்ற நகரங்களில் உள்ள பள்ளிகள், தேர்வில் சாதிக்காதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
தரமான கல்வி என்பது நகர்ப்புறங்களில் உள்ள பள்ளிகளில் மட்டுமே இருக்கிறது, கிராமப்புறங்களைச் சார்ந்த பள்ளிகளில் கல்வித்தரம் கிடையாது; அந்தப் பள்ளிகளில் படித்தால் சாதிக்க முடியாது என்ற ஒரு பொதுவான கருத்து அனைவரிடமும் இருக்கிறது. இந்தக் கருத்து தவறு என்பதை, சமீபகால தேர்வு முடிவுகள் வெளிக்காட்டி வருகின்றன. சாதிப்பதில் நகர்ப்புறப் பள்ளி தான் பிரதானமான பங்கு வகிக்கிறது என்ற கருத்தை தவிடுபொடியாக்கும் விதத்தில், சிறிய நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சார்ந்த மாணவர்கள், படிப்பில் அசத்தி வருகின்றனர். சென்னை போன்ற நகர்ப்புறங்களில் உள்ள பல பள்ளிகள், தரமான கல்வி வழங்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்கின்றன. "பெரிய பள்ளி; உயர்வான பள்ளி' என்ற கருத்தை பரப்புவதற்காக, பல்வேறு உத்திகளை கையாள்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கு பெரும், "டிமாண்ட்' இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி வசூலிக்கின்றனர். நகரங்களில், படிப்பதற்கு ஏற்ப பல்வேறு வசதிகள் இருக்கின்றன.
இந்த ஆண்டு தேர்வின்போது, நகர்ப்புறங்கள் அல்லாத பகுதிகள் தொடர் மின்வெட்டு இருந்தது. சென்னை போன்ற நகரங்களில் அந்தளவிற்கு மின்வெட்டு கிடையாது. அப்படியிருந்தும், தேர்வில் நகர்ப்புற மாணவர்கள் பெரிய அளவில் சாதிக்கவில்லை. நேற்று வெளியான பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில், மாநில அளவிலான முதல் மூன்று இடங் களை 15 மாணவர்கள் பிடித்துள்ளனர். இதில், கரூர் மாவட்டம் தலப்பாபட்டியைச் சேர்ந்த சிவபிரியா, 494 மதிப்பெண்கள் எடுத்து, இரண்டாம் இடம் பிடித்தார். அதேபோல், நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள ஏ.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளி மாணவி ரம்யா, கரூர் மாவட்டம் புன்னம்சத்திரம் சேரன் மேல்நிலைப்பள்ளி மாணவர் ராஜ் சூர்யா, திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி செயின்ட் ஜோசப் பள்ளி மாணவி நஸ்ரீன் ஆகியோர், 493 மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடம் பிடித்துள்ளனர்.
பாட வாரியாக, மாநில அளவில் ரேங்க் எடுத்தவர்களின் பட்டியலிலும், சிறிய நகர்ப்புறங்கள் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் தான் சாதித்துள்ளனர். கோபிசெட்டிபாளையம், கோவை பெரியநாயக்கன்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள பள்ளி மாணவர்கள், அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். கிராமப்புறங்களில் சாதாரண, சுமாரான கல்வித்தரம் கொண்ட பள்ளிகளாக இருந்தாலும், அங்கு மாணவர்களின் கவனத்தை சிதறடிக்கும் வகையிலான சூழ்நிலைகள் கிடையாது. இதனால், படிப்பில் கவனம் செலுத்தி முழுமையாக உழைக்கின்றனர். நகர்ப்புறங்களில், சினிமா, பீச், பார்க், ஓட்டல் என விதம் விதமாக பொழுது போக்குகின்றனர். பிள்ளைகளின் நடவடிக்கைகளை பெற்றோரும் சரியாக கண்டுகொள்வதில்லை. பள்ளிகளும், வருமானம் வந்தால் போதும் என்று நினைக்கின்றன. இதுபோன்ற காரணங்களால், நகர்ப்புற மாணவர்களின் சாதனை சரிந்து கொண்டே வருகிறது.
- நமது சிறப்பு நிருபர் -