சண்டிகார் : "தான் செய்த குற்றத்துக்கு, முன்னாள் டி.ஜி.பி., ரத்தோர் வருந்தவில்லை' என்று, ருச்சிகா(14) மானபங்க வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ருச்சிகா மானபங்க வழக்கில் குற்றவாளியான முன்னாள் டி.ஜி.பி., ரத்தோருக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி, மாவட்ட கூடுதல் கோர்ட் நேற்று முன்தினம் உத்தரவிட்டது. 103 பக்கங்கள் அடங்கிய அந்தத் தீர்ப்பில், நீதிபதி குர்பிர் சிங் கூறியிருப்பதாவது: இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு சட்டச் சிக்கலில் மாட்டியுள்ளனர். இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 354 பிரிவின் படி, குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்கியிருக்க வேண்டும் என்றாலும், அவரது உடல் நிலை கருதியும், அவரது மகளின் இதயநோய் காரணமாகவும், அவரது பணிக்காலத்தின் நடத்தை காரணமாகவும், இந்த வழக்கில் 200 நாட்கள் கோர்ட்டில் செலவிட்டதன் காரணமாகவும், அவருக்கு ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தத் தண்டனையும் விதிக்கப்படவில்லை என்றால் நீதிமுறையின் மீது மக்கள் நம்பிக்கை இழந்து விடுவர். ருச்சிகா தற்கொலை செய்து கொண்டது குறித்து மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஒரு மதிப்பு மிக்க வாழ்க்கை போய்விட்டது. மேலும், டி.ஜி.பி., ஆர்.ஆர்.சிங் அளித்த அறிக்கையின்படி, குற்றவாளி மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அதோடு மட்டுமல்லாமல், குற்றவாளி பதவி உயர்வு பெற்று அரியானாவின் டி.ஜி.பி., யாக ஓய்வு பெற்றிருக்கிறார். ஒரு போலீஸ் உயரதிகாரி என்ற முறையிலும், டென்னிஸ் அசோசியேஷன் தலைவர் என்ற முறையிலும், இளைய சமுதாயத்தினரை விளையாட்டில் அவர் ஊக்குவித்திருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தி உள்ளார். இவரைப் போன்றவர்கள் விளையாட்டுத் துறையில் இருப்பதால்தான், பெற்றோர் தங்கள் பெண் குழந்தைகளை போட்டிகளில் விளையாட அனுப்புவதற்குப் பயப்படுகின்றனர். இவரைப் போன்றவர்களால் தான் நமது நாடு விளையாட்டு மற்றும் பிறதுறைகளில் பின்னடைவைச் சந்தித்து வருகிறது. இவர்களைப் போன்றவர்கள் விளையாட்டுத் துறையில் இருக்கும் வரை, அதில் பெண்களின் எண்ணிக்கை அதிகரிக்காது. உண்மையான திறமையின் மூலம் நம் நாட்டை முன்னுக்குக் கொண்டு வரமுடியாது. இவ்வாறு நீதிபதி குர்பிர் சிங் தன் தீர்ப்பில் தெரிவித்தார்.
இதற்கிடையில், சிறையில் இரண்டு இரவுகளைக் கழித்த ரத்தோர், தன் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, உடனடியாக ஜாமீன் வழங்கக் கோரி, மனு தாக்கல் செய்தார். ரத்தோரின் மனைவியும் வக்கீலுமான ஆபா, இந்த மனுவை நாளை (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதை நிராகரித்து விட்ட பஞ்சாப் மற்றும் அரியானா ஐகோர்ட், விசாரணையை நாளைக்குத் தள்ளி வைத்துவிட்டது. மனுவில், "இந்தத் தீர்ப்பு, ஊடகங்களின் நெருக்கடியால் வெளிவந்துள்ளது' என்று ஆபா குறிப்பிட்டுள்ளார்.