வைகாசி விசாகத் துதி: முருகப்பெருமானின் அவதார தினமான வைகாசி விசாக நாளில் இந்த துதிமாலையைப் பக்தியுடன் பாராயணம் செய்பவர்கள் பாவங்கள் யாவும் விலகப்பெறுவர். சகல சவுபாக்கியங்களும் பெற்று மகிழ்வர்.
* வேதங்களால் போற்றப்படுபவரே! நற்குணம் கொண்டவரே! ஆசையில்லாதவர்களுக்கு அருளைப் பொழிபவரே! அசுரர்களை துவம்சம் செய்தவரே! தெய்வயானையை மணந்தவரே! அழகில் மன்மதனை வென்றவரே! கந்தப்பெருமானே! உன்னைத் தியானிக்கிறேன்.
* தேவர் படைக்குத் தலைவரே! ஞானமே வடிவானவரே! சுகம் அருள்பவரே! பார்வதிதேவியின் புத்திரரே! நாணற்காட்டில் அவதரித்தவரே! சத்ருக்களை அழிப்பவரே! பரமேஸ்வரனின் குழந்தையே! முருகப்பெருமானே! உன்னைத் தியானிக்கிறேன்.
* குபேரனுக்கு நன்மை செய்தவரே! அன்பர்களுக்கு மதுரமாக இனிப்பவரே! வேதங்களால் துதி செய்யப்படுகின்ற ரத்தினம் போன்றவரும், சந்திரனுக்கு ஒப்பான குளிர்ச்சி பொருந்தியவரும், உலகை தன் கடைக்கண்களால் காப்பவரும், தேவமுனிவர் நாரதருக்கு குருவாக விளங்குபவருமான ஆறுமுகப்பெருமானே! உன்னைத் தியானிக்கிறேன்.
* அபயம் அளிப்பவரே! வேண்டிய வரங்களை அருள்பவரே! சந்தான பாக்கியத்தை தருபவரே! யானை முகத்தானான விநாயகரின் தம்பியே! மங்களத்தை அளிப்பவரே! பன்னிரண்டு கைகளும், ஆறு முகங்களும் கொண்ட ரத்தினமே! இம்மையிலும் மறுமையிலும் நன்மை செய் கின்ற சண்முகப்பெருமானை! உன்னைத் தியானிக்கிறேன்.
* சாதுவான பக்தர்களை விரும்புவரே! ஒளிவீசும் முகம் கொண்ட வள்ளிநாயகியை மணந்தவரே! நம்பியவர்களுக்கு நன்மை செய்பவரே! கோடி சூரியப்பிரகாசம் கொண்ட முகத்தை உடையவரே! பிரம்மாவுக்கும், சிவபெருமானுக்கும் குருவாய் இருந்து உபதேசித்தவரே! வேதவிற்பன்னர்களால் போற்றப்படுபவரே! சுப்பிரமணியப் பெருமானே! உன்னைத் தியானிக்கிறேன்.
திருப்பரங்குன்றத்தில் முதலில் வணங்க வேண்டியவர்: கைலாயத்தில் ஒருமுறை பார்வதிதேவிக்கு சிவபெருமான் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து கொண்டிருந்தார். அப்போது மயில் மீதேறி விளையாடிக்கொண்டிருந்த குழந்தை முருகன், ஓடிச் சென்று அம்மாவின் மடியில் அமர்ந்து கொண்டார். பிள்ளைப்பாசத்தில் உமையவளும் விட்டுவிட்டாள். அப்போது அம்மாவுக்கு சொல்லிக்கொண்டிருந்த பிரணவ மந்திர உபதேசத்தை முருகப்பெருமானும் கேட்டார். மந்திர உபதேசங்களை குருவிடத்தில் மட்டுமே பயிலவேண்டும் என்பது நியதி. இதை குழந்தைப் பருவத்தில் அறியாமல் மீறிவிட்டதால், பின்னாளில் அதற்குப் பரிகாரமாக, தன் தந்தை சிவனைக் குறித்து தவத்தில் ஆழ்ந்தார். அவர் தவமிருந்த இடம் திருப்பரங்குன்றம். இவ்விடத்தில், சிவபெருமான் அம்மையப்பராக ரிஷப வாகனத்தில் காட்சி தந்து அருள்செய்தார். சிவபார்வதி காட்சியளித்த இடத்தில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அது மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் என்ற பெயருடன் விளங்குகிறது. திருப்பரங்குன்றத்தில் முருகப்பெருமானைத் தரிசிக்கும் முன், சன்னதி தெருவிலுள்ள இந்தக்கோயிலுக்குச் சென்று மீனாட்சி சுந்தரேஸ்வரரை வழிபடவேண்டும் என்பது ஐதீகம்.
பக்தரின் குழந்தையான முருகன்: பகழிக்கூத்தர் என்ற புலவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டார். பலவித வைத்தியங்களை மேற்கொண்டும் அவருக்கு குணம் ஏற்படவில்லை. இறுதி முயற்சியாக திருச்செந்தூர் வடிவேலனிடம் வேண்டிக் கொண்டார். அன்றிரவு பகழிக்கூத்தரின் கனவில் தோன்றிய முருகன், தன் மீது பிள்ளைத்தமிழ் பாடும்படிக் கட்டளையிட்டான். முருகப்பெருமானை, தன் பிள்ளையாக எண்ணி பருவங்களுக்குப் பத்துபாடல்களாக நூறு பாடல்களைப் பகழிக்கூத்தர் பாடினார். இந்நூலுக்கு "திருச்செந்தூர் பிள்ளைத்தமிழ்' என்று பெயர். முருகப்பெருமானின் முன்னிலையில் கோயில் சன்னதியிலேயே அரங்கேற்றினார். அப்போதே பகழிக்கூத்தரின் வயிற்றுநோயும் இருந்த இடம் தெரியாமல் மறைந்தது. முருகப்பெருமான் பாடலின் சுவையில் ஈடுபட்டு மாணிக்கப்பதக்கத்தை புலவருக்கு அணிவித்தார். திருச்செந்தூர் முருகனுக்கு நாள்தோறும் பூஜை முடிவில் திருப்புகழ் பாடுவதோடு, பிள்ளைத்தமிழ் பாடுவதும் வழக்கமாக உள்ளது.
பழநியில் மட்டும் ஏன் இவ்வளவு கூட்டம்? பழநியில் பாலமுருகன் தண்டாயுதம் ஏந்தி கவுபீனத்துடன் (கோவணம்) ஆண்டிக்கோலத்தில் காட்சி தருகிறார். செல்வச்செழிப்பான பரம்பரையில் தோன்றிய முருகனுக்கு ஏன் இந்த அவலநிலை என்று கேள்வி கேட்கிறார் ஒரு கவிஞர். முருகனின் தாய் பார்வதியோ மலைராஜன் இமவானின் மகள். தந்தை ஈசனோ நிதிக்கு அதிபதியான குபேரனின் தோழன். மாமன் மகாவிஷ்ணுவோ கோவர்த்தனகிரியை குடையாய் எடுத்து பசுக்களைக் காத்த பராக்கிரமசாலி. அத்தை லட்சுமியோ செல்வச் செழிப்பில் திளைப்பவள். பெற்றோர் மட்டுமல்ல. பெண் கொடுத்த மாமன் மூவுலகங்களையும் ஆளும் தேவேந்திரன். அப்படியிருந்தும் பழநியிலே ஆண்டியாய் இருந்து அல்லல்படுகிறானே கந்தன், ஏன் என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு விடையையும் அவரே சொல்கிறார். கிடைத்ததை தனக்கென வைத்துக் கொள்ளாமல் அடியார்களின் நலன் கருதி அவர்களுக்கே கொடுத்து விடுகிறான் கந்தன். அதனால் தான் மற்ற படைவீடுகளை விட பழநியில் கூட்டம் அதிகமாக இருக்கிறது. தன்னிடம் இருப்பது எதையும் மறைக்கும் மனமில்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளலாக முருகன் இங்கு வீற்றிருப்பதால், இந்த ஆண்டியைத் தரிசிக்க பக்தர் கூட்டம் அலைமோதுகிறது. தமிழகத்திலேயே அதிக வருமானம் கொண்ட தலமாகவும் இருக்கிறது.
"மயில்' சாமி: முருகப்பெருமானுக்குரிய பெயர்களில் "விசாகன்' என்பதும் ஒன்று. விசாக நட்சத்திரத்தில் அவதரித்ததால் இப்பெயர் உண்டானது. "வி' என்றால் பறவை (மயில்) என்றும், "சாகன்' என்றால் "சஞ்சரிப்பவன்' என்றும் பொருள். உலகத்தின் புறஇருளைப் போக்க நீலக்கடல் மீது சூரியன் உதிப்பதுபோல, நம் அகஇருளைப் போக்க நீலமயில் மீது முருகப்பெருமான் காட்சி தருகிறார். முருகனுக்குரிய ""வேலுமயிலும்'' என்ற தமிழ் மந்திரத்தில் மயில் இடம்பெற்றுள்ளது. ""வேலுண்டு வினையில்லை! மயிலுண்டு பயமில்லை!!'' என்பது முருகனடியார்களின் அருள்வாக்கு. வேதங்களே மயிலாகி ஞானவடிவேலனைத் தாங்குவதாக வடமொழி ஸ்காந்தம் குறிப்பிடுகிறது. அருணகிரிநாதர் திருப்புகழில் ""சிங்கார ரூப மயில் வாகன நமோ நம'' என்று முருகப்பெருமானைப் பாடுகிறார். பாம்பன் சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள் போன்ற மகான்கள் முருகப்பெருமானை வழிபட்டபோதெல்லாம், மயில் எதிர்வந்து காட்சி தந்ததையும், தோகை விரித்தாடியதையும் காணமுடிகிறது. மயிலை நாம் தரிசித்தால் முருகப்பெருமானின் அருள்மழையில் நனையலாம் என்பது முருகனடியார்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. "மயில் விருத்தம்' என்ற நூலில் முருகப்பெருமானின் வாகனமான மயிலைப் போற்றி வழிபட்டோருக்கு சீர்மிகு வாழ்வும், செல்வமும், வேண்டிய வரங்களும் கிடைக்கும் என்று அருணகிரிநாதர் கூறியுள்ளார்.
உஷ்ணசாந்தி உற்சவம்: பவுர்ணமியன்று விசாக நட்சத்திரத்தில் சஞ்சரிக்கும் மாதத்தை, சமஸ்கிருதத்தில் "வைசாகம்' என்பர். தமிழில் இதை "வைகாசி' என்று சொல்வர். கோயில்களில் வைகாசி மாதம் நடக்கும் விழாவிற்கு "வசந்தவிழா' என்று பெயர். கடுமையான அக்னிநட்சத்திரத்தின் வெம்மையைப் போக்க, இறைவனை குளிர்ச்சிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த விழா கொண்டாடப்படுகிறது. குன்றுதோறும் குடியிருக்கும் குமரப்பெருமானுக்கு வைகாசியில் நடக்கும் விசாகவிழா சிறப்பானதாகும். இந்தநாளில் தான் அவரது திருஅவதாரம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகிறது. பத்துநாட்கள் நடக்கும் வசந்தவிழா வைகாசி விசாகத்தோடு நிறைவுபெறும். விசாகத்தன்று, கருவறையில் நீர்தேக்கி இறைவனை குளிர்விப்பர். சிறுபருப்பில் தயாரிக்கப்பட்ட பாயாசம், நீர்மோர், அப்பம் போன்ற குளிர்ச்சியான பொருட்களை நைவேத்யம் செய்வர். வெப்பம் தணிக்கும் இந்த விழாவிற்கு "உஷ்ணசாந்தி உற்சவம்' என்று பெயர்.
திருச்செந்தூரில் வைகாசிவிசாகத்தன்று செந்திலாண்டவர் தங்கச்சப்பரத்தில் வசந்தமண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கும். அப்போது வசந்தமண்டபத்தில் 11 சுற்றுகள் சுற்றுவார். வேதபாராயணம், தேவாரம், திருப்புகழ், பிரம்மதாளம், நந்திமத்தளம், சங்கநாதம், பிள்ளைத்தமிழ், நாதஸ்வரம், வேல்வகுப்பு, வீரவாள் வகுப்பு, கப்பல்பாட்டு ஆகிய 11 பாராயணங்கள் ஒவ்வொரு சுற்றிலும் இடம்பெறும். க்ஷோடச (16 வகை) தீபராதனைக்குப்பின், சுவாமி வீதிவலம் புறப்படுவார். முதல்படைவீடாகிய திருப்பரங்குன்றத்திலும் வைகாசி விசாகத்தன்று பால்குடம் சிறப்பாக நடக்கும். சண்முகப்பெருமானுக்கு அதிகாலை முதல் மதியம் வரை பாலபிஷேகம் தொடர்ந்து நடக்கும். விசாகநாளில் முருகனைத் தரிசித்தோர் முருகப்பெருமானை ஆண்டு முழுவதும் தரிசித்த புண்ணியம் பெறுவர். யானை வாகன முருகன் மயிலுக்குப் பதிலாக யானை வாகனத்துடன் கூடிய முருகன், தோல் நோய் தீர்க்கும் தெய்வமாக நாகப்பட்டினம் நகரிலுள்ள குமரன் கோயிலில் அருள்பாலிக்கிறார்.
தல வரலாறு: இந்தக் கோயிலில் மெய்க்காப்பாளராக அழகுமுத்து பணியாற்றி வந்தார். திடீரென்று இவருக்கு தொழுநோய் ஏற்படவே, பணியிலிருந்து நீக்கப் பட்டார். வறுமையில் வாடிய இவர், கோயிலுக்குள் ரகசியமாக வந்து, வாகன அறையில் மறைவாக இருந்து முருகனை வழிபட்டு வந்தார். ஒருநாள், இவர் வெளியே செல்வதற்குள், பணியாளர்கள் கோயிலை பூட்டிவிட்டு சென்றுவிட்டனர். இரவில் பசி தாங்கவில்லை. முருகனை நினைத்து உருகி பாடியுள்ளார். அப்போது முருகப்பெருமான் காட்சி அளித்து சர்க்கரை பொங்கல் தந்து, நோயைக் குணமாக்கியதுடன், மிக அருமையாக கவிபாட அழகுமுத்துவுக்கு திறனை அளித்தார். அழகுமுத்து மெய்க்காப்பாளராக பணியாற்றிய இந்தக் கோயிலில், முருகனுக்கு "மெய்கண்டமூர்த்தி' என்ற பெயர் விளங்கியது. பேச்சு வழக்கில் குமரன் கோயில் என்றானது.
மற்றொரு வரலாறு: நாகப்பட்டினத்திலுள்ள 12 சிவாலயங்களில் ஒன்றான கார்முகீஸ்வரர் கோயில் உப்பனாற்றங்கரையில் இருந்தது. இந்த கோயிலில் மேகராஜன் என்ற மன்னனின் உபயத்துடன் பூஜைகள் நடந்தன. நாளடைவில் இது சிதிலமடைந்து விட்டது. இங்குள்ள முருகன் உள்ளிட்ட விக்ரகங்கள் அனைத்தும் பூமியில் புதைந்து விட்டன. புதுச்சேரியில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றியவர் புதுவை துபாஷி ஆனந்தரங்கம்பிள்ளை. இவருடைய கனவில் முருகப்பெருமான் தோன்றி, நாகப்பட்டினத்ததில், தான் புதைந்து கிடக்கும் இடத்தை உணர்த்தினார். அந்த சிலையை எடுத்து அமைக்கப்பட்டது தான் குமரன் கோயில்.
நோய் தீர்க்கும் பெருமான்: தோல்நோய் உடையவர்கள் குமரன் கோயிலுக்கு சென்று பால் அபிஷேகம் செய்து வழங்கப்படும் தீர்த்தத்தை பருகுவதால் நோய் குணமடைவதாக நம்பிக்கை.
சிறப்பம்சம்: தெய்வானை திருமணத்தில் முருகப் பெருமானுக்கு ஐராவதம் என்னும் வெள்ளை யானையை இந்திரன் பரிசளித் தான், இதை அடையாளமாக மெய்கண்ட மூர்த்தி சுவாமிக்கு எதிர்ப்புறம், மயிலுக்கு பதில் யானை பிரதிஷ்டை செய்யப் பட்டுள்ளது. விநாயகர், குபேரன், துர்க்கை, நவக்கிரகங்கள், விஸ்வநாதர், விசாலாட்சிக்கு சன்னதிகள் உள்ளன. அருணகிரிநாதரால் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று. இங்கு குபேரர் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப் பட்டு உள்ளதால் செல்வவிருத்திக்கான தலமாகவும் விளங்குகிறது.
திருவிழா: வைகாசி விசாகம், கந்தசஷ்டி, நவராத்திரி, தைப்பூச 10 நாள் திருவிழா, ஐப்பசி அமாவாசையில் (தீபாவளி) குபேரருக்கு பூஜை.
இருப்பிடம்: நாகப்பட்டினம் பஸ் ஸ்டாண்டிலிருந்து தஞ்சாவூர் செல்லும் ரோட்டில் நாலுகால் மண்டபம் ஸ்டாப்பில் இறங்கி நடந்து செல்லும் தூரத்திலுள்ளது. டவுன் பஸ்கள் உள்ளன.
திறக்கும் நேரம்: காலை 7- பகல் 11.30, மாலை 5.30- இரவு 9 மணி.போன்: 99941- 98391, 94429-29270.