மதுரை : மதுரை திருமலை நாயக்கர் மகாலில் நடந்து வரும் படப்பிடிப்பால், நுழைவுக்கட்டணம் செலுத்தி வரும் பார்வையாளர்கள், படப்பிடிப்பு குழுவினரால் அவமதிக்கப்பட்டனர். கரண், சகானி நடிக்கும் "இரட்டை முகம்' படத்தின் பாடல்காட்சி படப்பிடிப்பு திருமலை நாயக்கர் மகாலில் நடக்கிறது. இதனால் மகாலுக்கு வரும் பார்வையாளர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.
மகாலை பார்க்க நுழைவுக் கட்டணம் செலுத்தி வந்த பார்வையாளர்களை, படப்பிடிப்புக் குழுவினர் "இந்த பகுதிக்கு வராதே, யார் இவர்களை இங்கே அனுமதித்தது' என,"போடா', "வாடா' என தரக்குறைவான வார்த்தைகளுடன் அவமதித்து மைக்கில் பேசினர். இதனால் பார்வையாளர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகினர். திருமலை நாயக்கர் மகால் புனரமைப்பு செய்யப்பட்ட பின் படப் பிடிப்புகள் அதிகம் நடக்கிறது. ஒவ்வொரு முறை நடக்கும் படப் பிடிப்பின் போது, கட்டணம் செலுத்தி வரும் பார்வையாளர் கள், மகாலின் அனைத்து பகுதிகளுக்கு செல்ல முடியாமல் தடை செய்வதும், அவமதிப்பு செய்வதும் தொடர் நிகழ்வாக உள்ளது. பார்வையாளர்களுக்கு நுழைவுக் கட்டணம் வழங்கும் போது, "இன்று படப்பிடிப்பு நடக்கிறது' என எந்த அறிவிப்பும் செய்யவில்லை. இதனால் பார்வையாளர்கள் படப்பிடிப்பு நடக்கிறது என தெரியாமல் வந்து, அனைத்து பகுதிகளையும் பார்வையிட முடியாமல் ஏமாற்றம் அடைகின்றனர். வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் படபிடிப்புக்குழுவினர் வாகனங்களை நிறுத்தாமல், மகாலின் தோற்றத்தை மறைக்கும் வகையில் முன் பகுதியில் வாகனங்களை நிறுத்துகின்றனர். ஜெனரேட்டர் வாகனங்களில் இருந்து வயர்கள் பயணிகள் நடக்கும் நடைபாதையிலே போடப்படுகிறது. இவற்றை மிதித்து பார்வையாளர்கள் செல்கின்றனர். ஆபத்தை உணராமல் சிறுவர்கள் இவற்றில் மிதித்து விளையாடுகின்றனர்.
மகால் வளாகம் முழுவதும் படப்பிடிப்பு குழுவினரின் வாகனங்கள் நிறைந்து காணப்படுவதால், மகாலுக்கு வரும் பார்வையாளர்கள் தங்கள் வாகனங்களை ரோட்டோரம் நிறுத்தும் நிலை உள்ளது. படப்பிடிப்புக்குழுவினரால் மகால் பகுதிகள் குப்பைகளாகவும், படப்பிடிப்பு குழுவினரின் பொருட்களால் நிறைந்து அலங் கோலமாக காட்சியளிக்கிறது. புதிதாக புத்தக விற்பனை நிலையம் அமைப்பதற்காக தயார் செய்யப் பட்டிருந்த பீரோக்களில் துணை நடிகைகளின் துணிகள் பாதுகாத்து வைக்கப்பட்டுள்ளது. ஆவணங்கள் வைத்துள்ள அறைகளையும் படப்பிடிப்பு குழுவினர் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர்.அரை குறை ஆடைகளுடன் துணைநடிகைகள் இஷ்டத்திற்கு அமர்வது,படுப்பது பார்வையாளர்களை முகம் சுழிக்க வைக்கிறது. மகாலில் படப்பிடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தால் மட்டுமே, மதுரை மக்களின் பொக்கிஷமாக கருதப்படும் இந்த மகால் இன்னும் பல ஆண்டுகள் மன்னர்கால வரலாறுகளை நினைவுபடுத்தும் சின்னமாக காட்சியளிக்கும்.