சென்னை
: ""ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு, திண்டுக்கல்லில் மணிமண்டபம்
அமைக்கப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா கூறினார்.சட்டசபையில் நேற்று,
110வது விதியின் கீழ், அவர் வெளியிட்ட அறிக்கை:ஆங்கிலேயர்களை எதிர்க்க,
வேலு நாச்சியாருக்கு, பீரங்கிகள் மற்றும் படை வீரர்களை வழங்கியவர் ஹைதர்
அலி. அவரது புதல்வர் திப்பு சுல்தானும், ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக
விளங்கியவர். இவர்கள் நினைவாக, திண்டுக்கல்லில் நூலகம் அமைக்க வேண்டும்
என, மார்க்சிஸ்ட் எம்.எல்.ஏ.,க்கள் சவுந்திரராஜன், பாலபாரதி ஆகியோர்,
கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஹைதர் அலி, திப்பு சுல்தான் ஆகியோருக்கு,
திண்டுக்கல்லில் ஒரே வளாகத்தில், மணி மண்டபம் அமைக்கப்படும்.சகஜானந்தா
மணிமண்டபம்: ஏழை மக்கள் உயர்வுக்கு வாழ்வை அர்ப்பணித்தவரும், அறியாமை போக்க
கல்வி நிறுவனம் தொடங்கியவரும், காந்தியடிகளை அழைத்து வந்து, அறநெறி
பரப்பியவரும், சட்டசபை மற்றும் சட்ட மேலவையில் உறுப்பினராகவும் இருந்த
சகஜானந்தாவுக்கு, அவர் வாழ்ந்த சிதம்பரத்தில், மணிமண்டபம் கட்டப்படும்.
குயிலிக்கு நினைவு சின்னம்: வேலுநாச்சியாரின் படைத் தளபதியாக இருந்து, வேலு
நாச்சியாரைக் காக்க, உயிரை மாய்த்துக் கொண்ட, வீரமங்கை குயிலிக்கு,
வேலுநாச்சியாருக்கு அமைக்கப்படும் மணிமண்டபத்தில், நினைவுச் சின்னம்
எழுப்பப்படும். சென்னை மந்தைவெளியில் உள்ள, அம்பேத்கர் மணி மண்டபம்
புதுப்பிக்கப்படும். இவ்வாறு, ஜெயலலிதா கூறினார்.