லண்டன்: ஆப்கனில் முஸ்லிம்கள் கொல்லப்படுவதற்கு கண்டனம் தெரிவித்து, லண்டன் நகரில், அப்பாவி ராணுவ வீரர் ஒருவரை, பயங்கரவாதிகள் இருவர், கழுத்தறுத்து கொன்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது. அந்த கொலைகாரர்களுடன் பேச்சு கொடுத்து, அவர்களை தடுத்து நிறுத்திய வீரப்பெண்ணுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். பிரிட்டனின் தென் கிழக்கு பகுதியில், ஊல்விச் என்ற இடத்தில், ராணுவ முகாம் உள்ளது. ராணுவத்தில் பணியாற்றும் வீரர் ஒருவர், நேற்று முன்தினம், முழு சீருடையில், முகாம் அருகே, காரில் சென்று கொண்டிருந்தார்.
அந்த காரை, இரு இளைஞர்கள் தடுத்து நிறுத்தினர். சாலையில் பலர் சென்று கொண்டிருந்த நிலையில், காரில் இருந்த ராணுவ வீரர், என்ன, ஏது என கேட்கும் போதே, அவரை கீழே இழுத்து போட்ட அந்த நபர்கள், ஆட்டின் கழுத்தை நறுக்குவது போல, வீரரின் கழுத்தை அறுத்துக் கொன்றனர். நடப்பது சினிமா படப்பிடிப்பாக இருக்கலாம் என, அந்த சாலையில் சென்று கொண்டிருந்தவர்கள் கருதினர். ஆனால், கழுத்தறுக்கப்பட்ட ராணுவ வீரர், ரத்த வெள்ளத்தில் மிதந்ததைப் பார்த்ததும், அலறினர். முதலுதவி ; இங்கிரிட் லோயா - கென்னட் என்ற பெண், ஓடிச் சென்று, கழுத்தறுபட்ட ராணுவ வீரரை தூக்கி, மடியில் கிடத்தி, உயிரைக் காப்பாற்ற, முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டார்.
இதனால், கோபம் கொண்ட அந்த இரு இளைஞர்களும், அவளை தாக்க முற்பட்டனர். ரத்தம் சொட்டும் கத்திகளுடன், அவர்கள், அந்தப் பெண்ணை அணுகினர். அவர்களைக் கண்ட, இங்கிரிட் லோயா, ""நீங்கள் செய்தது படுகொலை; எதற்காக இப்படிச் செய்தீர்கள்?'' என, கோபமாக கேட்டார். ""இவன், ஆப்கன் சென்று, அப்பாவி முஸ்லிம்களைக் கொன்று குவித்தவன். அவனை பழிவாங்கவே இவ்வாறு செய்தோம். பல்லுக்குப் பல்; கண்ணுக்குக் கண்,'' என, கத்தினர். இவ்வாறு, லோயாவுக்கும், பயங்கரவாதிகள் இருவருக்கும், கோபாவேசமாக பேச்சு நடந்து கொண்டிருந்தபோது, தைரியம் அடைந்த சிலர், அந்த இளைஞர்களை சுற்றி வளைத்தனர். அதே நேரத்தில், சிலர், போலீசுக்கும் தகவல் கொடுத்தனர்.
சுற்றி வளைத்தவர்களை நோக்கி, ரிவால்வரை நீட்டிய இளைஞர்கள், சுட்டு விடுவதாக மிரட்டினர். தகவல் அறிந்து, அங்கு வந்த போலீசார், நிலைமையை சட்டென புரிந்து, ரத்தம் சொட்டும் கத்தியுடன் நின்றிருந்த இரு இளைஞர்களையும், காலில் சுட்டு, கீழே வீழ்த்தினர். உடனடியாக பாய்ந்து, கை விலங்கிட்டு, அவர்களை வேனில் ஏற்றிச் சென்றனர்.
ஏராளமான ரத்தம் வெளியேறியதால், கழுத்தறுபட்ட ராணுவ வீரர், அந்த இடத்திலேயே இறந்தார். துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால், படுகாயமடைந்த பயங்கரவாதிகள் இருவரும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
பிரதமர் திரும்பினார் ; சம்பவம் பற்றி அறிந்ததும், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இருந்த, பிரிட்டன் பிரதமர், டேவிட் கேமரூன், தன் நிகழ்ச்சிகளை ஒத்திவைத்துவிட்டு, லண்டன் திரும்பினார். "கோப்ரா' என்ற பெயரிலான, உயர் மட்ட அவசர நிலை கூட்டத்தைக் கூட்டி, நிலைமை குறித்து விவாதித்தார். இதையடுத்து, பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. ராணுவ முகாம்களுக்கும், ராணுவ கட்டடங்களுக்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது; மசூதிகள் மற்றும் முஸ்லிம்கள் கூடும் இடங்களுக்கும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
"ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது, பயங்கரவாத தாக்குதல் சம்பவம்' என, பிரதமர், டேவிட் கேமரூன் அறிவித்ததும், லண்டனில் சில இடங்களில், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்கள் நடந்தன. மசூதிக்குள் கத்தியுடன் நுழைந்தவர் மற்றும், பதிலுக்குப் பதில், வன்முறையில் ஈடுபட திட்டமிட்ட மற்றொருவர் என, இருவர் கைது செய்யப்பட்டனர்.
லோயாவுக்கு நன்றி ; பயங்கரவாதிகளிடம் பேச்சு கொடுத்து, அவர்கள் தப்பாமல் தடுத்து நிறுத்திய, இங்கிரிட் லோயாவுக்கு, பலரும் பாராட்டு தெரிவித்தனர். அவரால் தான், மேலும் சில வீரர்கள் படுகொலையில் இருந்து தப்பினர் எனக் கூறி, நன்றி கூறினர்.
இது குறித்து லோயா கூறும் போது, ""நான் முன்னர், நர்சாக பணியாற்றியுள்ளேன் என்பதால், முதலுதவி சிகிச்சை அளிக்க முற்பட்டேன். என்னை அவர்கள் தடுக்க முற்பட்ட போது, அவர்களுடன் கோபமாக பேசி, அவர்கள் கவனத்தை திசை திருப்பினேன். அவர்கள் வசம், ரிவால்வர் போன்ற ஆயுதங்கள் இருந்ததை பார்த்த நான், அவர்கள் கவனத்தை திசை திருப்புவதற்காக, தொடர்ந்து பேச்சு கொடுத்தேன்.
இல்லையேல், அவர்கள் பலரை சுட்டுக் கொன்றிருப்பர்,'' என்றார். அமெரிக்காவுடன் இணைந்து, பிரிட்டன் ராணுவம், ஆப்கன் மற்றும் ஈராக்கில் தீவிரவாதிகள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவதை கண்டித்து, 2005ம் ஆண்டு, பிரிட்டனில், தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது. அதற்குப் பிறகு, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இப்போது தான், மீண்டும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE