சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பழம்பெரும் பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு

Updated : மே 26, 2013 | Added : மே 25, 2013 | கருத்துகள் (85)
Share
Advertisement
சென்னை : பழம்பெரும் பாடகரான, டி.எம்.சவுந்தர்ராஜன், உடல் நிலை சரியில்லாமல், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 91. அவரது இறுதிச்சடங்கு, சென்னையில் இன்று நடக்கிறது. டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச அ#யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம்,
பாடகர் டி.எம்.சவுந்தர்ராஜன் மறைவு

சென்னை : பழம்பெரும் பாடகரான, டி.எம்.சவுந்தர்ராஜன், உடல் நிலை சரியில்லாமல், சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது, 91. அவரது இறுதிச்சடங்கு, சென்னையில் இன்று நடக்கிறது. டி.எம்.சவுந்தர்ராஜன், 1922, மார்ச், 24ல், மதுரையில் பிறந்தார்.சிறுவயதில் இருந்தே, இசை மீது அதிக நாட்டம் கொண்ட இவர், பிரபல வித்துவான் பூச்சி சீனிவாச அ#யங்காரின் மருமகன், காரைக்குடி ராஜாமணி அய்யங்காரிடம், முறையாக இசை பயின்றார். இசைப் பயிற்சிக்கு பின், பல்வேறு கச்சேரிகளில் பாடினார்.
கடந்த, 1946 ஆண்டு வெளிவந்த, "கிருஷ்ண விஜயம்' என்ற படத்தில், "ராதே என்னை விட்டு ஓடாதே...' என்பதே, திரையுலகில் அவர் பாடிய, முதல் பாடல். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில், 10 ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெய்சங்கர், சிவகுமார் போன்ற மூத்த தலைமுறை நடிகர்களுக்கும், ரஜினி, கமல், போன்ற இளைய தலைமுறை நடிகர்களுக்கும் பாடல் பாடியுள்ளார்.
கதாநாயகர்களுக்கு தகுந்தாற் போல் பாடியதால், நடிகர்களே நேரடியாக பாடுவது போல், உணர வைப்பார் என, போற்றப்பட்டார். "இசை சக்கரவர்த்தி' "ஏழிசை மன்னர்' "ஞானகலா பாரதி' போன்ற விருதுகளை பெற்றுள்ளார். கடந்த, 2003ம் ஆண்டு, இவருடைய கலை சேவையை பாராட்டி, மத்திய அரசு, "பத்மஸ்ரீ' விருது வழங்கி சிறப்பித்தது. தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி சிறப்பித்தது.
கடந்த, 10 நாட்களுக்கு முன், உடல் நலம் சரியில்லாமல், சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த டி.எம்.எஸ்., கடந்த, 19ம் தேதி, வீட்டிற்கு திரும்பினார். பின், வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்று வந்தவர், நேற்று உடல்நிலை மோசமானதால், காலமானார். இவருக்கு, சுமித்ரா என்ற மனைவியும், மல்லிகா என்ற மகளும், பால்ராஜ், செல்வகுமார் ஆகிய மகன்களும் உள்ளனர். இவருடைய இறுதிச்சடங்கு சென்னை, மயிலாப்பூரில், இன்று நடக்கிறது.
தமிழக மக்களை சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்., *முதல்வர் ஜெயலலிதா இரங்கல்

""தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்தவர் டி.எம்.எஸ்.,'' என, முதல்வர் ஜெயலலிதா, டி.எம்.சவுந்திரராஜன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் விடுத்துள்ள அறிக்கை: "ராதே என்னை விட்டு போகதடி' என்ற பாடலின் மூலம், தமிழ் திரையுலகில், அடியெடுத்து வைத்த டி.எம்.சவுந்திரராஜன், ரசிகர்களை வசிய வைக்கும் குரலுக்கு சொந்தக்காரர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை தமிழ் திரைப்படங்களில் பாடியுள்ள சவுந்திரராஜன், தெலுங்கு, மலையாள மொழி படங்களிலும் சில பாடல்களை பாடியுள்ளார்.
முருக பெருமான் மீதான, "கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும், உள்ளம் உருகுதய்யா முருகா, சொல்லாத நாளில்லை, சுடர்மிகு வடிவேலா' போன்ற பல பாடல்களுக்கு, தானே இசையமைத்து, உள்ளம் உருக பாடி, முருக பக்தர்களின் மனங்களில், நீங்கா இடம் பிடித்தர்.

"அன்பை தேடி' என்ற திரைப்படத்தில், "சத்திர மண்டபத்தில் சில முத்துக்கள் கொட்டி வைத்தேன்' என்றும் துவங்கும் பாடலிலும், "சூரிய காந்தி' என்ற படத்தில், "ஓ... மேரி தில் ரூபா' என்று துவங்கும் பாடலிலும், டி.எம்.எஸ்., உடன் இணைந்து, நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். தமிழக மக்களை தனது, சிம்மக் குரலால் கவர்ந்த டி.எம்.எஸ்., உடல் நலக் குறைவால், சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து, ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன். டி.எம்.எஸ்., மறைவு தமிழ் திரைப்பட துறைக்கும், இசை ரசிகர்களுக்கும் மிகப் பெரிய இழப்பாகும். இவருடைய இடத்தை இனி எவராலும் நிரப்ப முடியாது. சவுந்திரராஜனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதுடன், ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற, எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டி.எம்.எஸ், மறைவு : கருணாநிதி - வைகோ -விஜயகாந்த் இரங்கல்

பிரபல பின்னணிப் பாடகர், டி.எம்.சவுந்தரராஜன் மறைவுக்கு, பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். தி.மு.க., தலைவர் கருணாநிதி:

தமிழ் சினிமாவில், இரு துருவங்களாக விளங்கிய, எம்.ஜி.ஆர்., - சிவாஜி ஆகியோருக்கு, டி.எம்.எஸ்., குரல் பொருந்தியதைப் போல், வேறு எந்தப் பாடகரின் குரலும் பொருந்தியதில்லை. இனிய குரல், சிறந்த தமிழ் உச்சரிப்பு, நடிகருக்கு ஏற்றாற்போல் குரலை மாற்றிப் பாடும் தன்மை ஆகியவை, அவருக்கு புகழை பெற்றுத் தந்தன.

அவர் பாடிய, "சிந்தனை செய் மனமே, நான் பெற்ற செல்வம்' முதலிய பாடல்கள், மறக்க முடியாதவை. டி.எம்.சவுந்தரராஜன் மறைந்த செய்தி கேட்டு, மிகவும் வருந்துகிறேன். அவரது குடும்பத்தாருக்கு, என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த்:

எம்.ஜி.ஆர்., - சிவாஜி, ஜெமினி கணேசன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிச்சந்திரன், எஸ்.எஸ். ஆர்., ரஜினி, கமல் என, அனைத்து பிரபலங்களுக்கும் பாடி, சரித்திரம் படைத்தவர் டி.எம்.எஸ்., நான் நடித்த பல படங்களில், எனக்காகவும் அவர் பாடியுள்ளார்.

தான் எந்த நடிகருக்காக பாடினாலும், அந்த நடிகரின் முகத்தை, தன் குரலால், ரசிகர்களின் மனத்திரையில் நிற்கவைக்கும் ஆற்றல் பெற்றவர். டி.எம்.சவுந்தரராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கு, தே.மு.தி.க., சார்பில், ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.தி.மு.க., பொதுச் செயலர் வைகோ :

டி.எம்.சவுந்தரராஜன் பாடிய, பக்திப் பாடல்கள், தத்துவப் பாடல்கள், காதல் பாடல்கள், மான உணர்ச்சி பாடல்கள் என, அனைத்துப் பாடல்களும், காலத்தை வென்றவை. அவரை இழந்து வாடும், குடும்பத்தினர், உற்றார், உறவினர்களுக்கு, ம.தி.மு.க., சார்பில், ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

கவர்னர் ரோசையா:

டி.எம்.சவுந்தரராஜனின் உணர்ச்சிபூர்வமான பக்தி பாடல்கள், நம்மை இறைநிலைக்கு கொண்டு செல்பவை. அவரது மறைவு, தமிழ் திரை துறை மற்றும் தமிழ் இசை உலகிற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு.
என் பாடல் சேய் கேட்கும் விருந்தாகலாம் ; என் பாடல் நோய் தீர்க்கும் மருந்தாகலாம்
தலைப்பில் உள்ள இந்த இரண்டு வரிகளே, டி.எம்.எஸ்., என தமிழ் இசை ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட டி.எம்.சவுந்தரராஜனின் திறமையை பறைசாற்றும். தமிழ் திரை இசை உலகில் இவர் ஏற்படுத்திய தாக்கம்; அவரது ஆண்மை குரலின் வலிமை; அது தந்த சுகந்தம்; அது ஏற்படுத்திய ஆனந்தம்... தனி சகாப்தம் என்றே சொல்ல வேண்டும்.

இவரது குரலில் காதல் கசிந்தது; சோகம் இழைந்தது; கோபம் குமுறியது; விரக்தி வெளிப்பட்டது; அன்பு குழைந்தது. ஆக, அனைத்து நவசரசங்களையும் வெளிப்படுத்திய பாடகர், இவர் ஒருவர் தான்.
வாழ்க்கை வரலாறு ;

டி.எம்.சவுந்திரராஜன், 1922, மார்ச் 24ம் தேதி, மதுரையில் பிறந்தார். திரையுலக பின்னணி பாடலில் சிகரம் தொட்ட இவர், பக்திப் பாடலிலும் முத்திரை பதித்தார். 1946ம் ஆண்டு முதல், திரையுலகில், 60 ஆண்டு காலம் பணியாற்றினார். வயது முதிர்வின் காரணமாக ஓய்வெடுத்து வந்தார்.

சிறு வயதில் காரைக்குடி ராஜாமணி ஐயங்காரிடம் முறைப்படி இசைப்பயிற்சி பெற்றார். பல ஆண்டுகள் கச்சேரியில் பாடியவருக்கு, 1950ம் ஆண்டு திரைப்படத்தில் பாடும் வாய்ப்பு தேடி வந்தது. சுந்தரராவ் நட்கர்னியின் "கிருஷ்ண விஜயம்' படத்தில் "ராதே நீ என்னை விட்டுப் போகதேடி' என்ற பாடலை பாடினார். "தேவகி' என்ற படத்தில் பாடி, நடிக்கவும் செய்தார். எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசனுக்கு இவர் பாடிய பாடல்கள், அழியாப் புகழ் பெற்றவை. 1950-90 வரை நடித்த முன்னணி தமிழ் நடிகர்கள் அனைவருக்கும் குரல் கொடுத்தார். தமிழ்த் திரையுலகின் அனைத்து இசைப்பாளர்களிடமும் பாடினார். இறுதியாக 2010ம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் "தமிழ் செம்மொழி மாநாட்டு' பாடலை பாடினார். இந்தியாவின் முன்னணி மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான திரைப்படப் பாடல்களையும், 2,500க்கும் அதிகமான பக்திப் பாடல்களையும் பாடினார். மத்திய அரசு இவருக்கு 2003ம் ஆண்டு "பத்ம ஸ்ரீ' விருதளித்து கவுரவித்தது. தமிழக அரசின் "கலைமாமணி' உட்பட பல விருதுகளை பெற்றார்.

பட்டங்கள் ; இவரது திறமையை பாராட்டி, பல்வேறு அமைப்புகள் இவருக்கு ஏராளமான பட்டங்களை வழங்கின. பாடகர் திலகம், சிம்மக் குரலோன், இசை சக்கரவர்த்தி, இசைக்கடல், எழிலிசை மன்னர், குரல் அரசர் போன்றவை இவருக்கு அளிக்கப்பட்ட பட்டங்கள்.
நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே...நீங்கிடாத துன்பம் பெருகுதே!

* ஏழிசை அரசருக்கு ரசிகர்கள் இசையாஞ்சலி
மதுரை : "இசைக்கேட்டால் புவி அசைந்தாடும்... அது இறைவன் அருளாகும்...!,' என்ற வைரவரிகளுக்கு வர்ணம் பூசியவர். பாடல்களில், வார்த்தைகளுக்கு உயிர்வார்த்தவர். வசீகரக் குரலால் இசைப்பிரியர்களின் உள்ளங்களை வளைத்து, மனதில் குடிகொண்டவர். தேனருவி போல் செவிகளுக்கு விருந்தளித்து, இசையுலகில் கோலோச்சியவர்... அவர் ,"ஏழிசை அரசர்' டி.எம்.சவுந்திரராஜன். அவர் உயிர், இவ்வுலகை விட்டுப்பிரிந்திருக்கலாம். ஆனால், அவரது குரலோசை வானம் உள்ளவரை வாழ்ந்து கொண்டிருக்கும். காற்றோடு கலந்து, நம் காதுகளில் ரீங்காரமிடும். அவர் பாடிய பாடலை, பொழுதெல்லாம் முணுமுணுத்து கொண்டிருக்கும் ரசிகர்களிடம், அவர் பாடல்களில் பிடித்த பாடல் என்ன என்று கேட்டோம்.

ரசிகர்கள் தங்களின் கண்ணீர் அஞ்சலியை... இசையாஞ்சலியாக... பொழிந்தனர்.

அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே

வந்ததே... நண்பனே

நா.மம்மது (இசை ஆராய்ச்சியாளர், மதுரை): கவிஞர்கள் எந்த உணர்வில் பாடல்கள் எழுதினரோ, அதே உணர்வில், பொருளை புரிந்து கொண்டு பாடக்கூடிய திறமையாளர். மிகச்சிறந்த உச்சரிப்பு, குரலிசை, குரல் அழுத்தம் இருக்கும். பாடும்போது சுரத்தை அவரே எழுதி பாடுவார். இதனால், ராகங்களை துல்லியமாக வெளிக்கொணர முடிந்தது.

"மருதநாட்டு இளவரசி'யில் "பருவம் பார்த்து அருகில் வந்தும் வெட்கமா...' (மோகனராகம்), "அம்பிகாபதி'யில் "சிந்தனை செய் மனமே...'(கல்யாணிராகம்), "தாரங்கதாரா'வில் "வசந்தமுல்லை போலே வந்து அசைந்து ஆடும்...' (சாருகேசி ராகம்) பாடல்களை சிறந்த பண்களுக்கு (ராகம்) உதாரணமாக இன்றும் இசை விமர்சகர்கள், இசையமைப்பாளர்கள் குறிப்பிடுவதுண்டு.

பாடல்களை மட்டுமல்ல வசனத்தையும் பாடக்கூடியவர். "உயர்ந்த மனிதன்' படத்தில் "அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே... நண்பனே', "செல்வம்' படத்தில் "அவளா சொன்னாள்... இருக்காது, அப்படி எதுவும் நடக்காது...நம்ப முடியவில்லை...' என வசனத்தில் அமைந்த சிரமமான பாடல்களை, ரசிக்கும்படி எளிதாக பாடியவர்.

இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே...

எம்.பி.சக்தி(குடும்பத்தலைவி, மதுரை): ""அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே. நண்பனே... நண்பனே... நண்பனே... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே... அது ஏன்... ஏன்... நண்பனே, சட்டி சுட்டதடா... கை விட்டதடா, கேட்டதும் கொடுப்பவனே கிருஷ்ணா... கிருஷ்ணா... கீதையின் நாயகனே கிருஷ்ணா... கிருஷ்ணா... என்ற பாடல்களை ஆயிரக்கணக்கான முறை கேட்டுள்ளேன். என் மூச்சு உள்ளவரை பாடிக்கொண்டிருப்பேன்.

உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை

எல்.என்.சுப்பிரமணியன்(75 வயது ரசிகர், மதுரை): "உனைப்பாடும் தொழிலின்றி வேறு இல்லை. எனக்காக்க உனையன்றி யாரும் இல்லை. முருகா... முருகா... முருகா...' என்ற டி.எம்.எஸ்.பாடலில் உயிரோட்டம் இருக்கும். இப்பாடலை எப்போது கேட்டாலும் அழுது விடுவேன். அற்புதமான குரலுக்கு சொந்தக்காரர். அவர் இறக்கவில்லை. வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா

டி.கே.சரவணன்(வர்த்தகர், மதுரை): "ஓடும் மேகங்களே... ஒரு சொல் கேளீரோ...' மற்றும் "ஒருபக்கம் பாக்குறா... ஒரு கண்ண சாய்க்குறா... அவ உதட்டக்கடிச்சுக்கிட்டு அங்கே மெதுவா சிரிக்கிறா... சிரிக்கிறா...' என்ற பாடல்கள் தேன் வண்டு ரீங்காரம் இடுவதுபோல் செவிகளில் இன்றளவும் ரீங்காரமிடுகிறது. தேனினும் இனிய குரலோசை மன்னர் டி.எம்.எஸ்., குரல் சாகாது.

ஆறுமனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு

சாந்தி(குடும்பத்தலைவி, மதுரை): "ஆறுமனமே ஆறு. அந்த ஆண்டவன் கட்டளை ஆறு. இனும் எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே', என்ற பாடல் டி.எம்.எஸ்., இளைமை பருவத்தில் பாடியது. அந்தக்குரல் வேறொருவருக்கு இல்லை.

அச்சம் என்பது மடமையடா...

ரா.சொக்கலிங்கம் (கண்ணதாசன் நற்பணி மன்ற தலைவர்):

மக்களிடம் உணர்வுகளை ஊட்டிய பாடல், "மன்னாதி மன்னன்' படத்திலுள்ள "அச்சம் என்பது மடமையடா'. "ஊட்டி வரை உறவு' படத்தில் தமிழ், ஆங்கில வார்த்தைகளின் உச்சரிப்பை எந்த வித கலப்புகளும் இல்லாமல் "ஹேப்பி இன்று முதல் ஹேப்பி' என்ற வரிகளால் வெளிநாட்டினரும் புரிந்து கொள்ளும் அளவிற்கு பாடி மகிழவைத்தார்.

எம்.ஜி.ஆருக்கு பெருமை சேர்த்த முதல்தர பாடல்களில் "நெஞ்சம் உண்டு நேர்மையுண்டு', என்ற தத்துவ பாடல், அவரின் புகழை பன்மடங்கு மக்களிடம் எடுத்துச் சென்றது. "பொன்னூஞ்சல்' படத்தில் உள்ள "ஆகாய பந்தலிலே' பாடல் அந்த காலத்தில் ஒலி நாடா விற்பனையில் முதலிடம் பிடித்தது சாதனையாக பேசப்பட்டது.மதுரையும் - டி.எம்.எஸ்ஸூம்

மதுரை : மதுரையில் பிறந்தவர் டி.எம்.சவுந்திரராஜன். அவரையும், மதுரையையும் பிரிக்க முடியாது. பின்னணி பாடகருக்கு, முதல்முறையாக ரசிகர் நற்பணி மன்றம் அமைத்து மதுரையில் தான். அதுவும் டி.எம்.எஸ்.,சிற்கு தான்! மதுரை தெற்குமாசிவீதி தெற்குகிருஷ்ணன் கோவிலை சேர்ந்த மீனாட்சி அய்யங்கார் - வெங்கிட அம்மாள் தம்பதிக்கு டி.எம்.சவுந்திரராஜன், பிறந்தார். சிறுவயதிலேயே பக்தி பாடல்களை பாடும் திறன் பெற்றார். மகனின் இசை ஞானத்தை கண்டு ஆச்சரியம் அடைந்த மீனாட்சி அய்யங்கார், இசை ஆர்வத்திற்கு அச்சாரம் போட்டார். சிறு வயதில் கோயில்கள், விழாக்களில் குரல் கொடுத்து வந்த டி.எம்.எஸ்., முதல் முறையாக 1946ல் வெளியான "கிருஷ்ண விஜயம்' என்ற சினிமாவில், ""ராதை என்னை விட்டு ஓடாதடி,'' என்ற பாடலை பாடி ரசிகர்களின் உள்ளங்களை பரவசப்படுத்தினார். முதல் பாடலே சர்வதேச அளவில் பேச வைத்தது. அடுத்தடுத்து டி.எம்.எஸ்., பாடிய 15 ஆயிரம் பாடல்கள், இசை எனும் இமயமலைக்கு அதிபதியாக்கியது.

சென்னையில் வசித்து வந்தாலும். அவர், அடிக்கடி மதுரைக்கு வந்து செல்வதை வழக்கமாக கொண்டார். மதுரை நரசிம்மபுரத்தில் முதல்முறையாக 1980ல் "அகில இந்திய டி.எம்.எஸ்., தலைமை நற்பணி மன்றம்' ஏற்படுத்தப்பட்டது. பின், இதே பகுதியில் 1986ல் "மதுரை நரசிம்மபுரம் பத்மஸ்ரீ டாக்டர் டி.எம்.எஸ். ரசிகர் மன்றம்' உதயமானது. இச்சங்களின் தலைவர் எம்.பி.பாலன் கூறுகையில், ""பின்னணி பாடருக்கு முதல்முதலில் ரசிகர் நற்பணி மன்றம் வைத்தது நாங்கள் தான். இம்மன்றங்கள் மூலம் ஆண்டு தோறும் ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவி வருகிறோம். டி.எம்.எஸ்ஸின் 91வது பிறந்த நாள் விழாவை மதுரையில் நடத்த இருந்தோம். அவர், உடல் நிலை சரியில்லாததால் முடியாமல் போனது,'' என்றார்.
சவுராஷ்டிரா பள்ளியில் "வாக்கிங்' : தனலட்சுமி, சீனிவாசனை அடுத்து டி.எம்.எஸ்., பிறந்தார். இவரது இளைய சகோதரர் கிருஷ்ணமூர்த்தி, உடல் நலம் சரியில்லாமல் உள்ளார். மதுரையில் டி.எம்.எஸ்., இருக்கும்போது சவுராஷ்டிரா ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நண்பர்களுடன் தினமும் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார். அவருக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி ஏற்பாட்டில், கருணாநிதி தலைமையில், 2008ல் மதுரையில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

சீனிவாசனின் பேரன் டி.எஸ்.ஆர்.மணிகண்டன், ""கற்பனை என்றாலும், கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன் என்ற தாத்தாவின் பாடலுக்கு ஈடு இணை எதுவும் இல்லை என தான் சொல்வேன். எங்கள் பரம்பரையில் மூத்த அவர் இறந்து விட்ட செய்தியை கேட்டதும் துவண்டு விட்டோம். எனினும், அவரது குரல் வாழ்ந்து கொண்டிருக்கிறது,'' என்றார்.

டி.எம்.எஸ்ஸின் கடைசி நிகழ்ச்சி ; டி.எம்.சவுந்திரராஜன் - சுமித்ரா தம்பதிக்கு டி.எம்.எஸ்.பால்ராஜ், டி.எம்.எஸ். செல்வக்குமார் என்ற மகன்களும், மல்லிகா என்ற மகளும் உள்ளனர். தந்தை உயிருடன் இருக்கும்போதே மகன் செந்தூரனுக்கு திருமணம் செய்ய வேண்டும், என பால்ராஜ் தீர்மானித்தார். இந்நிலையில் டி.எம்.எஸ்ஸூக்கு உடல் நலம் சரியில்லாமல் போனது. அவரை, மருத்துவமனையில் அனுமதித்தனர். சற்று உடல் நலம் தேறிய அவர் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார். சென்னையில் செந்தூரான், விஜயலட்சுமி திருமணம் மே 22ல் நடந்தது. அதை டி.எம்.எஸ்., முன்நின்று நடத்தி வைத்தது குறிப்பிடத்தக்கது.

டி.எம்.எஸ் - சங்கீத மும்மூர்த்திகள் ; "சங்கீத மும்மூர்த்திகள்' என தியாகராஜ சுவாமிகள், முத்துச்சாமி தீட்ஷிதர், ஷியாம சாஸ்திரிகள் ஆகியோர் அழைக்கப்படுவர். இவர்களின் பெயரின் ஆங்கில முதல்எழுத்து "டி' "எம்' "எஸ்' என வரும். ""சங்கீத மும்மூர்த்திகளின் பெயர்களை எனது இன்ஷியலில் பெற்றிருப்பது நான் செய்த பாக்கியம்,'' என டி.எம்.எஸ்., அடிக்கடி பெருமையாக கூறுவார்.

சவுராஷ்டிரா மொழியில் கடைசி பாடல் ; "வாலிபர்கள் சுற்றிய உலகம்' என்ற சினிமா 2005ல் வெளியானது. இப்படத்தில் டி.எம்.சவுந்திரராஜனும், பி.சுசிலாவும் இணைந்து பாடினர். அதன் பின் சினிமாவில் டி.எம்.எஸ்., பாடவில்லை. எனினும், சவுராஷ்டிரா மொழியில் "கெட்டி விடோ' (நிச்சயதார்த்தம்) எனும் தலைப்பில் ரசிகர் மன்றத் தலைவர் எம்.பி.பாலன் முயற்சியில் எடுக்கப்பட்ட படத்தில் டி.எம்.எஸ்., சவுராஷ்டிரா மொழியில் பாடினார். இதுவே, அவர் பாடிய கடைசிப்பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (85)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
srinivasan - Chennai,இந்தியா
29-மே-201306:18:36 IST Report Abuse
srinivasan பல தமிழ் மக்களை வாழ வைத்த தெய்வம் இன்று விண்ணுலகை விட்டு பறந்து விட்டது.
Rate this:
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
26-மே-201323:39:01 IST Report Abuse
Ayathuray Rajasingam காலத்தால அழியாத பாடல்களை பாடிய அன்னாரது ஆத்மா, சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம்.
Rate this:
Cancel
Arul kumar - Singapore,சிங்கப்பூர்
26-மே-201320:44:34 IST Report Abuse
Arul kumar அவரின் முருகப் பெருமான் பாடல்களே என்னை முருகனின் மீதான அன்பை அதிகரித்தது. முருகனை நினைக்கும் அனைத்து தருணத்திலும் அவரின் நினைவுகள் என்றும் நிலைத்திருக்கும்.உள்ளம் உருகுதையா மற்றும் கற்பனை என்றாலும் கற்சிலை என்றாலும் பாடலுக்கு நிகர் இல்லை. ஆன்மா முருகனின் அடி சேரட்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X