சென்னை : "தி.மு.க., தலைவர் கருணாநிதி, பொருளாளர் ஸ்டாலின், பேச்சாளர் காரல் மார்க்ஸ் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது. சென்னை, பாடியை சேர்ந்த ஐகோர்ட் வழக்கறிஞர் செல்வகுமார், கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார் மனு விவரம்: தி.மு.க., சொற்பொழிவாளர் கூட்டம், சென்னையில், கடந்த, 19ம் தேதி நடைபெற்றது. தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமையில் நடந்த கூட்டத்தில், பொருளாளர் ஸ்டாலின், கனிமொழி எம்.பி., மற்றும் முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில், தி.மு.க., மகளிர் தொண்டரணி செயலரும், பேச்சாளருமான காரல் மார்க்ஸ், "ஜெயலலிதா கலந்து கொள்ளும் கூட்டத்தில் மனித வெடிகுண்டாக மாறவும், நான் தயாராக இருக்கிறேன்' என, பயங்கரவாதத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார். இது தொடர்பாக, ஒரு இதழில், செய்தியும் வந்துள்ளது. எனவே, முதல்வரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும், பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலும், கொலை வெறியுடன் பேசிய காரல் மார்க்ஸ், கூட்டத்துக்கு தலைமை வகித்த கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
யார் இந்த காரல் மார்க்ஸ்? ; தஞ்சை, புதிய பேருந்து நிலையம் அருகே வசிக்கும் காரல் மார்க்ஸ், 51வது வார்டு கவுன்சிலராக இருந்தவர். இவரது மகன், செந்தில்குமார் அரசு துறையில், பி.ஆர்.ஓ.,வாக உள்ளார். மற்றொரு மகன், காரல் பாலாஜி, பழைய இரும்புக்கடை வைத்துள்ளார்.
சமீபத்தில், கனிமொழி, தஞ்சை வந்தபோது, மாவட்ட செயலரும், முன்னாள் மத்திய அமைச்சருமான பழனி மாணிக்கத்தின் படத்தை போடாமல், நோட்டீஸ் அடித்து ஒட்டினார்.
கடந்த உள்ளாட்சி தேர்தலில், தஞ்சை நகராட்சி தலைவர் பதவிக்கு, இவரது மருமகளுக்கு, "சீட்' கிடைத்தது. ஆனால், சொந்த கட்சியினரிடம் கூட இவருக்கு செல்வாக்கு இல்லாததால், தோல்வியே பரிசாக கிடைத்தது. தி.மு.க.,வின் கோட்டையாக இருந்த தஞ்சை நகராட்சி, முதன்முறையாக அ.தி.மு.க., வசமானது.