கொழும்பு : ஐ.நா.,மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை, வரும் ஆகஸ்ட் மாதம், இலங்கை பயணம் மேற்கொள்ள இருக்கிறார். தென் ஆப்ரிக்காவில் பிறந்தவர் நவநீதம் பிள்ளை. தமிழ் வம்சாவளியை சேர்ந்த இவர், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தின் முதல் பெண் தலைமை நீதிபதியாக இருந்தவர். நெல்சன் மண்டேலா சிறையில் இருந்த போது அவரை விடுவிக்க வாதாடியவர். தற்போது, ஐ.நா.,மனித உரிமை ஆணைய தலைவராக உள்ளார். இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படுவதாக, ஜெனிவாவில் உள்ள ஐ.நா.,மனித உரிமை ஆணையத்தில் இரண்டு முறை தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தற்போது இந்த ஆணைய கூட்டம் நேற்று முன்தினம் துவங்கியது. இந்த கூட்டத்தில் பங்கேற்க வந்துள்ள, இலங்கை பிரதிநிதி ரவிநாத ஆர்யசின்கா கூறியதாவது:
மேற்கத்திய நாடுகளில் தங்கியுள்ள விடுதலை புலிகளின் ஆதரவாளர்கள், இலங்கையில் மனித உரிமை மீறப்படுவதாக தவறான பிரசாரம்செய்து வருகின்றனர். எனவே, இலங்கைக்கு வந்து நிலைமையை பார்வையிடும் படி, நவநீதம் பிள்ளைக்கு, 2011ல் அழைப்பு விடுத்தோம்.
இந்த அழைப்பை அடுத்து, அவர், வரும் ஆகஸ்ட் மாதம், இலங்கை பயணம் மேற்கொள்ள உள்ளார். அப்போது அவர் இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி பணிகள் குறித்து மேற்பார்வையிடுவார். இவ்வாறு ஆர்ய சின்கா கூறினார்.