சென்னை: மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் தாயார் லட்சுமி, நேற்று அதிகாலையில், சென்னையில் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு, கவர்னர் ரோசய்யா, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
சிதம்பரத்தின் தாயார் லட்சுமி, 92. சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள வீட்டில், குடும்பத்தினருடன் வசித்து வந்தார். சில நாட்களாக, உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
மூன்று மகன்கள்:
நேற்று முன்தினம் அதிகாலையில் மரணம் அடைந்தார். ராஜா அண்ணாமலை செட்டியாரின் மகள் லட்சுமி. இவருக்கு லட்சுமணன், அண்ணாமலை, சிதம்பரம் ஆகிய, மூன்று மகன்கள், உமா நாராயணன் என்ற மகள் உண்டு. இவர்களில் அண்ணாமலை, ஏற்கனவே இறந்து விட்டார். தன் தாயார் மரணம் அடைந்த தகவல் அறிந்ததும், டில்லியில் இருந்த சிதம்பரம், விமானம் மூலம் சென்னைக்கு வந்தார். பட்டினப்பாக்கம் வீட்டில், வைக்கப்பட்டிருந்த தன் தாயாரின் உடலைக் கண்டு, சிதம்பரம் கண் கலங்கினார்; மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இரங்கல்:
தமிழக கவர்னர் ரோசய்யா நேரில் வந்து, லட்சுமி உடலுக்கு மலர் வளையம் வைத்து, அஞ்சலி செலுத்தினார். பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா ஆகியோர், சிதம்பரத்தின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, தங்களது இரங்கலை தெரிவித்துள்ளனர். புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, மத்திய அமைச்சர்கள் நாராயணசாமி, சிரஞ்சீவி, தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், தொழிலதிபர்கள் எம்.ஏ.எம்.ராமசாமி, ஏ.சி.முத்தையா, ஓய்வு பெற்ற நீதிபதிகள் கோகுலகிருஷ்ணன், ஏ.ஆர்.லட்சுமணன், அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், அவரது தாயார் நளினி சிதம்பரம் மற்றும் முன்னாள் துணைமேயர் கராத்தே தியாகராஜன், ரஞ்சன்குமார் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் நேற்று மாலை, மயிலாப்பூர் சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது. லட்சுமி தனது கண்களை தானம் செய்வதாக, ஏற்கனவே அறிவித்திருந்தார். அதன் படி, சங்கர நேத்ராலயா மருத்துவமனை டாக்டர்கள் வந்து, அவரது கண்களை எடுத்து சென்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE