உடுமலை:"காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும்,' என விவசாயிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.பி.ஏ.பி., தொகுப்பு அணைகளிலிருந்து, திருமூர்த்தி அணைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் காண்டூர் கால்வாய் 49 கி.மீ., நீளமுடையது. பராமரிப்பில்லாத காண்டூர் கால்வாயை புதுப்பிக்க உலக வங்கி நிதியுதவியில் 184.5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, கடந்த 2010, மார்ச் மாதம் பணிகள் துவங்கப்பட்டன.
ஆறு மாதம் பாசனத்திற்கு தண்ணீர், ஆறுமாதம் பணிகள் என்ற அடிப்படையில் நடக்கின்றன. கடந்தாண்டு மார்ச் மாதம் பணிகள் துவங்கி ஆகஸ்ட் வரை நடந்தது. செப்., மாதம் முதல் இந்தாண்டு மார்ச் 8 வரை பாசனத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டது.
தண்ணீர் நிறுத்தப்பட்டதையடுத்து கடந்த மார்ச் 15முதல் பணிகள் நடைபெற்று வருகிறது. இதை கண்காணிக்க 5 கி.மீ., க்கு தலா ஒரு உதவி செயற்பொறியாளர் மற்றும் நான்கு உதவிப்பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். காண்டூர் கால்வாய் புதுப்பிக்கும் பணிகளை ஆகஸ்ட் மாதம் 15க்குள் முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், காண்டூர் கால்வாய் பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில்,"காண்டூர் கால்வாய் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது மழைக்காலம் துவங்க உள்ளதால், கட்டுமான பணிகள் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. எனவே, அதிகாரிகள் கூடுதல் ஆட்களை நியமித்து பணிகளை விரைவுப்படுத்தி உரிய காலத்திற்குள் முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.
திருமூர்த்தி கோட்டம் செயற்பொறியாளர் சுப்பிரமணியம் கூறுகையில்,"" காண்டூர் கால்வாயில் திருமூர்த்தி கோட்டத்திற்குட்பட்ட 19 கி.மீ., வரை பணிகள் நடைபெறுகின்றன. கடந்தாண்டு வரை 5.1 கி.மீ.,க்கு முடிக்கப்பட்டது. இந்தாண்டு ஆறு கி.மீ., தூரம் வரை முடிக்க திட்டமிடப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. தற்போது, கால்வாயில் இருந்து கசிவு மூலம் தண்ணீர் விரயமாகுவதை தடுக்கும் வகையிலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பணிகளை உரிய காலத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது,'' என்றார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE