சென்னை: மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான, "ரேண்டம்' எண், நேற்று வெளியிடப்பட்டது. "கட் - ஆப்' மதிப்பெண், பிறந்த தேதி, உயிரியல் பாட மதிப்பெண் ஆகியவை ஒன்றாக வரும் விண்ணப்பதாரர்கள், அவர்களுக்கான, "ரேண்டம்' எண் அடிப்படையில், மருத்துவப் படிப்பு கலந்தாய்விற்கு அழைக்கப்படுவர். எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்விற்கு, இந்த ஆண்டு, மொத்தம், 29,561 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இவற்றில், விண்ணப்ப பரிசீலனையில், பல்வேறு காரணங்களுக்காக, 168 விண்ணப்பங்களை, மருத்துவக் கல்வி இயக்ககம் நிராகரித்தது. மீதமுள்ள, 29,393 விண்ணப்பதாரர்களுக்கான, "ரேண்டம்' எண்களை, சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணி, சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், நேற்று வெளியிட்டார். விண்ணப்பதாரர்கள், தங்கள், "ரேண்டம்' எண்ணை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் அறியலாம்.
அதன்பின், அவர் கூறியதாவது: பிளஸ் 2 மறுகூட்டல், மறுமதிப்பீடு முடிவுகள், வரும், 10ம் தேதி வெளியாகிறது. அதன்பின், மருத்துவப் படிப்பு விண்ணப்பதாரர்களுக்கான, மதிப்பெண் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு, மாணவர் சேர்க்கை கலந்தாய்வு துவங்கும். இதற்கான அறிவிப்பு, விரைவில் வெளியிடப்படும். டி.டி., மருத்துவக் கல்லூரி தொடர்பாக, இந்திய மருத்துவக் கவுன்சிலின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்ததும், அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு வீரமணி கூறினார். நிகழ்ச்சியில், சுகாதாரத் துறை சிறப்பு செயலர் செந்தில்குமார், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி முதல்வர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.