50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் : அறிவுப் பசியை தீர்க்க காத்திருக்கும் அற்புதம்| Dinamalar

தமிழ்நாடு

50 ஆயிரம் தலைப்புகளில் 5 லட்சம் புத்தகங்கள் : அறிவுப் பசியை தீர்க்க காத்திருக்கும் அற்புதம்

Added : ஜூன் 15, 2013

திருநெல்வேலி : நெல்லையில் முதன் முதலாக நேற்று ஆரம்பமான புத்தக திருவிழாவில் 50 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் அறிவுப் பசியை தீர்க்க காத்திருக்கின்றன.
5 லட்சம் புத்தகங்கள்:"நெல்லை புத்தக திருவிழா - 2013' பாளை வ.உ.சி மைதானத்தில் நேற்று ஆரம்பமானது. இத்திருவிழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 68 பதிப்பகத்தார் பங்கேற்றுள்ளனர். 100 ஸ்டால்களில் புத்தக கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது.இந்த புத்தக கண்காட்சியில் 50 ஆயிரம் தலைப்புகளில் சுமார் 5 லட்சம் புத்தகங்கள் பொதுமக்களின் அறிவுப் பசியை தணிக்க காத்திருக்கின்றன.அரிய வகை புத்தகங்கள்:இக்கண்காட்சியில் 120 ஆண்டுகள் பழமையான அபிதானசிந்தாமணி என்ற தமிழ்-தமிழ் அகராதி புத்தகம் உட்பட பழமையான, அரிய வகை புத்தகங்கள் பல உள்ளன. சிறுவர் இலக்கியங்கள், கதைகள், கட்டுரைகள், நவீன இலக்கியங்கள், இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் மதம் சார்ந்த பல்வேறு புத்தகங்கள் இடம் பெற்றுள்ளது. 3600 பக்கங்களுடன் 4 புத்தகங்களை கொண்ட இஸ்லாமிய கலைக்களஞ்சியம் புத்தகம் உள்ளது. பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், சிறுவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்களுக்கான போட்டித் தேர்வு புத்தகங்கள் உட்பட அனைத்து தரப்பினரையும் கவரும் வகையில் புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. தினமும் கலைநிகழ்ச்சிகள்:பொதுமக்களின் வசதிக்காக குடிநீர் வசதி, கழிப்பறை வசதியும் செய்யப்பட்டுள்ளது. உணவு பொருட்கள் விற்பனை கடைகளும் அமைக்கப்பட்டுள்ளன. தினமும் பல்வேறு கலைநிகழ்ச்சிகள், கருத்தரங்குகள், குறும் படங்களுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள், எழுத்தாளர்கள், பல்வேறு அறிஞர்கள் பங்கேற்கும் சிறப்பு கருத்தரங்குகளும் நடக்கிறது.தள்ளுபடி விலை சலுகை:
புத்தக திருவிழாவில் 10 சதவீத தள்ளுபடி விலையில் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. மொத்தமாக புத்தகங்களை வாங்கும் பள்ளி, கல்லூரி நிறுவனங்களுக்கு 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்க வசதியாக சிறப்பு வாகன வசதிகளுக்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.போட்டிகளுக்கு ஏற்பாடு: இத்திருவிழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று (15ம் தேதி) பேச்சுப் போட்டி, 17ம் தேதி கவிதை எழுதும் போட்டி, 18ம் தேதி வினாடி வினா போட்டி, 19ம் தேதி பாட்டுப் போட்டி, 20ம் தேதி ஓவியப் போட்டி, 21ம் தேதி ஆங்கில சொல்லுக்கு இணையான தமிழ் சொல் கூறுதல் போட்டி, 22ம் தேதி இரு நிமிடம் தமிழில் உரையாடுதல் போட்டி ஆகியவை நடக்கிறது. போட்டிகள் தினமும் மதியம் 2 மணிக்கு ஆரம்பமாகும். பதிவு செய்த முதல் 50 நபர்கள் மட்டுமே போட்டியில் பங்கேற்க அனுமதிக்கப்படுவர். போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று நபர்கள்/மூன்று குழுக்களுக்கு பரிசுக் கூப்பன் வழங்கப்படும்.ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம், நேஷனல் புக் டிரஸ்ட், நெல்லை தமிழ் வளர்ச்சி பண்பாட்டு மையம், தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் இணைந்து செய்துள்ளது. இக்கண்காட்சி வரும் 23ம் தேதி நிறைவு பெறுகிறது. சென்னையில் கடந்த ஜனவரி மாதம் நடந்த புத்தக திருவிழாவில் 700 பதிப்பகத்தார் பங்கேற்றனர். சுமார் 20 கோடி மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையானது. நெல்லையில் முதன் முதலாக நடக்கும் புத்தக திருவிழாவில் அறிவுப் பசியை தீர்க்க தயாராக ஏராளமான அரிய பொக்கிஷங்கள் காத்திருக்கின்றன. புத்தகங்கள் படிக்கும் ஆர்வத்தை வளர்க்க தென்னகத்தின் ஆக்ஸ்போர்டு பெருமையை நிலைநாட்ட புத்தக திருவிழாவில் சங்கமிப்போம்...

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X