இடிபாடுகளில் இருந்து விழித்தெழுந்த குஜராத்

Updated : ஜூன் 22, 2013 | Added : ஜூன் 17, 2013 | கருத்துகள் (4) | |
Advertisement
ஜனவரி 26, 2001. இந்தியாவின் 51-வது குடியரசு தினத்தன்று, இந்தியாவின் முக்கால் பாகத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நவீன இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான நிலநடுக்கம் இதுதான். ரிக்டர் அளவில் 7.7 என்று இருந்த இந்த நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக் கொடு ஏற்றுவதற்காகப் பள்ளிக்கூடம்
இடிபாடுகளில் இருந்து விழித்தெழுந்த குஜராத்

ஜனவரி 26, 2001. இந்தியாவின் 51-வது குடியரசு தினத்தன்று, இந்தியாவின் முக்கால் பாகத்தில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நவீன இந்தியாவில் ஏற்பட்ட மிகக் கொடூரமான நிலநடுக்கம் இதுதான். ரிக்டர் அளவில் 7.7 என்று இருந்த இந்த நிலநடுக்கம் குஜராத்தின் கட்ச் பகுதியை மையமாகக் கொண்டிருந்தது. தெருக்களில் ஊர்வலமாக தேசபக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டு தேசியக் கொடு ஏற்றுவதற்காகப் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்த சுமார் 250 மாணவர்கள் உட்பட சுமார் 20,000 பேர் இந்த நில நடுக்கத்தால் கொல்லப்பட்டனர்.
இதனைப் பார்த்தவர்களும் கேள்விப்பட்டவர்களும், ‘கட்ச் அவ்வளவுதான். இது மீண்டெழ ஐம்பது ஆண்டுகளோ அல்லது பல ஜென்மங்களோ ஆகும்’ என்று நினைத்தார்கள். ஆனால் நடந்ததைப் பாருங்கள். சில மாதங்களுக்கு உள்ளாகவே, மருத்துவமனைகள் சீரமைக்கப்பட்டு செயல்பாட்டுக்குத் திரும்பின. ஒரு வருடத்துக்கு உள்ளாகவே, சுமார் 42,678 வகுப்பறைகள் மாணவர்களுக்காகத் திரும்பவும் தயாராகிவிட்டன. இரண்டே ஆண்டுகளில் பாதிக்கப்பட்ட சுமார் ஒன்பது லட்சம் வீடுகள் சீரமைக்கப்பட்டன. இவற்றில் சுமார் இரண்டு லட்சம் வீடுகள் புதிதாகக் கட்டப்பட்டவை.


இரண்டே ஆண்டுகளில் சீரமைப்பு:

பெரும்பாலான கிராமங்கள் இரண்டே ஆண்டுக்கு உள்ளாகச் சீரமைக்கப்பட்டன. நிலநடுக்கம், கட்ச் பகுதி மக்களைக் கற்காலத்துக்கு எடுத்துச் சென்றது. ஆனால் மிகக் குறுகிய காலத்தில், வசதியான வீடுகள், அகன்ற சாலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், நவீனத் தொழிற்சாலைகள் என்று இப்போது அந்தப் பகுதி, குஜராத்தின் ஒரு முன்னேறிய பகுதியாக மாறிவிட்டது.
2004-ம் ஆண்டு சுனாமி தமிழகத்தைத் தாக்கியபோது, குஜராத் தங்களுடைய மறுசீரமைப்பு நிபுணத்துவத்தைத் தமிழகத்துக்கு வழங்கியது; தேவையான அறிவுரைகளை அளித்தது.
உலகின் பல பகுதிகளில் பேரிடர் அழிவுகள் ஏற்பட்டால், அவர்கள் மறு சீரமைப்புப் பணியை ஆரம்பிப்பதற்குமுன், குஜராத்துக்கு வருகை தருகிறார்கள். கட்ச் பகுதியில் எப்படி மறுசீரமைப்புப் பணிகள் திட்டமிடப்பட்டன, நடைமுறைப்படுத்தப்பட்டன போன்ற விவரங்களை அறிந்து செல்கிறார்கள். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஈரான் போன்ற நாடுகள், குஜராத்தின் படிப்பினைகளை அறிந்துகொண்டு தத்தம் நாடுகளில் மறுசீரமைப்புப் பணிகளைத் திட்டமிட்டுள்ளன.


10 ஆண்டுகளில் 300 புதிய நிறுவனங்கள்:

2001-ம் ஆண்டு வெறும் கற்குவியல் ஆகிப்போன கட்ச் பகுதியில், 10 ஆண்டுகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட கம்பெனிகள் புதிதாக நிறுவப்பட்டுள்ளன. இன்னும் பல கம்பெனிகள், அப்பகுதியில் தொழில் தொடர்பாகப் போட்டி போட்டு வருகின்றன.
இதுவரை அப்பகுதிக்கு மட்டும் சுமார் 45,000 கோடி ரூபாய்க்கு மேலாக முதலீடுகள் வந்துசேர்ந்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் சுமார் 1,10,000 புதிய வேலை வாய்ப்புகள் இங்கு உருவாகியுள்ளன.
பூகம்பம் ஏற்பட்ட உடனேயே இடிபாடுகளில் சிக்கியுள்ளோரை மீட்கும் பணி, வீடு இழந்தவர்களுக்குத் தாற்காலிக வீடுகளை அமைக்கும் பணி, நோய் தடுப்பு முயற்சிகள், உடலாலும் மனத்தாலும் காயம் பட்டோருக்கு மருத்துவம் பார்ப்பது போன்ற பல பணிகள் அசுர கதியில் நடந்தன.
பல்வேறு தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அரசுடன் சேர்ந்து தோளோடு தோளாக, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டன. இந்திய ராணுவமும் மீட்புப் பணியில் ஈடுபட்டது. தகவல் பரிமாற்றத்தைச் சரி செய்தல், கடற்படைக் கப்பல்களை தாற்காலிக மருத்துவமனைகள் ஆக்கி அவசர சிகிச்சைகளுக்கு உதவுதல் எனப் பல வகைகளில் பணியாற்றியது.


பன்னாட்டு உதவிக்குழுக்கள்:


ஜப்பான், அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலிருந்தும் உதவிக் குழுக்கள் வந்து, பல்வேறு வழிகாட்டுதல்களை அளித்தன. மருத்துவ, நிவாரண நிதிகள் பல்வேறு உலக நாடுகளிடமிருந்து வந்து குவிந்தன.
இதற்கிடையே, பல நாடுகளிலிருந்து வந்திருந்த நிலநடுக்கம் பற்றிய ஆராய்ச்சியாளர்கள் பல குழுக்களாக கட்ச் மாவட்டத்தை முற்றுகையிட்டு பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டனர்.
அவர்களின் பொதுவான கருத்து, பூகம்பத்தால் ஏற்பட்ட பாதிப்பைவிட, மனிதர்களின் அறிவின்மையால்தான் ஏராளமான உயிர்பலி ஏற்பட்டது என்பதாகும். முக்கியமாக, பூஜ் நகரில் தெருக்கள் மிகக் குறுகலாக இருந்தன. அது மாவட்டத்தின் தலைநகராக இருந்தபோதும், நகர் முழுதுமே பல்வேறு சந்து பொந்துகளாக அமைந்திருந்தன. பூகம்பம் ஏற்பட்டதும் கட்டடத்தை விட்டு வெளியேறியவர்களால்கூட உயிர் பிழைக்க முடியவில்லை. தெருவில் ஊர்வலமாகச் சென்ற பள்ளி மாணவர்கள் கொல்லப்பட்டதற்கும் குறுகிய தெருவும் பலவீனமான கட்டடங்களுமே காரணமாயின.
இடிந்துபோன பல கட்டடங்கள், கட்டிமுடித்து 5 முதல் 20 ஆண்டுகளே ஆகியிருந்தன. ஆனால், 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பல கட்டடங்கள் பூகம்பத்தைத் தாக்குபிடித்து சேதாரம் இன்றி நின்றன. தரமான கட்டுமானப் பொருட்களைப் பயன்படுத்தாதது, இயற்கைச் சீற்றங்களை மனத்தில் வைத்துக் கட்டட வடிவமைப்புகளை மேற்கொள்ளாதது போன்றவையே இந்தப் பேரழிவுக்குக் காரணமாகக் கூறப்பட்டன. மேலும், பூகம்பம் போன்ற பேரழிவுகளைச் சமாளிக்கப் போதுமான முன்னெச்சரிக்கையில் யாருமே இல்லை என்றும் கூறப்பட்டது.
இந்த நிலநடுக்கத்தில், மிகச்சில மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகளைத் தவிர பெரும்பாலானவை தப்பித்துக்கொண்டன.பாதிக்கப்பட்ட மக்கள், சிறப்பு முகாம்களிலும் தாற்காலிக உறைவிடங்களிலும் தங்க வைக்கப்பட்டனர்.


சேதார மதிப்பீடு:

உடைந்த கட்டடங்களின் சேதாரங்களை மதிப்பிட ஒவ்வொரு பகுதிக்கும் சிறு சிறு குழுக்கள் அனுப்பப்பட்டன. அந்தக் குழுக்களில், ஓர் அரசு எஞ்சினியரும், ஓர் அரசு அதிகாரியும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த ஒருவரும் இருப்பார்கள். அவர்கள் சேதங்களை மதிப்பிட்டு, படங்களை எடுத்துக்கொள்வார்கள். அந்தக் குழுவின் மதிப்பீட்டை வீட்டின் உரிமையாளர் ஒப்புக்கொள்ளாதபோது, அரசு இன்னுமொரு குழுவை அனுப்பும்.
அனைத்துத் தெருக்களும் விசாலமாக்கப்படவேண்டும் என்பது அடிப்படைத் தேவையாக இருந்தது. தெருவின் இரு பக்கத்திலும் இருக்கும் வீடுகளின் நில அளவைப் பொருத்து மக்களிடமிருந்து நிலங்கள் பெறப்பட்டன. முழுவதுமாக இடிந்துபோன கட்டடங்களின் இடங்களும் பயன்படுத்திக்கொள்ளப்பட்டன. நகரின் அனைத்துத் தெருக்களும் விரிவுபடுத்தப்பட்டன. மீண்டும் பூகம்பம் ஏற்பட்டால் அதிலிருந்து தப்பிக்க வீட்டை விட்டு வெளியில் வந்தால், இப்போது கட்டடம் இடிந்தாலும் தலையில் விழாது, தப்பித்துக்கொள்ளலாம்.
நகரின் எந்தப் பகுதியிலிருந்தும் பிரதான சாலைக்கு 500 மீட்டர் இருக்குமாறு, புதிய சாலைகளும், சுற்று வட்டச் சாலைகளும், ஆறு வழிச்சாலைகளும் அமைக்கப்பட்டன. இதுகூட பேரழிவிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடும்.
இந்த துர்ப்பாக்கியமான சந்தர்ப்பம், பல ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள அரசுக்கு உதவியது.
முன்பெல்லாம், குளம் போன்ற பல நீர் ஆதாரங்களுக்கு இடையே இணைப்புகள் இருந்ததால் அவை, குடிநீருக்கும் விவசாயத்துக்கும் சிறப்பாகப் பயன்பட்டன. ஆனால் அவை நாளடைவில் நலிந்துபோயின. நகரைச் சீரமைக்கும்போது, இவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டு நீராதாரங்களும் சீரமைக்கப்பட்டன.
வீடு இழந்தவர்களுக்கு அரசு செலவில், வீட்டின் உரிமையாளரே வீட்டைக் கட்டிக்கொள்ளும் சுதந்தரம் கொடுக்கப்பட்டது. இது ஒரு முன்னோடியான முயற்சியாகக் கருதப்படுகிறது. இது லஞ்சங்களை வெகுவாகக் களைய உதவியது.
நகரின் பல பகுதிகளில் பூங்காக்கள் ஏற்படுத்தப்பட்டன. உடைந்த பள்ளிக்கூடங்களைச் சரி செய்ததோடு புதிதாகக் கல்விக்கூடங்கள் உருவாக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்கள் புனரமைக்கப்பட்டன. முழுவதுமாக அழித்துபோனவை புதிதாகக் கட்டப்பட்டன.
புனரமைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய பூஜ் விமான நிலையம் 2003-ல் நரேந்திர மோடியால் திறக்கப்பட்டது.
ஆக, இனிமேல் இப்படி ஓர் இயற்கைப் பேரழிவு ஏற்பட்டால் எப்படி அதனை எதிர்கொள்வது, எப்படிச் சேதாரங்களைக் குறைப்பது என்ற வகையில்தான் மோடி அரசு செயல்பட்டுள்ளது.


மக்களைத் தயார்படுத்துதல்:

2001-ம் ஆண்டு ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குஜராத் அரசு மேற்கொண்டு வருகிறது. குஜராத் மாநில பேரிடர் மேலாண்மை முகமை என்ற அமைப்பு, 2001 கட்ச் பூகம்ப நிவாரணப் பணிகளுக்காக மட்டும் என்று ஆரம்பிக்கப்படவில்லை. அது ஓர் ஆரம்பம் மட்டுமே. அதனைத் தொடர்ந்து வேறு பல அமைப்புகளும் ஆரம்பிக்கப்பட்டு, நிவாரணப் பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டன.
பூகம்பம் ஏற்படுவதைக் கண்டுபிடிக்க, மாநிலம் முழுதும் சுமார் 40 இடங்களில் கருவிகள் வைக்கப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகிறது. பூகம்பம், புயல் காற்று, சுனாமி போன்ற இயற்கை நிகழ்வுகள் குறித்த விழிப்புணர்வைப் பள்ளி மாணவர்களிடையே ஏற்படுத்த, பள்ளிப் பாடத்திட்டத்தில் இவை குறித்த பாடங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து தொடர்ந்து மக்களுக்குக் கருத்தரங்குகள் மற்றும் கூட்டங்கள் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அரசு ஊழியர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படுகிறது. அதனால் அவர்கள் பேரழிவுகள் ஏற்படும்போது திறமையாகச் செயல்பட முடியும்.

( இதன் அடுத்த பகுதி 24/ 06/ 2013 அன்று வெளியாகும்)
இணையத்தில் புத்தகத்தை வாங்க: https://www.nhm.in/shop/978-81-8493-699-5.html


பதிப்பகத்தைத் தொடர்பு கொள்ள: http://www.kizhakku.in(நன்றி: கிழக்கு பதிப்பகம், சென்னை)

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mohan - chennai,இந்தியா
18-ஜூன்-201306:15:48 IST Report Abuse
mohan அப்பா சாமி, மற்ற மாநிலங்கள், நில நடுக்கத்தை பற்றி கவலை படாவிட்டாலும், அவர்கள் செய்யும், வேலை திறனை, பாருங்கல்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X