தாம்பரம்: மின்சார ரயில் ஓட்டுனரின் சூட்கேசை திருடி, விரைவு ரயிலில் திண்டுக்கல்லுக்கு சென்ற நபர், கண்காணிப்பு கேமரா மூலம் அடையாளம் காணப்பட்டு, கைது செய்யப்பட்டார். இருப்பினும், ரயிலின் சாவி கிடைக்காததால், ஓட்டுனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வியாசர்பாடி விபத்து : கடந்த 2009ம் ஆண்டு, ஏப்ரல் 29ம் தேதி, வியாசர்பாடி ரயில் நிலையத்தில், சாவியுடன் இருந்த மின்சார ரயிலை, மர்ம நபர் ஒருவர் இயக்கி, விபத்தை ஏற்படுத்தினார்.
அந்த விபத்தை ஏற்படுத்திய நபர் யார் என்பது, இதுவரை தெரியவில்லை. அந்த சம்பவத்திற்கு பிறகு, மின்சார ரயிலின் சாவி, ஓட்டுனர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. அந்த சம்பவம் நடந்த வரை, ரயிலிலேயே சாவி வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. ரயில் ஓட்டுனர்கள் பணிக்கு செல்லும்போது, "லைன் பாக்ஸ் சூட்கேஸ்' என்ற பெட்டியை எடுத்து செல்வர். அந்த பெட்டியில், மின்சார ரயிலின் சாவி, ரயிலை இயக்குவதற்கான சான்று, சட்ட விதிகள் அடங்கிய சான்று ஆகியவை இருக்கும். பணி முடிந்தவுடன், அந்த பெட்டியை ஓட்டுனர் நிலைய மேலாளர் அறையில் வைத்துவிட்டு செல்வார். பின், மீண்டும் பணிக்கு வரும்போது எடுத்து செல்வர்.
வியாசர்பாடி போன்று, மீண்டும் ஒரு விபத்து ஏற்படாமல் இருக்க, "லைன் பாக்ஸ் சூட்கேஸ்' வைக்கப்படும் இடத்திற்கு தேவையான பாதுகாப்பு வேண்டும் என, மின்சார ரயில் ஓட்டுனர்கள் கோரிக்கை வைத்தனர். ஆனால், அதிகாரிகள் இதுவரை அதை கண்டுகொள்ளவில்லை.
சூட்கேஸ் மாயம் : கிழக்கு தாம்பரம், ரயில்வே குடியிருப்பை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி, 47; சீனியர் மோட்டார் மேன். கடந்த 16ம் தேதி, பணியை முடித்துவிட்டு "லைன் பாக்ஸ் சூட்கேசை', 1-2 நடைமேடையில் உள்ள நிலைய மேலாளர் அறையில் வைத்துவிட்டு சென்றார். மறுநாள் காலை வந்து பார்த்தபோது, சூட்கேஸ் மாயமாகியிருந்தது. இதையடுத்து, தாம்பரம் ரயில்வே போலீசில் புகார் கொடுத்தார். ஆய்வாளர் பிரபாகர், ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவை சோதனை செய்தார். மூன்று மணி நேர சோதனைக்கு பிறகு, சூட்கேசை, ஒருவர் தோளில் வைத்து கொண்டு நடந்து சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
பின், அந்த நபர், வைகை விரைவு ரயில் அருகே நின்றிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபர், வைகை விரைவு ரயிலில் சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில், அனைத்து ரயில்வே காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்லில் சிக்கினார் : இதற்கிடையில், திண்டுக்கல்லில், ரயில்வே போலீசார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில், "லைன் பாக்ஸ் சூட்கேசை' திருடியது அந்த நபர் தான் என்பது தெரியவந்தது. இதையடுத்து, தாம்பரம் ரயில்வே போலீசார் திண்டுக்கல் விரைந்து, அந்த நபரை கைது செய்தனர். விசாரணையில், அந்த நபர், மேற்கு தாம்பரம், கடப்பேரி, நேரு நகரை சேர்ந்த ரமேஷ், 45; என்பதும், குடிபோதையில் சூட்கேசை திருடி சென்றதும் தெரியவந்தது.
சாவி எங்கே? : இருப்பினும், சூட்கேசில் இருந்த சான்றிதழ்கள் மட்டுமே கிடைத்தன. சூட்கேஸ், மின்சார ரயிலின் சாவி, விபத்தை தடுக்க பயன்படுத்தப்படும் 10 டெட்டனேட்டர்கள் ஆகியவை கிடைக்கவில்லை. அவற்றை எங்கு மறைத்து வைத்துள்ளார் என்பதும் தெரியவில்லை. இது குறித்து, ரயில்வே போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சார ரயிலின் சாவி கிடைக்காதது, ரயில் ஓட்டுனர்களின் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
கண்டுகொள்ளவில்லை : இதுகுறித்து ரயில் ஓட்டுனர்கள் கூறியதாவது; ஒரு சாவியை வைத்து, அனைத்து மின்சார ரயில்களையும் இயக்க முடியும். தற்போது, சாவி கிடைக்காதது பீதியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த சாவி, சமூக விரோதிகளின் கையில் கிடைத்தால், பெரும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. "லைன் பாக்ஸ் சூட்கேஸ்' வைக்கப்படும் இடத்திற்கு தேவையான பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என்று, நாங்கள் பல ஆண்டுகளாக கூறி வருகிறோம். அதை ரயில்வே நிர்வாகம், கண்டுகொள்ளாமல் இருந்தது தான், இந்த சம்பவத்திற்கு காரணம். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE