கரூர்: ""தூங்கும்போது கூட, செல்ல வேண்டிய இலக்குகளை நினைத்துக் கொண்டிருக்க வேண்டும்,'' என, எவரெஸ்ட் சிகரம் ஏறிய, மாற்றுத்திறனாளி அருணிமா சின்ஹா பேசினார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் அருணிமா சின்ஹா, 26. இவர், 2011 ஏப்ரலில், பரேலி என்ற இடத்தில், நள்ளிரவில், திருட்டு கும்பலால், ஓடும் ரயிலில் இருந்து தள்ளி விடப்பட்டார். இதில், இடது காலை இழந்தார். சிகிச்சைக்கு பின், செயற்கை கால் பொருத்தி, மலையேற பயிற்சி எடுத்தார். கடந்த மே, 21ம் தேதி, எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி, சாதனை படைத்தார்.
கரூர் அருகே, தனியார் பள்ளி விழாவில் பங்கேற்ற அவர், பேசியதாவது: ரயிலில் சென்றபோது, நடந்த சம்பவத்தை நினைத்து, வீட்டில் நான் முடங்கி விடவில்லை. வாலிபால் வீராங்கனையான எனக்கு, அடுத்து என்ன செய்ய முடியும் என்ற சிந்தனை தான், ஓடியது. எவரெஸ்ட் சிகரத்தில் ஏற வேண்டும் என, முடிவு செய்தேன். செயற்கை காலுடன், எவரெஸ்ட் சிகரத்தில் ஏறிவிட முடியுமா என்ற சந்தேகம், என்னைச் சுற்றி இருந்தவர்களுக்கு இருந்தது; எனக்கு இல்லை. ஆறு மாதம், தொடர்ந்து கடுமையான பயிற்சி மேற்கொண்டேன். தொடர்ந்து எவரெஸ்ட் சிகரத்தில், ஏற முயன்றேன்.
அப்போது, இரண்டு முறை, செயற்கை கால் கழன்று விழுந்தது. ஆனால், விடா முயற்சியுடன், சிகரத்தை அடைந்தேன். அப்போது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அதுவரை, நான் பட்ட கஷ்டம் எல்லாம் மறைந்துவிட்டது. வாழ்க்கையில், ஒரு இலக்கை மனதில் வைத்து, உழைக்க வேண்டும். தூங்கும்போது கூட, இலக்கை எப்படி அடைவது என்ற சிந்தனையுடன் இருக்க வேண்டும்; தொடர்ந்து முயற்சி செய்தால், உயர்ந்த நிலையை அடைய முடியும். இவ்வாறு, அவர் பேசினார்.