காத்மாண்டு: இந்திய தூதரக அதிகாரி எழுதிய கவிதையை, புவி கீதமாக அறிவிக்க, "யுனெஸ்கோ' அமைப்பு பரிசீலித்து வருகிறது. நேபாள தலைநகர், காத்மாண்டுவில் உள்ள இந்திய தூதரகத்தில், செயலராக இருப்பவர் அபய் குமார். இவர் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். பூமி குறித்து, சமீபத்தில் இவர், கவிதை எழுதியிருந்தார். இந்த கவிதை வெளியீட்டு விழா, காத்மாண்டுவில், நேற்று முன்தினம் நடந்தது.
இவ்விழாவில் பங்கேற்ற, யுனெஸ்கோ அமைப்பின் நேபாள பிரதிநிதி அலெக்ஸ் பிலாத்தி குறிப்பிடுகையில், ""ஒவ்வொரு நாட்டுக்கும் தேசிய கீதம் இருப்பது போல, பூமிக்கு என, பொதுவான ஒரு கீதத்தை அறிவிக்க உள்ளோம். இதற்கு அபய் குமார் எழுதிய கவிதையை பரிசீலிக்க உள்ளோம்,'' என்றார். கவிஞர் அபய் குமார் கூறுகையில், ""நீல நிற பூமி, எனக்கு அளப்பரிய அமைதியை அளிக்கிறது. இதற்கு நன்றி கடனாக, இந்த கவிதையை, பூமித் தாய்க்கு சமர்பிக்க நினைத்தேன். எவ்வளவு தான் வேற்றுமைகள் இருந்தாலும், அனைத்து உயிர்களுக்கும் பொதுவான வீடாக, பூமி உள்ளது. இந்த கருத்து தான், இந்த கவிதையில் அடங்கியுள்ளது,'' என்றார். அபய்குமார் எழுதிய பாடலுக்கு, நேபாள இசையமைப்பாளர்கள், சபன் மற்றும் ஷிரேயா சோடாங் ஆகியோர், இசையமைத்துள்ளனர்.
"சார்க்' நாடுகளின், இலக்கிய விருதை பெற்றவர், அபய் குமார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE