புத்தர் தியான மண்டபம் கலெக்டர் இன்று திறப்பு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புத்தர் தியான மண்டபம் கலெக்டர் இன்று திறப்பு

Added : ஜூன் 28, 2013
Share

ஆத்தூர்: ஆத்தூர் அருகே, தியாகனூர் கிராமத்தில், தனியார் நிறுவன பங்களிப்புடன், பீஹார் மாநிலம், ராஜ்கீர் தியான மண்டபத்துக்கு இணையாக அமைக்கப்பட்ட புத்தர் தியான மண்படத்தை, இன்று, (28ம் தேதி), மாவட்ட கலெக்டர் திறந்து வைக்கிறார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே, தியாகனூர் கிராமத்தில், இருவேறு இடங்களில், தலா பத்து அடி உயரம் கொண்ட புத்தர் சிலைகள் உள்ளது. அதில், பஸ் ஸ்டாப் அருகில் உள்ள, புத்தர் சிலைக்கு தனி கோவிலும், மற்றொரு புத்தர் சிலை கேட்பாரற்றும் கிடந்தது.
இதில், விவசாய நிலத்தில், கேட்பாரற்று கிடந்த ஐந்தாம் நூற்றாண்டை சேர்ந்த புத்தர் சிலைக்கு, தனி தியான மண்டபம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள், கோரிக்கை விடுத்தனர். 2012ல், சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம் தலைமையில், சுற்றுலாத் துறை அதிகாரிகள், நேரில் ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, மெட்ராஸ் சிமென்ட் - வாழப்பாடி, சிட்டி யூனியன் பாங்க், எஸ்.கே., கார்ஸ், ஜே.எஸ்.டபள்யூ., ஸ்டீல் கம்பெனி ஆகிய தனியார் நிறுவனங்கள் சார்பில், "புத்த தியான பீடம்' அமைக்க முன்வந்தனர்.
கடந்த, 2012 அக்டோபர், 10ம் தேதி, கேட்பாரற்று கிடந்த புத்தர் சிலை பகுதியில், தியான பீடம் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டது. 3,000 சதுர அடி பரப்பளவில், ராஜ்கீர், சாஞ்சி போன்ற இடங்களில் உள்ள, புத்த தியான பீடம் வடிவமைப்பில், தியாகனூர் கிராமத்தில், புத்த தியான பீடம் கட்டுமான பணி துவங்கப்பட்டது.
கடந்த, மே, 25ம் தேதி, தியான பீடத்தில், புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. புத்தர் தியான பீடம் மற்றும் ஆறகளூர் கால பைரவர் கோவில் அமைந்துள்ளதால், இப்பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்ற, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
இன்று, காலை, 7.30 மணியளவில், தியாகனூர் கிராமத்தில், 50 லட்சம் ரூபாயில் அமைக்கப்பட்ட புத்தர் தியான மண்டபத்தை, சேலம் மாவட்ட கலெக்டர் மகரபூஷணம், திறந்து வைக்கிறார்.
விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வராஜ், எஸ்.கே., கார்ஸ் நிறுவன சேர்மன் கிருஷ்ணமூர்த்தி, ராம்கோ சிமென்ட்ஸ், ஜிண்டால் ஸ்டீல் நிறுவனம், சேலம் கே.எம்.பி., கிரானைட் நிர்வாக இயக்குனர் பாஷா, தியாகனூர் பஞ்சாயத்து தலைவர் பெரியசாமி உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X