சென்னை: தமிழகம் முழுவதும், பேரூராட்சிகளில், சாலைகளை மேம்படுத்த, தமிழ்நாடு நகர சாலை அடிப்படை வசதி திட்டத்தின் கீழ், 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில், 528 பேரூராட்சிகள் உள்ளன. இவற்றில், பழைய சாலைகளை புதுப்பிக்கவும், பழுதடைந்த சாலைகளை சீரமைக்கவும், புதிய சாலைகள் அமைக்கவும், 120 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளது. பேரூராட்சிகளில் உள்ள வருவாய், மக்கள் தொகை அடிப்படையில், நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியில், சாலை அமைக்கும் பணி மட்டுமின்றி, கால்வாய் சீரமைப்புப் பணியும் நடந்து வருகிறது. "இப்பணிகளை, ஆறு மாதங்களுக்குள் முடிக்க வேண்டும்' என, பேரூராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையில், பேரூராட்சி அதிகாரிகள், பணிகளை தேர்வு செய்து, டெண்டர் விடும் பணியை துவக்கி உள்ளனர்.
இதுகுறித்து, பேரூராட்சி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது: வருவாய் குறைவாக உள்ள பேரூராட்சிகளில், நீளமான சாலைகள் சீரமைக்கப்படாமல் உள்ளன. அவற்றை, தற்போது ஒதுக்கியுள்ள நிதியில், சீரமைக்கும்படி அறிவுறுத்தி உள்ளோம். சில இடங்களில், கால்வாய் சீரமைக்கும் பணியும், மேற்கொள்ளப்படுகிறது. உதாரணத்திற்கு, விழுப்புரம் மாவட்டம், வளவனூரில், ஒரு கால்வாய் ஆழம், ஒன்பது அடி. அந்தக் கால்வாயில், பக்கச் சுவர் எழுப்பி, அதன் மீது, சிலாப் போடும் பணி நடைபெறுகிறது. இப்பணி முடிந்ததும், அப்பகுதியில் வணிக வளாகம் கட்டப்பட உள்ளது. சாலைப் பணிகள், ஒவ்வொரு பேரூராட்சிக்கும் வேறுபடுகிறது. அனைத்து பணிகளையும், ஆறு மாதங்களுக்குள், முடிக்கும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.