தர்மபுரி: தற்கொலை செய்து கொண்ட இளவரசனின் உடல் தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், பிரேத பரிசோதனை நடந்தது. காதல் கலப்பு திருமணம் செய்து கொண்ட இளவரசன், நேற்று ரயில் முன் பாய்ந்து, தற்கொலை செய்து கொண்டார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்திருப்பதாக, அவரது உறவினர்கள் தொடர்ந்து கூறி வந்தனர். இந்நிலையில் திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு அளிக்க சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
காலை, 7 மணிக்கு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துவமனையில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய ஏற்பாடு நடந்தது. இதையொட்டி, கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம் தலைமையில், மருத்துவமனை வளாகத்திலும், இரு நுழைவு வாயில் பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் பிரேத பரிசோதனைக்கு சில நிபந்தனைகளை முன் வைத்தனர். சேலம், கோவை உள்ளிட்ட மருத்துவமனைகளில் இளவரசனின் உடல் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர்.
இதை போலீஸார் மற்றும் மருத்துவத்துறையினர் ஏற்க மறுத்ததோடு, சட்ட ரீதியான முறையில் பிரேத பரிசோதனை செய்ய ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என கேட்டு கொண்டனர். தங்கள் கோரிக்கை ஏற்கும் வரை, பிரேத பரிசோதனை செய்ய அனுமதிக்க மாட்டோம் என, இளவரசன் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக போலீஸ் மற்றும் பொது மக்களிடம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில பொது செயலாளர் சிந்தனைசெல்வன் பேச்சு வார்த்தை நடத்தினார். காலை, 9.30 மணிக்கு விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த இரண்டு நிர்வாகிகள் மற்றும் ஒரு வக்கீல் முன்னிலையில் பிரேத பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதற்கான ஏற்பாடு நடந்த நிலையில், திடீரென மீண்டும் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகள், தாங்கள் கூறும் இரண்டு டாக்டர்கள் முன்னிலையில் மட்டுமே பிரேத பரிசோதனை நடத்த வேண்டும் என, வலிறுத்தினர். மீண்டும் பிரேத பரிசோதனை நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தங்கள் கோரிக்கை குறித்து போலீஸாரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். காலை, 11 மணிக்கு கோவை ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து, பிரேத பரிசோதனை நடவடிக்கை குறித்து, டி.ஐ.ஜி., சஞ்சய்குமாரிடம் ஆலோனை நடத்தினார். பின்னர் இளவரசனின் உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளிடம், ஐ.ஜி., டேவிட்சன் ஆசிர்வாதம், இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்து முடிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
"எங்களுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி விட்டீர்கள், பேச்சை வார்த்தை நடக்கும் போது, எப்படி பிரேத பரிசோதனை செய்தீர்கள்' என விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். "இளவரசன் கொலையில், ரயிலில் அடிபட்டால், இன்ஜின் டிரைவர் ஏன் புகார் தெரிவிக்கவில்லை. வி.ஏ.ஓ., மூலம் புகார் தெரிவிக்க வேண்டிய அவசியம் என்ன? மாவட்டம் முழுவதும், 144 தடை உத்தரவை விலக்கி கொள்ள வேண்டும். இளவரசன் இரங்கல் கூட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாவளவன் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும். நாங்கள் கூறும் இரு டாக்டர்கள் முன்னிலையில், மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது தான் இளவரசன் உடலை எடுத்து செல்வோம்' என, கூறி இளவரசன் உடலை வாங்க உறவினர்கள் மறுத்தனர்.
காலை, 7 மணி முதல், 11 மணி வரை, நான்கு மணி நேரம் இளவரசன் உடல் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. நேற்று மதியம், 1 மணிக்கு மேலும் இளவரசன் உடலை வாங்க மறுத்ததால், அரசு மருத்துவமனை முன் பெரும் பதட்டமும், பரபரப்பும் இருந்தது.
* வீடியோவில் பதிவு: தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், இளவரசனின் உடலை டாக்டர்கள் தண்டர் ஷிப், சதீஸ்குமார், பிரவின்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ மூலம் பதிவு செய்யப்பட்டது.
இதற்கிடையில் சென்னை ஐகோர்ட்டில் திவ்யாவுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், திவ்யாவை கோர்ட்டுக்கு அழைத்து வரமுடியுமா? இது சாத்தியமா என்று கேட்டனர். பாதுகாப்பு பிரச்னை ஏற்படும் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து வரும் திங்கட்கிழமைக்கு வழக்கை நீதிபதிகள் ஒத்திவைத்தனர், இது வரை திவ்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும், மேலும் திவ்யா மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளாரா, அவருக்கு கவுன்சிலிங் எதுவும் நடத்த வேண்டுமா என்றும் திங்கட்கிழமை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.