ஊத்துக்கோட்டை: தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், ஊதியம், குடிநீர், முதலுதவி வழங்காததை கண்டித்து, எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தை பயனாளிகள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
எல்லாபுரம் ஒன்றியத்தில், காக்கவாக்கம், தண்டலம், தாராச்சி, ஆலப்பாக்கம், அத்தங்கிகாவனூர் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ், சாலையோர முட்செடிகளை வெட்டுதல் உள்ளிட்ட பணிகளை செய்து வருகின்றனர். இதற்கு கூலியாக, நபருக்கு 148 ரூபாய் வழங்க வேண்டும். ஆனால், 30 ரூபாய் முதல் 40 ரூபாய் வரை மட்டுமே வழங்கப்படுகிறது. இந்த பணமும், கடந்த மூன்று மாதங்களாக, பயனாளிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படவில்லை. மேலும், பணியிடத்தில், குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் செய்து தரப்படவில்லை.
இதுகுறித்து ஒன்றிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், ஆத்திரமடைந்த பயனாளிகள், எல்லாபுரம் ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர். தங்களது எதிர்ப்பை தெரிவிக்க, அங்கேயே சமையல் செய்து சாப்பிட்டனர். அவர்களிடம், வட்டார வளர்ச்சி அலுவலர் (ஊராட்சி) லதா பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, பயனாளிகளின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என, அவர் உறுதியளித்தார். இதையடுத்து, முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது.