சாகருக்கு கிடைத்த புது வாழ்வு

Updated : ஜூலை 06, 2013 | Added : ஜூலை 06, 2013 | கருத்துகள் (19)
Advertisement
சாகர்.நேப்பாள் நாட்டுக்காரர், எழுத, படிக்க, தெரியாத இளம் விவசாயி.பெற்றோர் மற்றும் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவருக்கு விவசாயம் கை கொடுக்காமல் போகவே வீட்டில் வறுமை சூழ்ந்தது, வெளியூர் போய் கைநிறைய சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்பவேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் ஒரு விரக்தியுடன் வீட்டைவிட்டு புறப்பட்டார்.வீட்டைவிட்டு
சாகருக்கு கிடைத்த புது வாழ்வு

சாகர்.
நேப்பாள் நாட்டுக்காரர், எழுத, படிக்க, தெரியாத இளம் விவசாயி.
பெற்றோர் மற்றும் மனைவியுடன் கூட்டுக் குடும்பமாய் வாழ்ந்தவருக்கு விவசாயம் கை கொடுக்காமல் போகவே வீட்டில் வறுமை சூழ்ந்தது, வெளியூர் போய் கைநிறைய சம்பாதித்துக் கொண்டு வீடு திரும்பவேண்டும் என்ற வைராக்கியம் காரணமாக யாரிடமும் சொல்லாமல், கொள்ளாமல் ஒரு விரக்தியுடன் வீட்டைவிட்டு புறப்பட்டார்.
வீட்டைவிட்டு கிளம்பிவிட்டாரே தவிர, எங்கு போவது என்ன செய்வது என்று தெரியவில்லை, கிடைத்த பஸ், ரயில் என்று பயணப்பட்டவர் கடைசியில் கையில் இருந்த காசெல்லாம் செலவான நிலையில், கந்தலான உடையுடனும், பசியுடனும் கோவை ரயில் நிலையம் வந்தடைந்தார்.
பசியும், தூக்கமின்மையும் அவரை மனம் பேதலிக்க செய்ய தனக்குதானே பேசியபடி பரிதாபமாக கிடந்தவரை மனிதாபிமானம் கொண்டோர் போலீசார் துணையுடன் கோவையில் உள்ள மாநகராட்சி மனநல காப்பகத்தில் அடையாளம் தெரியாத மனநோயாளி என்ற "அடையாளத்துடன்' கொண்டுபோய் சேர்த்தனர்.
இது நடந்து இரண்டு வருடமாகிவிட்டது. இந்த இரண்டு வருட இடைவெளியில் சாகர் முழுமையாக குணம் அடைந்ததுடன், கொஞ்சம், கொஞ்சமாய் தமிழ் பேசவும், பேசுவதை புரிந்து கொள்ளவும் கற்றுக்கொண்டார். அந்த காப்பகத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்வதும், காப்பகத்தின் கதவை திறந்து மூடுவதும்தான் சாகரின் பிரதான வேலையாகவும் போய்விட்டது.
இந்த நிலையில் கோவை ஈர நெஞ்சம் அமைப்பின் மகேந்திரன், அந்த காப்பகத்திற்கு ஆதரவற்ற மனநலம் குன்றியவர்களை அழைத்து வருவதையும், பின் அவர்கள் குணமானதும் உறவினர்களை அழைத்து ஒப்படைப்பதையும் பார்த்ததும் சாகருக்கு தன் குடும்ப நினைவுகள் வந்து வாட்டத் துவங்கியது.
தன்னையும் தனது குடும்பத்துடன் சேர்த்து வைக்குமாறு கேட்டார் என்பதை விட கெஞ்சினார் என்பதே பொருத்தமாக இருக்கும்.
சாகரை அவரது குடும்பத்தோடு சேர்க்க வேண்டும் என்றால் அவரது உறவினர்கள் யாராவது நேப்பாளில் இருந்து தகுந்த ஆதாரங்களுடன் வந்தால் அனுப்பி வைக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது.
உடனே சாகர் பற்றிய குறிப்புகளை படத்துடன் "முகநூலில்' வெளியிட அதனைப்பார்த்து ஒருவர் பின் ஓருவர் என்று பலரும் தங்களது முகநூலில் சாகரைப்பற்றி பகிர்ந்து கொண்டனர்.
இந்த நிலையில் திடீரென நேப்பாளில் இருந்து ஒரு போலீஸ் அதிகாரி பேசியதும் மகிழ்ச்சி ஏற்பட்டது, சாகரின் உறவினர்கள் பற்றிய தகவல் கிடைத்தது.
சாகருக்கு எங்கே தான் தனிமையில் இருந்தே செத்துப் போய்விடுவோமோ என்ற கவலை இருந்தது, அது சமீபகாலமாக அதிகரித்தும் வந்தது, அவர் வாட்ச்மேன் போல காப்பகத்தில் செயல்பட்டும் வந்தார், நினைத்திருந்தால் எப்போது வேண்டுமானாலும் காப்பகத்தைவிட்டு தப்பியோடியிருக்க முடியும், ஆனால் அப்படியொரு எண்ணமே இல்லாமல் எப்படியாவது முறைப்படி தன் ஊர் போகவேண்டும், உறவுகளை பார்க்கவேண்டும் என்றே எண்ணியிருந்தார்.
இந்த நிலையில் சாகரின் அண்ணன் போனில் பேசியதும் சாகருக்கு தான் ஊர் போய்விடுவோம் என்ற நம்பிக்கை மீண்டும் துளிர்த்தது, அதே நேரம் சோகத்திற்கும் உள்ளானார், காரணம் இந்த இடைவெளியில் சாகரின் அப்பா இவரது பிரிவின் காரணமாக இறந்து போனாராம். இரண்டாவதாக இவர் இனி வரமாட்டார் என எண்ணி இவரது மனைவிக்கு மறுமணம் செய்து வைக்கும் ஏற்பாடும் நடந்து கொண்டிருந்ததாம்.
இதன் காரணமாக நேப்பாள் செல்லும் நாளை ஒவ்வொரு விநாடியும் எதிர்பார்த்தார்.
சாகர் நேபாள் போகவேண்டும் என்பதில் சாகருக்கு இணையாக துடித்தவர் "ஈரநெஞ்சம்' மகேந்திரன்தான், காரணம் ஒவ்வொரு முறை காப்பகத்திற்கு போகும் போதும், வரும்போதும் சாகரின் கண்களில் தெரியும் ஏக்கத்திற்கு நல்ல பதில் சொல்ல வேண்டும் என்பதற்காக தனது தூக்கத்தையும் துறந்தார்.
இவரது முயற்சி வீண் போகவில்லை, அந்த ஒரு நாளும் வந்தது. சாகரின் அண்ணன் உரிய ஆதாரங்களுடன் காப்பகத்தில் நுழைந்ததும், சாகர் ஒடிப்போய் கட்டிப் பிடித்துக் கொள்ள, அண்ணனோ தம்பியை கட்டிப்பிடித்து அழ வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத உணர்வுகளின் பகிர்வு அங்கே நிகழ்ந்தது.
கடைசியில் தான் விரும்பியபடி தன் சொந்த மண்ணிற்கு போகப்போகிறோம் என்றதும் மகேந்திரனை கட்டிப்பிடித்து சாகர் முத்தமழை பொழிந்துவிட்டார்.
அடுத்த அடுத்த நிகழ்வுகள் சுபமாக நடந்தேற சாகர் தன் சகோதரருடன் பிரியாவிடை பெற்று தன் சொந்தமண்ணிற்கு சென்று தன் சொந்தங்களுடன் சேர்ந்துவிட்டார்.
காசு, பணத்தை விட சொந்தம் பந்தமே மேல் என்பதை சாகர் இப்போது நன்கு புரிந்து கொண்டார்.
இதை புரிந்து கொள்ளாத ஆயிரக்கணக்கான சாகர்கள் இன்னமும் நம்மிடமே இருக்கின்றனர்தானே.

- எல்.முருகராஜ்

Advertisement


வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
annadurai - musct,ஓமன்
13-ஜூலை-201314:03:33 IST Report Abuse
annadurai பணம் என்னடா பணம்
Rate this:
Cancel
annadurai - musct,ஓமன்
13-ஜூலை-201313:45:27 IST Report Abuse
annadurai விட்டு விடுங்கள் சநதோஷம் பொங்கடடும் '
Rate this:
Cancel
Ma. PARAIYARAIVON - Thoothukudi,இந்தியா
13-ஜூலை-201311:39:42 IST Report Abuse
Ma. PARAIYARAIVON நல்ல வேலையாக சாகரின் மனைவிக்கு இரண்டாவதாக மணம்முடிக்கும் முன்பாக அவரது அண்ணன் வந்து அழைத்து போய்விட்டார். சற்று தாமதம் ஆகியிருந்தாலும் நிலைமை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்துப்பார்க்கவே முடியவில்லை - நெஞ்சு பதறுகிறது. கடவுள் ஒவ்வொருவருக்கும் நேரடியாக காட்சி கொடுக்க மாட்டார். சாகருக்கு மகேந்திரன் ரூபத்தில் காட்சி கொடுத்தது போல் மற்றவர்களுக்கும் யாரோ ஒருவர் ரூபத்தில் காட்சி கொடுப்பார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X